பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்க்க மறுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட இத்தாலி சமையல் கலைஞர்

பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்ப்பது தனது கலாசாரத்தை அவமதிப்பதாகக் கூறிய இத்தாலிய சமையல் கலைஞர், குயின்ஸ்லாந்தில் உள்ள உணவகத்தில் அதனைச் சேர்க்க மறுத்திருந்தார்.
படக்குறிப்பு, பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்ப்பது தனது கலாசாரத்தை அவமதிப்பதாகக் கூறிய இத்தாலிய சமையல் கலைஞர், குயின்ஸ்லாந்தில் உள்ள உணவகத்தில் அதனைச் சேர்க்க மறுத்திருந்தார்.
    • எழுதியவர், சைமன் அட்கின்சன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய இத்தாலிய சமையல் கலைஞர் ஒருவர், பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்க்க மறுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார். அது தனது கலாசாரத்தை அவமதிப்பதாக அவர் கூறியிருந்தார்.

டேவிட் தம்புரெல்லா, தற்போது மூடப்பட்டுள்ள லா கோஸ்டா உணவகத்தில் இருந்து கடந்த மே மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார். நிர்வாகத்தினருடன் நடந்த சந்திப்புக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தச் சமையல் கலைஞரின் நடத்தை குறித்து நிர்வாகத்திடம் பல புகார்கள் இருந்தன.

அவற்றில், ஒரு நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களுக்காக ஹாம் (பன்றிக்கறி) மற்றும் அன்னாசிப்பழம் சேர்த்த பீட்சாவைத் தயாரிக்க தம்புரெல்லா மறுத்ததும் ஒன்றாகும்.

அப்போது, நிர்வாகத்தின் எந்தவொரு அறிவுறுத்தலும் தனது கலாசாரத்தை அவமதிப்பதாக இருந்தால், அதைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

தன்னை நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்ததாகக் கூறி, அந்தச் சமையல் கலைஞர் ஆஸ்திரேலியாவின் ஃபேர் வொர்க் கமிஷனில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பில், பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்க்க தம்புரெல்லா மறுத்ததற்கான காரணத்தை ஆணையம் குறிப்பிட்டது.

"இத்தாலியராக இருக்கும் அவர், பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்ப்பது தனது கலாசாரத்தை அவமதிப்பதாகக் கருதுகிறார்" என்று ஆணையம் தெரிவித்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில், பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்க்க தம்புரெல்லா மறுப்பது இது மூன்றாவது முறை என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

இதற்கு முன்பு, "பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்க்காமல் இருப்பது இத்தாலியர்களுக்கு எவ்வளவு முக்கியம்'' என்பதை உணவகத்தின் உரிமையாளர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த உணவகம் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியாவின் அன்னாசி பழ உற்பத்தி மையமாகக் கருதப்படுகிறது.

சன்ஷைன் கோஸ்ட் பகுதியில் உள்ள 'தி பிக் அன்னாசிப்பழம்' என்ற 16 மீட்டர் உயரமுள்ள கண்ணாடி இழையால் செய்யப்பட்ட அன்னாசி பழ மாதிரியுடன் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். இது, அந்தப் பகுதியின் அடையாளமாகத் திகழ்கிறது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து, அந்நாட்டின் அன்னாசிப்பழ உற்பத்தி மையமாகக் கருதப்படுகிறது
படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து, அந்நாட்டின் அன்னாசி பழ உற்பத்தி மையமாகக் கருதப்படுகிறது
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தம்புரெல்லா தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது, அவர் மற்றவர்களுடன் பேசும் விதம் மற்றும் "பணியிடத்தில் அடிக்கடி விரக்தியுடன் நடந்துகொண்டது" ஆகியவை குறித்தும் புகார்கள் எழுந்தன.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணியிடத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் தீர்ப்பில் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அப்போது, உலோகக் கைப்பிடியைத் தனது வலது கையால் குத்தியதில் தம்புரெல்லாவின் எலும்புகள் முறிந்தன.

திறமையான தொழிலாளர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கு வழிவகுக்கும் விசாவை உணவகம் தனக்கு வழங்கும் என்று தம்புரெல்லா எதிர்பார்த்திருந்தார்.

ஆனால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உணவகம் அந்த விசா நடைமுறையை நிறுத்திவிட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

நியாயமற்ற பணிநீக்கம் தொடர்பாக அவர் அளித்த புகார் காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யப்படவில்லை என்ற காரணத்தால், அவரது மனுவை ஆணையம் நிராகரித்தது.

உணவகத்தின் நிர்வாக இயக்குநர் எலியட் இங்க்ரம், டெய்லி மெயில் செய்தித்தாளிடம், "இந்த விவகாரத்தில் பீட்சாவின் மேல் சேர்க்கப்படும் ஒரு பொருளைத் தாண்டி இன்னும் பல விஷயங்கள் உள்ளன" என்றார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவிக்குமாறு பிபிசி தம்புரெல்லாவை அணுகியுள்ளது.

தனது லிங்க்டின் பக்கத்தில், தம்புரெல்லா தனது தொழில் வாழ்க்கை முழுவதும் "சிறந்த உணவை வழங்குவதிலும்", "வணிகத்தின் செயல்திறனை மேம்படுத்துவதிலும்" கவனம் செலுத்தி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, "சமையல் கலைஞர்களுக்கான கடிதம்" என்ற தலைப்பில், "உணவுப் பொருட்களுக்கு மதிப்பளித்தல்" என்ற கருத்தை மையமாகக் கொண்டு அவர் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார்.

தற்போது பிரிஸ்பேனில் உள்ள மற்றொரு உணவகத்தில் அவர் பணியாற்றி வருவதாக லிங்க்டின் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உணவகத்தின் உணவுப் பட்டியலில் அன்னாசிப்பழம் இடம்பெறவில்லை என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு