'ஐந்தே மாதங்களில் மாறிய காட்சிகள்' - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த மேகமலை கிராம மக்களின் மனநிலை என்ன?

மேகமலை வனப்பகுதி, மக்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தேனி
படக்குறிப்பு, மேகமலை மக்கள்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மேகமலை வனப்பகுதியில் வன உரிமைச் சட்டத்தின்கீழ் அப்பகுதி மக்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் குழு ஒன்றை வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 6) உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

வன உரிமைச் சட்டத்தின்படி பழங்குடிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக இந்தக் குழு ஆராய உள்ளது. 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

"இந்தத் தீர்ப்பு சுமார் 8,000 குடும்பங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது" என கடமலைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராம மக்கள் கூறுகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அவர்கள் கூறுவது என்ன?

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ள இந்த ஒன்றியத்தில் இலவம் பஞ்சு, முந்திரி, நவதானியங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடுவது முக்கியத் தொழிலாக உள்ளது.

'ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவப் படை'

இந்த நிலையில், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, கண்டமனூர், சின்னமனூர் ஆகிய வனச்சரகங்களில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் தீர்ப்பில், 'மேகமலையில் வசிக்கும் மக்களை வெளியேற்ற வேண்டும்' என 2022ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

தீர்ப்பில், 'பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மொத்தம் 4,594 ஆக்கிரமிப்பாளர்கள், 5,072 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேகமலை வனப்பகுதி, மக்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தேனி
படக்குறிப்பு, கோப்புப் படம்

'யானைகள், புலிகள் உள்படப் பல்வேறு அரிய உயிரினங்கள் வாழும் மிக முக்கியமான பல்லுயிர் மையமாக அகத்தியர் மலை உள்ளது. ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத மேய்ச்சல் போன்ற அச்சுறுத்தல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது' எனத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

காடுகளை ஆக்கிரமித்தவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வெளியேற்றுவது ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் எனவும் மனிதாபிமான காரணங்களைக் காட்டி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளைத் தாமதப்படுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குத் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய திட்டத்தை ஒரு மாதத்துக்குள் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் (CEC) அரசு சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவுகளை மாநில அரசு நிறைவேற்றத் தவறும்பட்சத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு துணை ராணுவப் படையை ஈடுபடுத்துவதற்கு மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு (CEC) பரிந்துரைக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த உத்தரவால் மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்கள் தேனி மலைக் கிராம மக்கள். தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுவை தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

"தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த வழக்கைக் கையில் எடுத்தது. 1912ஆம் ஆண்டு மாவட்ட வரைபடம், 1931, 1937 மற்றும் 1951ஆம் ஆண்டுகளில் வெளியான மாவட்ட வரைபடங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம்" என செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார். எது காடு எனத் தெரியாமல் வழக்கு தவறாகக் கையாளப்பட்டதாகக் கூறிய அவர், "பட்டா நிலங்களையும் காப்புக் காடுகளாகக் கடந்த ஆட்சியாளர்கள் மாற்றியிருந்தனர். இதைச் சரிசெய்யும் நோக்கில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தோம்" எனக் கூறினார்.

கடந்த நான்கு மாதங்களாக அரசுத் துறைகளின் ஒத்துழைப்புடன் பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.

'ஆதாரம் எதுவும் இல்லை' - உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

மேகமலை வனப்பகுதி, மக்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தேனி
படக்குறிப்பு, இலவம் பஞ்சு சாகுபடிக்கு பெரிய வணிக நிறுவனங்கள் எதுவும் நிதி உதவி அளிக்கவில்லை என மாநில அரசு வாதிட்டது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு, ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம், அகத்திய மலையின் ஒரு பகுதியான மேகமலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்தியது.

வழக்கின் வாதத்தில், மேகமலை வனப்பகுதியில் இலவம் பஞ்சு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதைச் சுட்டிக் காட்டிய தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர், "இது சிறு வன விளைபொருளாக (minor forest produce) உள்ளது. இந்தச் சாகுபடிக்கு வரலாற்றுரீதியாக அரசு அதிகாரிகளே ஊக்கமளித்தனர்" என வாதிட்டார்.

இலவம் பஞ்சு சாகுபடி தொடங்கப்பட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகள் எல்லாம் பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளாக இருக்கவில்லை எனவும் இலவம் பஞ்சு சாகுபடிக்கு பெரிய வணிக நிறுவனங்கள் எதுவும் நிதியுதவி அளிக்கவில்லை எனவும் மாநில அரசு வாதிட்டது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வணிகரீதியாக சாகுபடி செய்யப்படும் இலவம் பஞ்சு, வன உரிமைகள் சட்டத்தின்கீழ் அல்லது வேறு வனச் சட்டத்தின்கீழ் 'சிறு வன விளைபொருள்' என அங்கீகரிக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை" எனக் கூறினர்.

'காட்டின் இயல்பை மாற்றிவிடும்'

வன உரிமைகள் சட்டத்தின் பிரிவு 3(1)(c)-இன் கீழ் கிராம எல்லைகளுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ பாரம்பரியமாகச் சேகரிக்கப்படும் சிறு வன விளைபொருட்களைச் சேகரிக்கவும் பயன்படுத்தவும் அவற்றை அப்புறப்படுத்தவும் உரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

வணிகரீதியாகத் திட்டமிட்டு பயிர்களை சாகுபடி செய்துவிட்டு, இயற்கையாகக் கிடைக்கும் சிறு வன விளைபொருள் எனக் கூறுவது முற்றிலும் முரணானது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதுபோன்ற வணிகப் பயிர்களை சாகுபடி செய்ய அனுமதிப்பது காட்டின் இயல்பையே மாற்றிவிடும் எனவும் கூறினர்.

அந்த வகையில், வணிகப் பயிர் சாகுபடியை வன உரிமையாக அங்கீகரிக்க முடியாது எனவும் அதன் அடிப்படையில் வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்வதையோ அல்லது தொடர்ந்து தங்கியிருப்பதையோ நியாயப்படுத்த முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

மேகமலை வனப்பகுதி, மக்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தேனி

'மூன்றாகப் பிரிக்கப்பட்ட மலைக் கிராம மக்கள்'

உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வழங்கிய புள்ளிவிவரத்தில், 5,072.64 ஹெக்டேர் நிலத்தை 4,594 பேர் ஆக்கிரமித்து இருப்பதாகவும் இவற்றில் 3,637.83 ஹெக்டேர் நிலத்தில் இலவம் பஞ்சு சாகுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தது. இவர்களை மூன்று பிரிவுகளாக நீதிமன்றம் வகைப்படுத்தியது.

  • வனப்பகுதியில் நிரந்தரமாக வசித்துக் கொண்டு சாகுபடி செய்பவர்கள்
  • தற்காலிகமாக வசித்துக் கொண்டு சாகுபடியில் ஈடுபடுவோர்
  • வன எல்லைக்கு வெளியில் வசித்துக் கொண்டு வனப் பகுதிக்குள் சாகுபடி செய்வோர்

"இவர்களின் கடைசி இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை சாகுபடி நடவடிக்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வன உரிமைகள் சட்டத்தின்கீழ் வரும் நபர்களாகக் கருத முடியாது" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வன உரிமைச் சட்டத்தின்கீழ் உரிமைகளைப் பெறுவதற்கு அங்கு வசிக்கும் பழங்குடி மக்கள், நிரந்தர வசிப்பிடம் மற்றும் வாழ்வாதாரத்துக்காக வன நிலத்தைச் சார்ந்திருப்பது உள்ளிட்ட சட்டபூர்வ நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பில் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

'மற்ற பழங்குடிகளைப் பொறுத்தவரை 2005ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதிக்கு முந்தைய மூன்று தலைமுறைகள் அல்லது 75 ஆண்டுகளாக அந்த நிலத்தில் வசித்து வந்திருக்க வேண்டும் என்ற சட்டபூர்வ நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வன உரிமைகள் சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகளை நிறைவு செய்வதற்கு மாநில அரசு தாமதம் காட்டுவதாகவும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

பி.ஆர்.கவாய் தலைமையில் குழு

இதையடுத்து, மேகமலைப் பகுதியில் வன உரிமைகள் சட்டத்தின் ((Forest Rights Act) கீழ் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் குழு அமைக்கப்படுவதாக தெரிவித்தது.

இந்தக் குழுவுக்கு மத்திய அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் (Central Empowered Committee - CEC) அதிகாரி ஒருவரும் தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஒருவரும் உதவியாளர்களாக இருப்பார்கள் எனவும் இந்தக் குழு தனது அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. குழுவின் இடைக்கால அறிக்கையைப் பெறும் வகையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியன்று வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

மேகமலை வனப்பகுதி, மக்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தேனி
படக்குறிப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன்

'மக்களைப் பிரிப்பது சரியல்ல'

"மலையில் குடியிருக்காமல் இலவம்பஞ்சு, முந்திரி ஆகியவற்றை சாகுபடி செய்யும் நபர்கள் உள்ளதாக நீதிமன்றம் கூறுவதை ஏற்க முடியாது. சுமார் மூன்று தலைமுறைகளாக அங்கு தங்கி பயிரிட்டு வாழ்க்கை நடத்தும் மக்கள்தான் உள்ளனர். அவர்களைப் பிரிப்பது ஏற்புடையதல்ல" என்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன்.

இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய வாலிப்பாறை மலைக் கிராமத்தில் வசிக்கும் மருதுபாண்டி, "மூன்று வகைகளாகப் பிரித்து முதல் பிரிவு மக்களை மட்டும் பரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என குழுவிடம் வலியுறுத்துவோம்" என்கிறார்.

"மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் காட்டில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், வேறு இடத்தில் ஊரையொட்டி பட்டா நிலத்தில் வீட்டைக் கட்டியிருப்பார்கள். அவர்களை இரண்டு மற்றும் மூன்றாம் பிரிவினர் எனக் கையாள்வது தேவையற்றது" என்கிறார் அவர்.

'நம்பிக்கை கொடுத்த தீர்ப்பு'

நீதிமன்றத்தின் தீர்ப்பு நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாகக் கூறும் மருதுபாண்டி, "மே மாதம் தீர்ப்பு வெளிவந்தபோது கவலையில் இருந்தோம். ஐந்தே மாதங்களில் நிலைமை மாறியுள்ளது. எங்கள் கருத்துகளைக் கூறுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மலைக் கிராம மக்களிடம் இக்குழுவினர் ஆய்வு நடத்த வேண்டும். அவர்கள் நேரடியாக கிராம மக்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களிடம் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.

கடமலைக்குண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் நேரடியாக ஆய்வு செய்யும்போது கள நிலவரம் தெரிய வரும் எனக் கூறும் அவர், "மேகமலையில் பெரும் முதலாளிகள் ரிசார்ட்டுகளை நடத்தி வருகின்றனர். அதற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என்றார். சிறு வன விளைபொருள் பட்டியலில் இலவம் பஞ்சை சேர்க்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது குறித்துப் பேசும் மருதுபாண்டி, "தேன், கடுக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை சிறு வன விளைபொருள் எனக் கூறுகின்றனர். இலவம் பஞ்சு மரங்களை வளர்க்குமாறு அரசே கூறியது" எனக் கூறுகிறார்.

அதேநேரம், "நாங்கள் பூர்வீக நிலத்துக்காக மட்டுமே போராடுகிறோம். இலவம் பஞ்சு மரத்துக்காகப் போராடவில்லை. பெரும் முதலாளிகள் யாரும் எங்களை இலவம் பஞ்சு சாகுபடி செய்யுமாறு கூறவில்லை" என்றார்.

மேகமலை வனப்பகுதி, மக்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தேனி
படக்குறிப்பு, வாலிப்பாறை மலை கிராமத்தில் வசிக்கும் மருதுபாண்டி

இதே கருத்தை முன்வைத்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "வனம் சார்ந்துள்ள மக்கள், இலவம் பஞ்சு சாகுபடி செய்வதை அரசே ஊக்குவித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மேகமலையில் ரிசார்ட்டுகள் தான் ஆக்கிரமிப்பில் இருந்தன. அங்குள்ள மலைக் கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட இருந்தனர். அவர்களைக் காப்பாற்ற அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக குழு அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

'10 ஆண்டுகளாக எந்த வசதிகளும் இல்லை'

"கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ள சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் அடிப்படை வசதிகளை அரசு நிர்வாகங்கள் மேம்படுத்தவில்லை" எனக் கூறுகிறார் மருதுபாண்டி.

"வருசநாடு-வாலிப்பாறை ரோடு, அரசரடி ரோடு உள்பட குக்கிராமங்களில் எந்தப் பகுதிகளிலும் இணைப்புச் சாலைகள் போடப்படவில்லை. இதுவரை தொலைத்தொடர்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை" என்கிறார் மருதுபாண்டி.

மலைக் கிராமங்களுக்கு உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழு நேரடியாக ஆய்வு செய்யும்போது மக்களின் நீண்டகால துயரங்களுக்கு விடிவு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "மேகமலையில் காடுகள், காப்புக் காடுகள், பூர்வகுடிகள், அவர்களின் பயிர் சாகுபடி குறித்தெல்லாம் கண்டறிவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. வன உரிமைச் சட்டத்தின்படி காட்டில் பழங்குடிகளுக்கான உரிமைகளைக் கொடுக்க வேண்டும். குழுவின் தலைவரான முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இதுதொடர்பான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு