இஸ்ரேலில் புதிய அரசு அமைக்க அழைக்கப்பட்டுள்ள 'காடி ஐசென்கோட்' யார்? முழு பின்னணி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பெர்னாண்டோ டுவார்டே
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பை எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர் காடி ஐசென்கோட்டிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியான ஐசென்கோட், கடந்த முப்பது ஆண்டுகளில் பெரும்பாலான காலம் இஸ்ரேலை வழிநடத்திய பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு தற்போது எதிர்பாராத சவாலாக உருவெடுத்துள்ளார்.
ஐசென்கோட் அரசியலுக்குப் புதியவர். 2022ஆம் ஆண்டில்தான் அவர் முறையாக அரசியலில் நுழைந்தார்.
நேஷனல் யூனிட்டி கட்சி சார்பில் அவர் இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினரானார். பின்னர், அக்கட்சியுடன் ஏற்பட்ட கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி அதிலிருந்து விலகினார்.
கடந்த ஆண்டு, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து பிரிந்து, 'யஷார்' என்ற தனது சொந்த மையவாதக் கட்சியைத் தொடங்கினார். 'யஷார்' என்றால் 'நேர்மையான' அல்லது 'வெளிப்படையான' என்று பொருள்.
இதற்குப் பிறகு, தேர்தல் களத்தில் நெதன்யாகுவின் மிகப்பெரிய போட்டியாளராக ஐசென்கோட் உருவெடுத்தார்.
நெதன்யாகுவின் மிகப்பெரிய போட்டியாளர்

பட மூலாதாரம், Getty Images
இந்தத் தேர்தலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சியும் அதன் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர பழமைவாத யூதக் கூட்டணிக் கட்சிகளும் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 53 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
அதேவேளையில், ஐசென்கோட்டின் மையவாத யஷார் கட்சியும், அவரது கூட்டணியில் இடம்பெற்றிருந்த மற்ற மூன்று யூத எதிர்க்கட்சிகளும் இணைந்து 48 இடங்களைக் கைப்பற்றின.
சமீபத்திய ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் நெதன்யாகுவைத் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வருகிறார்.
2023 அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களை அவர் கையாண்ட விதமும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. நீதித்துறை அமைப்பில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர அவர் முன்வைத்த சர்ச்சைக்குரிய திட்டம் நாடு முழுவதும் பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது.
ஆனால், நெதன்யாகுவுக்கு எதிராகப் போட்டியிட ஐசென்கோட் முடிவெடுத்ததற்குப் பின்னால் தனிப்பட்ட சோகமும் உள்ளது.
மகனின் மரணம்
காடி ஐசென்கோட்டின் ஐந்து குழந்தைகளில் இளையவரான மாஸ்டர் சார்ஜென்ட் கால் ஐசன்கோட், 2023 டிசம்பரில் வடக்கு காஸாவில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டார்.
அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட இரண்டு இஸ்ரேலியர்களின் உடல்களைத் தேடும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.
தனது மகனின் உடைமைகள் இரண்டு பெட்டிகளில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றைத் தாம் இன்னும் பார்க்கவில்லை என்றும் காடி ஐசென்கோட் தெரிவித்துள்ளார்.
டெல் அவிவ் நகருக்கு வடக்கே உள்ள செழிப்பான கடலோர நகரமான ஹெர்ஸ்லியாவில் உள்ள அவரது வீட்டில் அந்தப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
"நான் இன்னும் அவற்றைத் திறக்கவில்லை. தொடர்ந்து அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறேன்" என்று 66 வயதான ஐசென்கோட், ஏப்ரல் மாதம் இஸ்ரேலின் அரசு வானொலியான கான் ரெஷெட் பெட்டிடம் தெரிவித்தார்.
காஸா போரில் அவரது மகனும் இரண்டு மருமகன்களும் உயிரிழந்தனர்.
இந்தத் தனிப்பட்ட இழப்பும், ஹமாஸ் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நெதன்யாகு அரசு தவறிவிட்டது என்ற எண்ணமும் அவரது அரசியல் லட்சியங்களை மேலும் வலுப்படுத்தின.
தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஐசென்கோட், "என்னால் காலத்தை பின்னோக்கி கொண்டு செல்ல முடியாது. கால் ஐசன்கோட் பெரும் விலை கொடுத்ததற்கு ஈடாக, அவனைத் தகுதியுள்ளவனாக மாற்ற என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்." என்று தெரிவித்தார்.
நெதன்யாகுவைப் பொறுப்பேற்க வைக்கும் நோக்கம்

பட மூலாதாரம், MENAHEM KAHANA/AFP via Getty Images
நெதன்யாகுவையும் அவரது அமைச்சரவையையும் பொறுப்புக்கூறச் செய்வது ஐசென்கோட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.
அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல்களுக்குப் பிறகு, தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், ஐசென்கோட்டும் மற்ற சில எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமர் நெதன்யாகுவின் போர்க்கால அமைச்சரவையில் இணைந்தனர்.
ஆனால், 2024 ஜூன் மாதம் அவர் போர்க்கால அமைச்சரவையிலிருந்து விலகினார்.
ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்பதற்கு நெதன்யாகு விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
"அவரது ஆட்சியின் கீழ்தான் பெண்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவர் வேண்டுமென்றே எடுக்கவில்லை" என்று ஐசென்கோட் தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலிடம் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டை நெதன்யாகு பலமுறை மறுத்துள்ளார்.
போர்க்கால அமைச்சரவையில் இருந்தபோது, காஸாவில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய ராணுவ நடவடிக்கைகளுக்கு ஐசென்கோட் எதிர்ப்புத் தெரிவித்ததாக நெதன்யாகு கூறுகிறார்.
ஐசென்கோட்டின் உத்தியைப் பின்பற்றுவது ஹமாஸைப் பலவீனப்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய நெதன்யாகு, "நாங்கள் காஸாவில் இருந்தபோது காடி ஐசென்கோட்டும் மற்றவர்களும் கூறியது எனக்கு நினைவிருக்கிறது" என்று தெரிவித்தார்.
"நாம் ஓர் ஒப்பந்தத்தைச் செய்து, பிணைக் கைதிகளை மீட்டு, காஸா முழுவதிலிருந்தும் வெளியேறிவிட வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.
தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தியின்படி, இந்த உத்தி பின்பற்றப்பட்டிருந்தால், "முழு ஹமாஸ் அமைப்பும், போரின்போது இஸ்ரேலால் கொல்லப்பட்ட அதன் மூத்த தலைவர்களும் இன்றும் உயிருடன் இருந்து, அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்" என்று நெதன்யாகு கூறினார்.
சமீபத்தில், யெநெட் நியூஸ் என்ற செய்தி இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், நெதன்யாகுவின் குற்றச்சாட்டை ஐசென்கோட் மறுத்தார்.
போர்க்கால அமைச்சரவைக் கூட்டங்களின் பதிவுகளையும், அந்தக் கூட்டங்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு விவரங்களையும் பொதுவெளியில் வெளியிடுமாறு பிரதமரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் 18 மாதங்களுக்குள் ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதாக ஐசென்கோட் உறுதியளித்தார்.
ஐசென்கோட்டின் முன்னுரிமைகள் என்ன?
இஸ்ரேலின் முன்னணி பத்திரிகையாளர்களில் ஒருவரான நடாவ் ஐயால், ஒரு கல்வியாளரும் கூட. அவர் ஐசென்கோட்டின் அரசியல் பயணத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்.
அந்தத் தனிப்பட்ட இழப்பு, ஐசென்கோட்டிற்கு "ஒரு நோக்கத்தையும் குறிக்கோளையும்" அளித்துள்ளது என்று அவர் கூறுகிறார்.
அந்த இலக்கு, தற்போதைய பிரதமரை பதவியிலிருந்து அகற்றுவதற்காக கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் போதுமான இடங்களை யஷார் கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்வது மட்டுமல்ல என்று ஐயால் தெரிவிக்கிறார்.
நெதன்யாகுவைப் போலவே, காஸாவின் எதிர்காலத்திற்கான எந்தவொரு திட்டத்திலும் ஹமாஸ் அமைப்பு இடம்பெறக் கூடாது என்று ஐசென்கோட்டும் நம்புகிறார்.
"ஹமாஸ் தொடங்கிய போரில்தான் அவரது மகன் ஹமாஸால் கொல்லப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்" என்று ஐயால் பிபிசியிடம் தெரிவித்தார்.
பாலத்தீன அரசை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இரு நாடுகள் தீர்வையும் ஐசென்கோட் ஆதரிக்கவில்லை.
இஸ்ரேலிய ஊடகங்களின்படி, ஆகஸ்ட் மாத இறுதியில், இந்த வாய்ப்பை இன்னும் நம்புபவர்கள் "மாயையில் வாழ்கிறார்கள்" என்று ஐசென்கோட் கூறியிருந்தார்.
இருப்பினும், பாலத்தீன அதிகார அமைப்புடனான இஸ்ரேலின் உறவுகளை "மறுசீரமைக்க" விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
"ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் வசிக்கும் 28 லட்சம் பாலத்தீனர்களை ஆட்சி செய்ய பாலத்தீன அதிகார அமைப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும். நான் அவர்களை ஆட்சி செய்ய விரும்பவில்லை" என்று ஐசென்கோட் அக்டோபர் மாதம் தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலிடம் தெரிவித்தார்.
யூத குடியேற்றங்கள் குறித்த நிலைப்பாடு என்ன?

பட மூலாதாரம், Kobi Wolf/Bloomberg via Getty Images
பெரிய இஸ்ரேலிய குடியேற்றக் குழுக்களின் விரிவாக்கத்தை ஐசென்கோட் ஆதரிக்கிறார். ஆனால், இந்த விரிவாக்கம் இஸ்ரேலிய சட்டம் மற்றும் அந்நாட்டின் நலன்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதிக்கிறார்.
அதேவேளையில், மேற்கு கரையின் சில பகுதிகளில் யூதக் குடியேறிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சர்ச்சைக்குரிய திட்டங்களையும் அவர் எதிர்த்துள்ளார்.
குறிப்பாக, ஜெருசலேமுக்குக் கிழக்கே உள்ள ஈ1 என்று அழைக்கப்படும் பகுதியில் குடியேற்றத்தை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அண்மையில், "யூதேயா மற்றும் சமாரியாவில் உள்ள யூத பயங்கரவாதிகளை வெளியேற்றுவேன்" என்று அவர் உறுதியளித்தார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் 'யூதேயா மற்றும் சமாரியா' என்று குறிப்பிடுகிறது.
அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அதில் இஸ்ரேல் அரசு எங்கெல்லாம் தவறிழைத்தது என்பது கண்டறியப்படும் என்றும் ஐசென்கோட் தனது தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து அதிகாரிகள், காஸாவிலிருந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் குறித்து நெதன்யாகுவை எச்சரித்ததாக இஸ்ரேலின் முக்கிய ஊடகங்கள் குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகளை நெதன்யாகு மறுத்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை முதன்முதலில் வெளியிட்ட இஸ்ரேலிய நாளிதழ் மீது அவர் வழக்குத் தொடர்ந்தார்.
இஸ்ரேலின் உச்ச நீதிமன்றம் தலைமையில் நடத்தப்படும் எந்தவொரு அரசு விசாரணையையும் நெதன்யாகு தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அந்த நீதித்துறை தனக்கு எதிராகச் செயல்படும் என்று அவர் வாதிடுகிறார்.
"இந்தத் தேர்வு என்பது பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கும், பொறுப்பிலிருந்து தப்பிப்பதற்கும் இடையிலான தேர்வாகும்" என்று ஐசென்கோட் கூறுகிறார்.
திறமையானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கான திட்டம்
ஐசென்கோட் தனது 10 அம்சத் திட்டத்தில் அவசரகாலத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
அதன்மூலம், அதிகத் திறமையும் தகுதியும் கொண்ட இஸ்ரேலியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பதுடன், புதிய குடியேறிகளை இஸ்ரேலுக்கு வர ஊக்குவிக்கவும் அவர் விரும்புகிறார்.
தீவிர பழமைவாத யூத சமூகங்கள் மற்றும் அரபு இஸ்ரேலியர்களுக்கு வழங்கப்படும் ராணுவப் பணியிலிருந்து விலக்குகளையும் முடிவுக்குக் கொண்டுவர ஐசென்கோட் விரும்புகிறார்.
"நாங்கள் மேலும் ஒரு நடவடிக்கையை எடுப்போம். இஸ்ரேல் குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சேவைச் சட்டம் கொண்டுவரப்படும்" என்று அவர் தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலிடம் தெரிவித்தார்.
"இதன்படி, ராணுவம், தேசிய சேவை அல்லது குடிமைப் பணியில் ஈடுபடுவது கட்டாயமாகும். அரபு குடிமக்களுக்கான தேசிய சேவையும் இதில் இடம்பெறும்" என்று அவர் கூறினார்.
நெதன்யாகு அரசின் ஆட்சிக் காலம் உட்பட, இதற்கு முன்பும் கட்டாய ராணுவச் சேவையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், இந்த முயற்சிகளுக்கு தீவிர பழமைவாத யூதச் சமூகத்தினர் போராட்டங்கள் மூலம் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எளிய பின்னணியிலிருந்து வந்தவர் ஐசென்கோட்
காடி ஐசென்கோட் திபேரியாஸ் நகரில் பிறந்து, எய்லாட் நகரில் வளர்ந்தார்.
இந்த இரண்டு நகரங்களும் இஸ்ரேலின் முக்கிய அரசியல் அதிகார மையங்களான ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நகரில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளன.
ஐசென்கோட்டின் பெற்றோர் 1950களில் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்த மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எளிய பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த யூதச் சமூகங்கள் 'மிஸ்ராஹி' என்று அழைக்கப்படுகின்றன.
மிஸ்ராஹி சமூகத்தைச் சேர்ந்த யாரும் இதுவரை இஸ்ரேலின் பிரதமராகப் பதவியேற்றதில்லை. இருப்பினும், இந்தச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் ஏற்கெனவே பிரதமராக முயற்சி செய்துள்ளனர்.
'தி நியூயார்க்கர்' இதழின் ஆசிரியர் டேவிட் ரெம்னிக், தேர்தல் பிரசாரத்தின்போது ஐசன்கோட்டுடன் நேரத்தைச் செலவிட்டார்.
இஸ்ரேலியச் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகக் கருதப்படும் மிஸ்ராஹி போன்ற சமூகங்களின் ஆதரவாளர் என்ற நெதன்யாகுவின் பிம்பத்துக்கு ஐசென்கோட் சவால் விடுப்பதாக அவர் கூறுகிறார்.
நெதன்யாகு கிழக்கு ஐரோப்பாவிலிருந்து இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்த யூதர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர். ஜெருசலேமின் வசதி படைத்த பகுதியில் வளர்ந்தவர். எனவே, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக அவர் கொண்டுள்ள பிம்பம், அவரது பின்னணிக்குப் பொருத்தமற்றதாகத் தெரிகிறது.
இஸ்ரேலிய ஊடகச் செய்திகளின்படி, வரலாற்று ரீதியாக லிகுட் கட்சிக்கு ஆதரவளித்து வரும் மிஸ்ராஹி சமூகத்தினர், ஐசன்கோட்டைக் குறிப்பிடுவதற்கு மொராக்கோ அரபு மொழிச் சொல்லான "தியாலினா" என்பதைப் பயன்படுத்துகின்றனர்.
'தியாலினா' என்றால், "நம்மில் ஒருவர்" என்று பொருள்.
"எனது பெற்றோர் மொராக்கோவிலிருந்து வந்தவர்கள். அவர்களையும் எனது வேர்களையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன்" என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் சேனல் 13 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஐசென்கோட் தெரிவித்தார்.
"ஆனால், முதலில் நாம் அனைவரும் நமது இஸ்ரேலிய அடையாளத்தைப் பற்றி பெருமைப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.
ராணுவத்தில் 40 ஆண்டுகள்

பட மூலாதாரம், JACK GUEZ/AFP via Getty Images
18 வயதில் ஐசென்கோட் இஸ்ரேலிய ராணுவத்தில் இணைந்தார்.
40 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய அவர், பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்று ராணுவத் தலைமைத் தளபதியானார். 2015 முதல் 2019 வரை அந்தப் பதவியில் இருந்தார்.
2000களில் நடைபெற்ற இரண்டாவது இன்டிஃபதா காலத்தில் மேற்குக் கரையில் இருந்த இஸ்ரேலியப் படைகளுக்கு அவர் தலைமை தாங்கினார்.
இந்தக் காலகட்டத்தில் சுமார் 1,000 இஸ்ரேலியர்களும், 3,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்களும் கொல்லப்பட்டனர்.
பின்னர், ஐசென்கோட்டின் பெயர் 'தாஹியா கோட்பாடு' என்பதுடன் தொடர்புபடுத்தப்பட்டது.
தம் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் நம்பும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உள்கட்டமைப்புகளுக்கு எதிராக அதீத இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை இந்தக் கோட்பாடு ஆதரிக்கிறது.
அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளை ஐசன்கோட் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நெதன்யாகுவை அவர் விமர்சித்த போதிலும் இவ்வாறு செயல்பட்டார்.
ஹமாஸ்தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
இந்த ராணுவ நடவடிக்கையில் 74,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் நம்பகமானவை என்று ஐக்கிய நாடுகள் சபை கருதுகிறது.
"எங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவை அனைத்தும் எங்கிருந்து தொடங்கின என்பதை நாம் நேர்மையாகப் பார்க்க வேண்டும்" என்று ஐசென்கோட் தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலிடம் தெரிவித்தார்.
ஐசென்கோட் பற்றி விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், EYAD BABA/AFP via Getty Images
பத்திரிகையாளரும் ஒலிபரப்பாளருமான மெஹ்தி ஹசன், பிரிட்டிஷ் செய்தித்தாளான 'தி கார்டியன்'-இல், "ஐசென்கோட் என்பவர் நெதன்யாகு அல்ல" என்று எழுதினார்.
ஆனால், அவரைப் பொறுத்தவரை, ஐசென்கோட்டும் "மேற்குக் கரை மற்றும் காஸாவில் அதே விரிவாக்கம் மற்றும் அழிவுக் கொள்கைகள் தொடர்ந்து நீடிக்க அனுமதிப்பார்."
'தி எகனாமிஸ்ட்' இதழின் இஸ்ரேலிய செய்தியாளரும், நெதன்யாகுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான அன்ஷெல் பிஃபர், "ஐசன்கோட் சமாதானவாதி அல்ல" என்று கூறுகிறார்.
"ஆனால், அவர் ஒரு தீவிரமான மற்றும் பொறுப்பான நபர் என்ற நற்பெயரையும் கொண்டுள்ளார்" என்று பிஃபர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"இதுவரை, தனது தேர்தல் பிரசாரத்தின் போது பெரியளவிலான அல்லது அபத்தமான வாக்குறுதிகளை அவர் அளிக்கவில்லை. செல்வாக்கு மிக்க அல்லது பிரபலமான குடும்பத்திலிருந்தும் அவர் வரவில்லை. எனவே, அவரது பிம்பத்துக்குக் களங்கம் ஏற்படுத்துவது மிகவும் கடினம்."
பிஃபரின் கருத்துப்படி, நெதன்யாகுவுக்கு நேரடியாகச் சவால் விடுக்கும் தலைவராக ஐசென்கோட் உருவெடுத்தது ஓரளவுக்கு எதிர்பாராத ஒன்றாகும்.
"ஆறு மாதங்களுக்கு முன்பு வரை, முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட்தான் நெதன்யாகுவின் சாத்தியமான போட்டியாளராகக் கருதப்பட்டார்" என்று அவர் கூறுகிறார்.
"ஆனால், சரியான நேரத்தில் வாக்காளர்களின் உணர்வுகளை ஐசென்கோட் தொட்டுவிட்டதாகத் தெரிகிறது."
ஐசென்கோட் பெரும்பாலும் 'நெதன்யாகுவுக்கு முற்றிலும் எதிரானவர்' என்று அழைக்கப்படுகிறார்.
அவர் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற முயற்சிப்பதில்லை. அரசியல் மேடைகளில் சிறப்பாகப் பேசக் கூடியவராகவும் அவர் கருதப்படுவதில்லை.
ஐசென்கோட் ஓர் அரசியல்வாதியாக இருப்பதையே விரும்பாமல் இருக்கக்கூடும் என்று நடாவ் ஐயால் நம்புகிறார்.
உலக நாடுகளுடனான இஸ்ரேலின் உறவுகள் மேம்படுமா?
ஐசென்கோட் பிரதமராகப் பொறுப்பேற்பது, இஸ்ரேலுக்கும் சர்வதேசச் சமூகத்துக்கும் இடையிலான நெருக்கடியான உறவுகளை மேம்படுத்துமா?
பிரிட்டனின் சிந்தனைக் குழுவான சாத்தம் ஹவுஸைச் சேர்ந்த இஸ்ரேலிய சர்வதேச உறவுகள் நிபுணர் பேராசிரியர் யோசி மெக்கல்பெர்க், அது நடக்கக் கூடும் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால், அத்தகைய மாற்றம் ஒரே இரவில் நிகழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
நெதன்யாகுவுக்குப் பதிலாக மற்றொரு தலைவர் பிரதமராக வருவது மட்டுமே, இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் நற்பெயரையும் நல்லெண்ணத்தையும் பெற்றுத்தரும் என்பதற்கு உத்தரவாதமில்லை என்றும் அவர் கூறினார்.
பேராசிரியர் மெக்கல்பெர்க், "ஐசென்கோட்டின் கட்சி உட்பட எந்தவொரு எதிர்க்கட்சியும் நெதன்யாகுவுக்கு மாற்றாகத் தெளிவான திட்டத்தை முன்வைக்கவில்லை என்று நான் கருதுகிறேன்" என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































