இடைக்கால தேர்தல் தோல்வி: டிரம்பை பதவி நீக்கம் செய்வது எளிதாகிவிட்டதா?

அதிபர் டிரம்ப்
படக்குறிப்பு, அதிபர் டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் இரண்டு முறை பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த இடைக்காலத் தேர்தல் ஆண்டை குடியரசுக் கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துத் தொடங்கினார்.

ஜனவரி 6ஆம் தேதி, பிரதிநிதிகள் சபையிலுள்ள குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் டிரம்ப், "நீங்கள் இடைக்காலத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். நாம் இடைக்காலத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், என்னை பதவியில் இருந்து நீக்குவதற்காக அவர்கள் பதவி நீக்க தீர்மானத்தின் மூலம் ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்" என்று கூறினார்.

தற்போது, இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது.

டெக்சாஸ், தெற்கு கரோலினா, கன்சாஸ் போன்ற பாரம்பரியமாக குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் நிறைந்த மாகாணங்களில்கூட செனட் இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும், இதற்கு முன்பே ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த அமெரிக்க நாடாளுமன்றம், டிரம்புக்கு எதிராகப் பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தது. ஆனாலும், அவரை அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதைத் தடுக்க முடியவில்லை.

தேர்தலுக்கு முன்பு, செனட் சபையில் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், ஜனநாயகக் கட்சிக்கு 47 உறுப்பினர்களும் இருந்தனர். மொத்தமுள்ள 435 பிரதிநிதிகள் சபை இடங்களில் 367 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் 218 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றி, பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பு, குடியரசுக் கட்சி 218-214 என்ற குறைந்த வித்தியாசத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்தது.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளதன் மூலம், அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அவரது நிர்வாகத்திலுள்ள உறுப்பினர்களுக்கு எதிராகப் பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்கும் அதிகாரத்தை ஜனநாயகக் கட்சி பெற்றுள்ளது.

முதல் பதவிக் காலத்தில் பதவி நீக்கம்

டிரம்பின் முதல் பதவிக் காலத்தின் போது, பிரதிநிதிகள் சபையில் உள்ள ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களால் அவருக்கு எதிராக இரண்டு முறை பதவி நீக்கத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இருப்பினும், இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்தும் செனட் சபையில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவது மட்டுமே டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்கிவிடாது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அடுத்த கட்டமாக நடைபெறும் செனட் விசாரணையில் பங்கேற்கும் செனட் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதாவது, செனட் சபையில் பெரும்பான்மையைப் பெறுவதன் மூலம் மட்டுமே ஜனநாயகக் கட்சியால் டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்க முடியாது என்பதே இதன் பொருள்.

தற்போதைய நிலையில், டிரம்புக்கு எதிராக மூன்றாவது முறையாகப் பதவி நீக்க நடவடிக்கையை எடுக்க ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் திட்டமிட்டு இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைப் பெறுவது, டிரம்பின் சட்டமியற்றும் திட்டங்கள் மீது ஜனநாயகக் கட்சிக்கு விரிவான கட்டுப்பாட்டையும், நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து ஆய்வு செய்வதற்கான கணிசமான அதிகாரங்களையும் வழங்கும்.

இதனால், டிரம்பின் பதவிக் காலத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளில் புதிய சட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டு வருவது அவரது நிர்வாகத்திற்குக் கடினமாகலாம். இருப்பினும், ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினால், ஒவ்வொரு மசோதாவுக்கும் "தான் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவேன்" என்று டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்துள்ளார்.

இடைக்காலத் தேர்தல் முடிவுகள், டிரம்புக்கு எதிரான மற்றொரு பதவி நீக்க விசாரணைக்கு வழிவகுத்துள்ளதா?

முதலாவதாக, ஓர் அதிபரைப் பதவி நீக்கம் செய்வதற்குப் பிரதிநிதிகள் சபையில் தேவைப்படும் பெரும்பான்மையைவிட, அவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு செனட் சபையில் தேவைப்படும் பெரும்பான்மை வேறுபட்டது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

பதவி நீக்கம் என்பது ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் மத்திய அரசு அதிகாரி ஒருவருக்கு எதிராக முறையாகக் கொண்டு வரப்படும் குற்றச்சாட்டு. செனட் சபையில் விசாரணை தொடங்குவதற்கு முன்னர், பதவி நீக்கத் தீர்மானம், அதாவது குற்றச்சாட்டுகள், பிரதிநிதிகள் சபையில் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதிபருக்கு எதிராகப் பதவி நீக்க விசாரணை நடைபெறும்போது, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அந்த விசாரணைக்குத் தலைமை தாங்குவார்.

செனட் சபையின் மூன்றில் இரண்டு பங்கு

செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராகத் தீர்ப்பளிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே, அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

சில சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட நபர் எதிர்காலத்தில் எந்தவொரு பொதுப் பதவியையும் வகிக்க முடியாத நிலையும் ஏற்படலாம்.

டிரம்பை பதவி நீக்கம் செய்யத் தேவையான இடங்களை ஜனநாயகக் கட்சி பெற்றுள்ளதா?

பிரதிநிதிகள் சபையைப் பொறுத்தவரை, இதற்கான பதில் ஆம். நவம்பர் 4ஆம் தேதி பிற்பகல் நிலவரப்படி, ஜனநாயகக் கட்சி 237 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. இது எளிய பெரும்பான்மைக்குத் தேவையான 218 இடங்களைவிட அதிகம். அதாவது, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் பதவி நீக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.

ஆனால், இது பதவி நீக்க நடவடிக்கையின் முதல் கட்டம் மட்டுமே. அதிபரை பதவியில் இருந்து நீக்குவதற்குத் தேவையான செனட் சபையின் பெரும்பான்மையைப் பெற முடியுமா என்பதையும் புரிந்துகொள்வது அவசியம். செனட் சபையில் நடைபெறும் பதவி நீக்க விசாரணையின்போது, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

அனைத்து இடங்களுக்குமான தேர்தல் முடிவுகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மீதமுள்ள அனைத்து இடங்களையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றினாலும்கூட, அதற்குத் தேவையான 67 வாக்குகள் கிடைக்காது. அந்தந்த கட்சிகளைச் சேர்ந்த அனைத்து செனட் உறுப்பினர்களும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்தக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ்
படக்குறிப்பு, பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ்

ஜனநாயகக் கட்சியினர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய முயல்வார்களா?

பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஹக்கீம் ஜெஃப்ரிஸ், பண வீக்கத்தைக் குறைப்பது, சாமானிய மக்களின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் தங்கள் கட்சி கவனம் செலுத்தும் என்று தெரிவித்துள்ளார். நியூயார்க்கை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜெஃப்ரிஸ், ஜனவரி மாதம் புதிய காங்கிரஸ் பதவியேற்கும்போது பிரதிநிதிகள் சபையின் அடுத்த சபாநாயகராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.

நவம்பர் 4ஆம் தேதி, "பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சிக் குழுவைச் சேர்ந்த எந்தவோர் உறுப்பினரும் என்னிடம் பதவி நீக்கம் குறித்து விவாதிக்கவில்லை" என்று அவர் கூறினார். சாமானிய மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதுடன், பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவதிலும் கட்சி கவனம் செலுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

"கட்டுப்பாடின்றிச் செயல்படும் நிர்வாகத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, அதிகாரச் சமநிலையை உறுதிப்படுத்தும் நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர் தலைமை தாங்குவார்கள்" என்று அவர் கூறினார்.

பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி மீண்டும் பெரும்பான்மையைப் பெறும் என்பது உறுதியான நிலையில், அந்த சபையின் மேற்பார்வைக் குழுவில் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் கார்சியா, "விசாரணை நடத்தப்படும்" என்று உறுதியளித்தார்.

"உங்கள் வழக்கறிஞர்களைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

பெரும்பான்மை கிடைத்தால், சம்மன்களை அனுப்பவும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கவும் ஜனநாயகக் கட்சியினருக்கு அதிகாரம் கிடைக்கும். இதன் மூலம், அவர்கள் டிரம்ப் நிர்வாகத்திடமும் அவரது குடும்பத்தினரிடமும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பதில்களைக் கோர முடியும்.

பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் ஒரே நபர் டிரம்ப் மட்டுமல்ல. இடைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்படுவதற்கு முன்பு, பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத்துக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் ஒரே நபர் டிரம்ப் மட்டுமல்ல. இடைக்காலத் தேர்தலுக்காக காங்கிரஸ் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு, பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத்துக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
படக்குறிப்பு, இடைக்காலத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, இனி தன்னிச்சையாக டிரம்ப் முடிவுகளை எடுக்க முடியாது.

டிரம்ப் இதுவரை எத்தனை முறை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்?

இதுவரை டிரம்ப் இரண்டு முறை பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார். ஆனால், இரண்டு முறையும் செனட் சபை அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில், டிரம்புக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட இரண்டு பதவி நீக்கக் குற்றச்சாட்டுகளை பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டது. முதல் குற்றச்சாட்டு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பானது, தனது அரசியல் போட்டியாளரை விசாரிக்குமாறு யுக்ரேன் அதிகாரிகளிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இரண்டாவது குற்றச்சாட்டு, காங்கிரஸின் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடர்பானது, விசாரணையைத் தடுக்க டிரம்ப் முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில், இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை செனட் சபை விடுவித்தது.

யூட்டா மாகாணத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் மிட் ரோம்னி மட்டுமே, தனது கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டு, டிரம்புக்கு எதிராகத் தீர்ப்பளிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில், டிரம்புக்கு எதிராகப் பிரதிநிதிகள் சபை மீண்டும் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்த முறை, 2021 ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க கேபிடோல் கட்டடத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக, "கிளர்ச்சியைத் தூண்டியது" என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நேரத்தில், 10 குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து விலகி, டிரம்புக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைக்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்தனர்.

இந்த 10 உறுப்பினர்களில் தற்போது இரண்டு பேர் மட்டுமே பதவியில் உள்ளனர். அவர்களில் ஒருவர், 2026ஆம் ஆண்டு மறுதேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மற்றவர்கள் காங்கிரஸில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர் அல்லது தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர்.

டிரம்ப் அதிபர் பதவியிலிருந்து விலகிய பிறகு, அவருக்கு எதிரான செனட் சபையின் பதவி நீக்க விசாரணை நடைபெற்றது. டிரம்ப் இனி பதவியில் இல்லாததால், அவருக்கு எதிரான விசாரணை தேவையற்றது என்று சில குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் கருதினர்.

செனட் சபையில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் டிரம்புக்கு எதிராகத் தீர்ப்பளிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதில் ஏழு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து விலகி, ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இருப்பினும், 57-43 என்ற வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த இந்த முடிவு, டிரம்புக்கு எதிராகத் தீர்ப்பளிக்கத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை எட்டவில்லை. செனட் சபை டிரம்பை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்ததால், அவர் மீண்டும் பொதுப் பதவிகளை வகிக்கத் தடை விதிப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு