மாட்டுச்சாணத்தில் இருந்து 'காரில் பயன்படுத்தும் சிஎன்ஜி' எப்படி சாத்தியம்? குஜராத்தில் 2 ஆலைகளுக்கு மோதி அடிக்கல்

பட மூலாதாரம், Banas Dairy
- எழுதியவர், கோபால் கடேஷியா
- பதவி, பிபிசி பத்திரிகையாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள ராதன்பூர் தாலுகா மற்றும் வாவ்-தாராத் மாவட்டத்தில் உள்ள தாராத் தாலுகா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பனாஸ் டெய்ரியின் இரண்டு புதிய பயோ-சிஎன்ஜி ஆலைகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் அடிக்கல் நாட்டினார்.
இதன் மூலம் பால் பண்ணையின் எரிபொருள் உற்பத்தித் திறன் கணிசமாக அதிகரிக்கும்.
பசு மற்றும் எருமைச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளான பயோ-சிஎன்ஜி மூலம் கார்கள் மற்றும் லாரிகள் போன்ற வாகனங்களை இயக்குவதன் மூலம், பனாஸ் டெய்ரி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன் பொருளாதார ரீதியாகவும் வருவாய் ஈட்டி வருகிறது.
அக்டோபர் 30ஆம் தேதி, ராதன்பூர் மற்றும் தாராத் பகுதிகளில் அமைக்கப்படவுள்ள பனாஸ் டெய்ரியின் இரண்டு புதிய பயோ-சிஎன்ஜி ஆலைகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.
ராதன்பூரில் அமையவுள்ள ஆலையில் தினமும் 1,350 கிலோ பயோ-சிஎன்ஜி உற்பத்தி செய்ய முடியும். அதேவேளையில், தாராத் ஆலையில் தினமும் 1,800 கிலோ பயோ-சிஎன்ஜி உற்பத்தி செய்யும் திறன் இருக்கும்.
இந்த இரண்டு ஆலைகளும் சுமார் ஓராண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை செயல்படத் தொடங்கியதும், பனாஸ் டெய்ரியின் மொத்த தினசரி பயோ-சிஎன்ஜி உற்பத்தித் திறன் 9,300 கிலோவாக, அதாவது 9.30 டன்னாக அதிகரிக்கும்.

பட மூலாதாரம், Banas Dairy
குறிப்பிடத்தக்க வகையில், பசு மற்றும் எருமைச் சாணத்திலிருந்து இந்த பயோ-சிஎன்ஜி தயாரிக்கப்படுவதுடன், கார்கள் மற்றும் லாரிகள் போன்ற வாகனங்களையும் இயக்க முடியும்.
உண்மையில், பனாஸ் டெய்ரி 2020 பிப்ரவரி மாதம் முதல் பசு மற்றும் எருமைச் சாணத்திலிருந்து பயோ-சிஎன்ஜி தயாரித்து வருகிறது. கார்கள், பிக்கப் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு இதை விற்பனை செய்து நல்ல லாபத்தையும் ஈட்டி வருகிறது.
உலக வங்கி அறிக்கையின்படி, உலகிலேயே அதிக விளைநிலங்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
இந்திய அரசு செய்திக்குறிப்பின்படி, உலகிலேயே அதிக கால்நடைகளைக் கொண்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது. எனவே, பயோகேஸ் மற்றும் சிஎன்ஜி உற்பத்திக்கு இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன.
போக்குவரத்து மற்றும் மின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து அதிக அளவு ஆற்றலைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், இந்தத் திசையில் பல சவால்கள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பயோ சிஎன்ஜி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

பட மூலாதாரம், Banas Dairy Pictur
பயோகேஸ் என்பது சாண எரிவாயு என்றும் அழைக்கப்படுகிறது.
பசு மற்றும் எருமைச் சாணம், விவசாயப் பயிர்களின் எஞ்சிய கழிவுகள் ஆகியவை மக்கும்போது மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் சல்பைடு உள்ளிட்ட வாயுக்கள் வெளியேறுகின்றன.
ஆக்சிஜன் இல்லாத சூழலில் இந்தச் செயல்முறை மிக வேகமாக நடைபெறுகிறது. பயோகேஸ் ஆலைகளில், இந்தச் செயல்முறைக்காக 'காற்றில்லாச் செரிமானக் கலன்கள்' எனப்படும் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.
இந்தத் தொட்டிகளில் உற்பத்தியாகும் வாயுவில் எளிதில் தீப்பற்றக்கூடிய மீத்தேன் வாயு உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவில் இருந்து தயாரிக்கப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) 90 சதவீதத்துக்கும் அதிகமான மீத்தேன் உள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது, சாதாரண பயோகேஸில் 55 முதல் 60 சதவீதம் மட்டுமே மீத்தேன் உள்ளது.
இதனை எரிப்பதன் மூலம் உற்பத்தியாகும் ஆற்றலும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும். இதனால், வாகனங்களின் இயந்திரங்களுக்குத் தேவையான சக்தியைப் பெற முடியாது.
பயோகேஸை அதிக எரிதிறன் கொண்டதாகவும், அதிக ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றுவதற்காக, அதிலிருந்து கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் சல்பைடு, ஈரப்பதம் மற்றும் பிற மாசுகள் நீக்கப்படுகின்றன.
இதன் மூலம் மீத்தேன் அளவு 90 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் வகையில் வாயு சுத்திகரிக்கப்படுகிறது. இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட பயோகேஸ், சுத்திகரிக்கப்பட்ட இயற்கை எரிவாயுவுக்கு இணையான ஆற்றல் திறனைப் பெறுகிறது.
பயோ-சிஎன்ஜியில் வாகனங்கள் எவ்வாறு இயங்குகின்றன?

பட மூலாதாரம், Banas Dairy
டீசல் மற்றும் பெட்ரோல் போன்ற பாரம்பரிய எரிபொருட்களின் முக்கிய நன்மை என்னவென்றால், பூமியின் பெரும்பாலான பகுதிகளில் சாதாரண வெப்பநிலையில் அவை திரவ நிலையில் இருக்கின்றன. வாயுவுடன் ஒப்பிடும்போது இவற்றைச் சேமிப்பதற்கு குறைந்த இடமே தேவைப்படுகிறது.
மீத்தேன் வாயுவை மைனஸ் 162 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குக் குளிர்விப்பதன் மூலம் திரவமாக்க முடியும். ஆனால், இத்தகைய குறைந்த வெப்பநிலையை அடைவதற்குச் சிக்கலான கிரையோஜெனிக் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் பெரும்பாலும் விண்வெளி ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமான வாகனங்களில் இதன் பயன்பாடு அதிகமாக இல்லை.
இதற்கு மாற்றாக, அதிக அழுத்தத்தில் மீத்தேன் வாயு சிலிண்டர்களில் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் குறைந்த இடத்தில் அதிக அளவிலான வாயுவைச் சேமிக்க முடிகிறது.
ஒரு பார் என்பது ஒரு சதுர அங்குலப் பரப்பில் சுமார் ஏழரை கிலோகிராம் அழுத்தத்துக்குச் சமமாகும். குழாய்கள் மூலம் வீடுகளின் சமையலறைகளுக்குச் சென்றடையும் இயற்கை எரிவாயுவின் அழுத்தம் (NGP) தோராயமாக 0.021 பார் ஆகும்.
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பியூட்டேன் மற்றும் புரோப்பேன் வாயுக்களின் கலவையான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (எல்பிஜி), சுமார் 20 பார் அழுத்தத்தில் சிலிண்டர்களில் நிரப்பப்படுகிறது.
இந்தியாவில், இயற்கை எரிவாயு பொதுவாக 200 முதல் 250 பார் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு, சிஎன்ஜி வடிவில் வாகனங்களின் சிலிண்டர்களில் நிரப்பப்படுகிறது.
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் இயந்திரங்களில் சிஎன்ஜியை எரிபொருளாகப் பயன்படுத்துவதால், அவற்றின் செயல்திறன் மற்றும் ஆயுட்காலத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பயோ-சிஎன்ஜி மூலம் பனாஸ் பால் பண்ணை எவ்வளவு லாபம் ஈட்டுகிறது?

பட மூலாதாரம், Banas Dairy
பனாஸ் டெய்ரியின் இணையதளத்தில் (https://www.banasdairy.coop/) கிடைக்கும் தகவல்களின்படி, 46 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த நிறுவனத்துடன் இணைந்துள்ளனர்.
இந்தக் கால்நடை வளர்ப்போரிடம் சுமார் 30 லட்சம் பசுக்கள் மற்றும் எருமைகள் உள்ளதாகவும், இந்த விலங்குகள் ஒவ்வொன்றும் சராசரியாக நாளொன்றுக்கு 15 கிலோ சாணம் தருவதாகவும் பால் பண்ணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பனாஸ் டெய்ரி தனது முதல் பயோ-சிஎன்ஜி ஆலையை 2019 ஜூன் மாதம், டீசா அருகே உள்ள டாமா கிராமத்தில் அமைத்தது. பால் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயுடன், சாணம் மூலமாகவும் கால்நடை வளர்ப்போருக்கு வருமானம் கிடைக்கச் செய்வதும், தரமான உரத்தை வழங்குவதும் இதன் நோக்கமாக இருந்தது.
இந்த ஆலையில் தினமும் 40 மெட்ரிக் டன் (1 மெட்ரிக் டன் = 1,000 கிலோ) சாணத்தைப் பதப்படுத்தி, அதிலிருந்து சுமார் 800 கிலோ பயோ-சிஎன்ஜி தயாரிக்கும் திறன் உள்ளது.
இந்த ஆலையிலிருந்து 2020 ஆகஸ்ட் மாதம் முதல் பயோ-சிஎன்ஜி விற்பனையைத் தொடங்கியதாக பால் பண்ணை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
பனாஸ் டெய்ரியின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் துறையின் குழுத் தலைவர் விக்ரம் சௌத்ரி பிபிசியிடம் பேசுகையில், "பயோ-சிஎன்ஜிக்கு எனத் தனிப்பட்ட வாடிக்கையாளர் தளத்தை உருவாக்குவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, எங்கள் ஆலையில் தினமும் உற்பத்தியாகும் எரிவாயு முழுவதும் விற்பனையாகிவிடுகிறது.
தற்போது ஒரு கிலோ பயோ-சிஎன்ஜியை 90 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இது சந்தை விலையைவிட 5 ரூபாய் குறைவாகும். அரசு மானியம் கிடைப்பதால், இந்த விலையில் விற்பனை செய்ய முடிகிறது" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Banas Dairy
இந்த ஆலையின் மூலம் தற்போது பனாஸ் டெய்ரி லாபம் ஈட்டி வருவதாக விக்ரம் சௌத்ரி மேலும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பால் பண்ணை விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என்ற விலையில் சாணத்தை வாங்குகிறோம். விவசாயிகளின் கால்நடைக் கொட்டகைகளிலிருந்து எங்கள் ஆலைக்குச் சாணத்தைக் கொண்டுவருவதற்கான போக்குவரத்துச் செலவு ஒரு கிலோவுக்கு 35 முதல் 50 பைசா வரை ஆகிறது.
ஒரு டன் சாணத்திலிருந்து 18 கிலோ பயோ-சிஎன்ஜி, சுமார் 200 கிலோ உலர் உரம் மற்றும் சுமார் 800 கிலோ திரவ உரம் கிடைக்கிறது.
அந்த உரத்துடன் தேவையான ஊட்டச்சத்துகளைச் சேர்த்து, சராசரியாக ஒரு கிலோ மூன்று ரூபாய் என்ற விலையில் விவசாயிகளுக்கு உரமாக விற்பனை செய்கிறோம்.
எரிவாயு விற்பனை மூலம் ஆலையை இயக்குவதற்கான செலவு ஈடுசெய்யப்படுகிறது. எனவே, சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் உரத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் லாபமாகச் சேமிக்கப்படுகிறது" என்றார்.
விக்ரம் சௌத்ரி மேலும் கூறுகையில், "2025-26ஆம் ஆண்டில், டாமா ஆலையின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த மொத்த வருவாய் சுமார் ரூ.5.25 கோடி. அதேவேளையில், ஆலையை இயக்குவதற்கான மொத்தச் செலவு சுமார் ரூ.4.75 கோடி. இதன் மூலம் இந்த ஆலையில் பால் பண்ணைக்கு சுமார் ரூ.50 லட்சம் லாபம் கிடைத்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஆலையின் மொத்த வருவாயில் 75 சதவீதம் உர விற்பனை மூலமே கிடைத்தது" என்று தெரிவித்தார்.
டாமா ஆலையின் வெற்றியைத் தொடர்ந்து, லகானி தாலுகாவில் உள்ள அக்தாலா, வட்காம் தாலுகாவில் உள்ள பூக்லா மற்றும் தனேரா தாலுகாவில் உள்ள வின்ச்சிவாடி கிராமம் ஆகிய இடங்களில் பனாஸ் டெய்ரி புதிய பயோ-சிஎன்ஜி ஆலைகளை அமைத்துள்ளது.
இந்த ஆலைகள் ஒவ்வொன்றும் 100 டன் சாணத்தைச் செயலாக்கி, அதிலிருந்து 1,800 கிலோ அல்லது 1.8 டன் பயோ-சிஎன்ஜி உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்று விக்ரம் சௌத்ரி தெரிவித்தார்.
இந்த மூன்று ஆலைகளும் 2025 டிசம்பர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்தியாவில் எவ்வளவு பயோ சிஎன்ஜி உற்பத்தி செய்யப்படுகிறது?
இந்தியாவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 90 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதேபோல், இயற்கை எரிவாயுவுக்கும் இந்தியா இறக்குமதியையே சார்ந்துள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமை தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியா 4.63 கோடி டன் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தியது. இதில் சுமார் 52 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டதாகும்.
உலக பயோகாஸ் சங்கத்தின் அறிக்கைப் படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 40 கோடி முதல் 62 கோடி டன் வரை அழுத்தப்பட்ட பயோகேஸ் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இந்த உற்பத்தித் திறனில் சுமார் 30 சதவீதத்தை கால்நடைச் சாணத்திலிருந்து பெற முடியும்.
இந்த உற்பத்தித் திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்கும், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பைக் கருத்தில் கொள்வதற்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியாவில் 113 பயோ-சிஎன்ஜி ஆலைகள் செயல்பட்டு வருவதாகவும், அவை தினமும் மொத்தம் 775 டன் பயோ-சிஎன்ஜியை உற்பத்தி செய்வதாகவும் இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு ரூ.23,731 கோடி மதிப்பிலான 'கோவர்தன்' திட்டத்தை அறிவித்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் பயோகேஸ் உற்பத்தியை 10 மடங்கு அதிகரிப்பதை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதுதவிர, 2030ஆம் ஆண்டுக்குள் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜியில் 5 சதவீத பயோ-சிஎன்ஜியைக் கலக்கும் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயோ சிஎன்ஜி உற்பத்தியில் உள்ள சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Banas Dairy
நிதி ஆயோக்கின் கீழ் செயல்படும் 'இந்தியா காலநிலை மற்றும் எரிசக்தி மாதிரியாக்க மன்றத்தின்' தலைவர் டாக்டர் கிரித் பரிக் கூறுகையில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற புதைபடிவ எரிசக்தி ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு இந்தியாவில் பயோகேஸ் ஒரு கவர்ச்சிகரமான மாற்றாகத் தெரிகிறது.
பிபிசியிடம் பேசிய டாக்டர் பரிக், "இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள் மிகவும் லட்சிய மிக்கவை. பிரச்னை என்னவென்றால், மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் தயாரித்தால் உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகள் ஏற்படலாம். கரும்பிலிருந்து எத்தனால் தயாரித்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏனெனில், கரும்புப் பயிருக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. இத்தகைய சூழலில் பயோகேஸ் ஒரு நல்ல மாற்றாகத் தெரிகிறது" என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "பயோகேஸ் உற்பத்திக்கு நாட்டில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதற்குத் தேவையான மூலப்பொருட்கள் நாடு முழுவதும் சிதறிக் கிடப்பதுதான் பிரச்னை. இந்தியாவில் பசுஞ்சாணத்திலிருந்து பயோகேஸ் தயாரிப்பதன் நன்மைகள் மற்றும் செலவுகள் குறித்து 1963ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) எனது முதுகலை ஆய்வுக் கட்டுரையை எழுதினேன். அந்த ஆய்வில், பயோகாஸ் உற்பத்திக்காக ஒரு குடும்பத்திடம் குறைந்தபட்சம் ஐந்து கால்நடைகள் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இன்றைய சூழலில் அனைவராலும் அவ்வளவு கால்நடைகளை வளர்க்க முடியாது. எனவே, சில கூட்டு ஆலைகள் அமைக்கப்பட்டால், ஒருவேளை வெற்றி பெற முடியும்" என்று கூறினார்.
இந்தத் துறையில் பனாஸ் டெய்ரி வெற்றிகரமான மாதிரியை உருவாக்கியுள்ளது.
ஆனால், பனாஸ் டெய்ரியின் மூத்த பொது மேலாளர் பிரவீன் படேல் பிபிசியிடம் கூறுகையில், "பயோகேஸ் ஆலையின் துணைப் பொருளாகக் கிடைக்கும் திட மற்றும் திரவ உரங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படாவிட்டால், இதுபோன்ற ஆலையை நடத்துவது பொருளாதார ரீதியாகச் சாத்தியமானதாக இருக்காது. இரண்டாவதாக, உரங்களை நிர்வகிப்பதற்கும் நிலம் தேவைப்படுகிறது. சராசரியாக, ஓர் ஆலைக்கு 10 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
"தற்போதைய சூழலில் நிலத்தை கையகப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































