'ராமாயணா' திரைப்படம் குறித்து இந்திய, சர்வதேச விமர்சகர்கள் சொல்வது என்ன?

ராவணனால் சீதை கடத்தப்படுவது ஒரு மாபெரும் போருக்கு வழிவகுக்கிறது.
படக்குறிப்பு, ராவணனால் சீதை கடத்தப்படுவது ஒரு மாபெரும் போருக்கு வழிவகுக்கிறது.
    • எழுதியவர், ஸோயா மதீன்
    • பதவி, ஸோயா மதீன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ராமாயணம், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்து இதிகாசமான ராமாயணத்தைப் பிரமாண்டமாக மறுஉருவாக்கம் செய்துள்ள இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த தயாரிப்புச் செலவு 500 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ராமாயணா திரைப்படம், திட்டமிடப்பட்டுள்ள இரண்டு பாகங்களில் முதல் பாகமாகும். இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள், ஹாலிவுட்டின் தொழில்நுட்ப நிபுணர்கள், ஆஸ்கர் விருது வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் எனப் பலரும் இணைந்து இந்தப் பிரமாண்டத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்தியாவின் மிகவும் போற்றப்படும் கதைகளில் ஒன்றை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.

இந்து மதத்தின் அடிப்படை இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம், பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு நாடுகளிலும் பரவி வந்துள்ளது. கவிதைகள், கோவில் சிற்பங்கள், நாட்டுப்புற நாடகங்கள், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட கதைகள் எனப் பல்வேறு வடிவங்களில் அது வெளிப்பட்டுள்ளது.

பல அரச வம்சங்களையும் பேரரசுகளையும் கடந்து நிலைத்து நிற்கும் ராமாயணம், மத நம்பிக்கைகளுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் உத்வேகம் அளித்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் வழியாகவும் மீண்டும் மீண்டும் புதிய வடிவங்களைப் பெற்றுள்ளது.

நிதேஷ் திவாரியின் இந்தப் படமும் காதல், கடமை, வனவாசம், போர் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பழக்கமான ராமாயணக் கதையை மீண்டும் திரைக்குக் கொண்டுவருகிறது. கடவுள்களும் அரக்கர்களும், வானுலக ஆயுதங்களும் வலிமைமிக்க ராஜ்ஜியங்களும் நிறைந்த உலகில் இந்தக் கதை நிகழ்கிறது.

அயோத்தியின் இளவரசரான ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். 14 ஆண்டுகள் தனது ராஜ்ஜியத்தைவிட்டு வெளியேற்றப்படும் ராமர், தனது மனைவி சீதையுடன் (சாய் பல்லவி) வனத்துக்குச் செல்கிறார். அங்கு, இலங்கையின் பத்து தலைகளைக் கொண்ட மன்னனான ராவணனால் சீதை கடத்தப்படுகிறார்.



'ராமாயணம்' திரைப்படம் குறித்து இந்திய, சர்வதேச விமர்சகர்கள் சொல்வது என்ன?
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான யஷ், ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வலிமைமிக்க போர் வீரனான ராவணன், ராமருடன் ஒரு மாபெரும் போரில் ஈடுபடுகிறார். இந்தப் போர் அடுத்த ஆண்டு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தில் இடம்பெறும்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான நமித் மல்ஹோத்ரா, ஹாலிவுட்டின் டியூன், இன்டர்ஸ்டெல்லர் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள விஷ்வல் எபெக்ட் நிறுவனமான டிஎன்இஜியின் தலைவராகவும் உள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும், கிளாடியேட்டர், தி டார்க் நைட், டியூன் உள்ளிட்ட படங்களில் இசை மூலம் நவீன ஹாலிவுட் திரைப்படங்களின் இசை அடையாளத்தை உருவாக்கிய ஹான்ஸ் ஸிம்மரும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பாக இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. தீபாவளி இந்து மதத்தின் ஒளித் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனால், இதுவரை வெளியாகியுள்ள விமர்சனங்கள் கலவையாக உள்ளன.

என்டிடிவி தொலைக்காட்சியின் சைபால் சட்டர்ஜி, இந்தப் படத்துக்கு ஐந்துக்கு மூன்று நட்சத்திரங்கள் வழங்கியுள்ளார். படத்தின் காட்சிப் பிரமாண்டம் பல இடங்களில் கதையைப் பின்னுக்குத் தள்ளிவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் பிரமாண்டமான உருவாக்கம், "பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கும் ஒரே அம்சமாகவே உள்ளது" என்றும், நடிகர்களின் நடிப்பு "மிகவும் சீரற்றதாக உள்ளது" என்றும் அவர் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.

ராமானந்த் சாகரின் ராமாயண் தொலைக்காட்சித் தொடர், இந்து இதிகாசத்தின் தழுவல்களில் இன்றுவரை மிகவும் பிரபலமானதாகத் திகழ்கிறது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் ரிஷப் சூரி இந்தப் படத்தைப் பாராட்டி, ஐந்துக்கு நான்கு நட்சத்திரங்கள் வழங்கியுள்ளார்.

"படத்துக்குச் செலவிடப்பட்ட பணம் முழுவதும் திரையில் தெரிகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர்களின் நடிப்பு மற்றும் காட்சிகளை பாராட்டிய அவர், படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்வதாகவும், இசை எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சுப்ரா குப்தா இந்தப் படத்துக்கு ஐந்துக்கு மூன்று நட்சத்திரங்கள் வழங்கியுள்ளார். படத்தின் பிரமாண்டமான உருவாக்கம் குறித்து ஆரம்பத்தில் தனக்கு சந்தேகங்கள் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், படம் பார்க்கப் பார்க்க அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், இதை ஒரு "கச்சிதமான இதிகாசப் படம்" என்றும் வர்ணித்துள்ளார்.

"பிரமாண்டமான காட்சிகளைத் தக்கவைத்துக்கொள்ளப் போதுமான மாயாஜாலமும், விறுவிறுப்பும், சாகசங்களும் படத்தில் உள்ளன" என்று அவர் எழுதியுள்ளார். மேலும், பிரமாண்டமான கதையில் மூழ்கிவிடாமல், அதைச் சிறப்பாகச் சொல்லத் திரைப்படக் குழுவினரால் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவிலும் இந்தப் படத்துக்கு மாறுபட்ட விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

தி கார்டியன் நாளிதழில் எழுதிய பீட்டர் பிராட்ஷா, இந்தப் படத்தை "மிகவும் ஈர்க்கக்கூடிய, உற்சாகமூட்டும், பிரம்மாண்டமான இந்திய இதிகாச நாடகம்" என்று பாராட்டியுள்ளார்.

ராமர் வனவாசம் செல்லக் காரணமாக அமைந்த அரச குடும்பத்தின் சூழ்ச்சிகளில் ஷேக்ஸ்பியரின் படைப்புகளின் சாயலை அவர் கண்டுள்ளார். சீதையை மீட்பதற்கான ராமரின் பயணத்தில் கிரேக்க இதிகாசமான ஹோமரின் படைப்புகளின் தாக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். படத்தின் விரிந்த நிலப்பரப்புகளும் கற்பனைமிக்க காட்சிகளும் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், தி லயன் கிங் ஆகிய படங்களை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"இது வியப்பூட்டும் ஒரு சாகசப் படம்" என்று குறிப்பிட்டுள்ள அவர், படத்துக்கு ஐந்துக்கு நான்கு நட்சத்திரங்கள் வழங்கியுள்ளார்.

ஆனால், சில விமர்சகர்கள் இந்தப் படத்தால் அவ்வளவாக ஈர்க்கப்படவில்லை. ஐஜிஎன் இணையதளத்தின் சித்தாந்த் அட்லகா, இந்தப் படத்துக்கு 10-க்கு நான்கு மதிப்பெண்கள் வழங்கியுள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகள் செயற்கையாகவும், கணினி மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் பார்ப்பதற்கே உறுத்தலாகவும் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்தத் திரைப்படம், போற்றப்படும் இந்து இதிகாசமான ராமாயணத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, இந்தத் திரைப்படம் ராமாயணத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

நெக்ஸ்ட் பெஸ்ட் பிக்சர் இணையதளத்தின் ஜியோவானி லாகோ, இந்தப் படத்துக்கு 10-க்கு ஐந்து மதிப்பெண்கள் வழங்கியுள்ளார்.

யஷ் ஏற்றுள்ள ராவணன் கதாபாத்திரத்தின் நடிப்பையும், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து உருவாக்கிய இசையையும் அவர் பாராட்டியுள்ளார்.

இருப்பினும், படத்தின் விரிவான கதையை இரண்டு திரைப்படங்களாக எடுப்பதற்குப் பதிலாக, கேம் ஆஃப் த்ரோன்ஸ் பாணியில் ஒரு தொலைக்காட்சித் தொடராக உருவாக்கியிருக்கலாம் என்றும் அவர் கருதியுள்ளார்.

ஆங்கிலப் பதிப்புக்காக நடிகர்களின் உதட்டு அசைவுகளைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சரிசெய்திருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

சர்வதேசப் பார்வையாளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் படத்தை உருவாக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக இயக்குநர் நிதேஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

ராமானந்த் சாகரின் ராமாயண் தொலைக்காட்சித் தொடர், இந்து இதிகாசத்தின் தழுவல்களில் இன்றுவரை மிகவும் பிரபலமானதாகத் திகழ்கிறது.
படக்குறிப்பு, ராமானந்த் சாகரின் ராமாயண் தொலைக்காட்சித் தொடர், இந்து இதிகாசத்தின் தழுவல்களில் இன்றுவரை மிகவும் பிரபலமானதாகத் திகழ்கிறது.

இதற்கு முன்பு வெளியான ராமாயணம் திரைப்படங்களால் கற்பனைகூடச் செய்ய முடியாத தொழில்நுட்ப வசதிகளுடன் நிதேஷ் திவாரியின் ராமாயணா உருவாகியுள்ளது. அதே நேரத்தில், இந்தக் கதையையும் அதன் கதாபாத்திரங்களையும் தலைமுறை தலைமுறையாக அறிந்து வளர்ந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும் இப்படம் எதிர்கொள்கிறது.

இந்தியாவில் அரசியல் ரீதியாக உணர்வுபூர்வமான ஒரு சூழலில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ராமர், இந்து அடையாளத்தின் வலிமையான அடையாளமாக மாறியுள்ளார். கடந்த ஒன்றரை தசாப்தங்களாக, ராமாயணம் குறித்த பிரபலமான ஆய்வுகளும் மறுகதையாக்கங்களும்கூட சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளன.

2023-ல் வெளியான ஆதிபுருஷ் திரைப்படமும் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ராமாயணத்தின் மறுகதையாக்கமாகும். ஆனால், அது பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளைச் சந்தித்தது.

மதப் பிரமுகர்களை அவமதித்துவிட்டதாகக் கூறி, அந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரின.

அதேவேளையில், ராவணனின் தோற்றம் குறித்து சில விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர். முகலாயர் காலக் காட்சியமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ராவணன் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அது முஸ்லிம்கள் குறித்த தவறான பொதுப்பிம்பங்களை வலுப்படுத்துவதாகவும் அவர்கள் கூறினர். படத்தின் வசனங்கள் மற்றும் காட்சிகளும் விமர்சிக்கப்பட்டன.

தற்போதைய ராமாயணா திரைப்படத்தில் இந்தக் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களும் இந்தப் பொறுப்பின் சுமையை ஆழமாக உணர்ந்தனர்.

"நான் அச்சத்தில் இருந்தேன்" என்று பிபிசி ஆசிய நெட்வொர்க்கின் ஹாரூன் ரஷீதிடம் ரன்பீர் கபூர் கூறினார். "இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வயதாகிவிட்டதோ என்று நினைத்தேன். இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னால் நியாயம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்றும் அஞ்சினேன்" என்றார்.

இந்த வாய்ப்பை "வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பு" என்று அவர் வர்ணித்தார். ஆனால், கோடிக்கணக்கான மக்களால் வழிபடப்படும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதால், மற்ற படங்களில் தனக்குக் கிடைத்த படைப்புச் சுதந்திரத்துக்கு இங்கு அதிக வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி, இந்த அனுபவம் கலை சார்ந்ததாக மட்டுமல்லாமல் ஆன்மிகம் சார்ந்ததாகவும் இருந்ததாகக் கூறினார். மத நம்பிக்கைகள் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்த அவர், இந்தக் கதாபாத்திரத்தை வெறும் நடிப்பாக மட்டும் அணுகவில்லை என்றும், தனிப்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்பாகவும் கருதியதாகத் தெரிவித்தார்.

பார்வையாளர்கள் திரையரங்குகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ள நிலையில், இந்தப் படத்துக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கிறது என்பது விரைவில் தெரியவரும்.

ஆனால், விமர்சனங்கள் எப்படியிருந்தாலும், தலைமுறை தலைமுறையாக மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு கதையை இதுவரை இல்லாத அளவிலான பிரமாண்டத்துடன் பெரிய திரைக்குக் கொண்டுவந்துள்ள இந்தப் படம், இந்தியாவின் பண்பாட்டுச் சூழலில் ஒரு முக்கியமான தருணமாக அமைந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு