'இரான் போரால்தான் குடியரசுக் கட்சி தோல்வியை சந்தித்தது' - ஜே.டி. வான்ஸ் கருத்துக்கு டிரம்ப் பதில் என்ன?

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்
    • எழுதியவர், மேடலின் ஹால்பர்ட்
    • பதவி, ‎
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தமைக்கு இரான் போர்தான் காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

"நாம் தோற்றதற்குக் காரணம் போர்தான். அதைத்தான் அதிபரும் நேற்றிரவு கூறினார்" என்று புதன்கிழமை காலையில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட தனது நீண்ட பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் தனது கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு வான்ஸ் வெளியிட்ட முதல் கருத்து இது. இரான் போர் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருந்தாலும், இரான் மீது தாக்குதல் நடத்தும் தனது முடிவை அவர் தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார்.

ஜே.டி. வான்ஸின் கருத்துக்குப் பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது. ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 100 டாலருக்கும் கீழே குறைந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலான காலத்தில் இல்லாத அளவுக்குச் சரிந்தது.

குடியரசுக் கட்சியின் இடைத்தேர்தல் தோல்விகள் குறித்து கருத்துக்கணிப்பு நிபுணர்களுடன் விவாதித்ததாக வான்ஸ் கூறினார்
படக்குறிப்பு, குடியரசுக் கட்சியின் இடைத்தேர்தல் தோல்விகள் குறித்து கருத்துக் கணிப்பு நிபுணர்களுடன் விவாதித்ததாக ஜே.டி. வான்ஸ் கூறினார்

வெளிநாடுகளில் அமெரிக்கா தலையிடுவதை வான்ஸ் நீண்டகாலமாகக் கேள்விக்கு உட்படுத்தி வந்துள்ளார். அவர் 2028ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும். இந்தச் சூழலில், மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இந்தப் போரில் இருந்து தம்மைப் பகிரங்கமாக விலக்கிக் கொள்ளவே இந்த அறிக்கையின் மூலம் அவர் முயன்றுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டைக் குடியரசுக் கட்சியினர் இழந்தது குறித்து கருத்துக் கணிப்பு நிபுணர்களுடன் விவாதித்ததாக வான்ஸ் கூறினார். குடியரசுக் கட்சி வாக்காளர்கள் வாக்களிக்க வராததால் இந்தத் தோல்வி ஏற்படவில்லை என்பதே அவர்கள் அளித்த விளக்கம் என்று அவர் தெரிவித்தார்.

"முக்கியப் பிரச்னை என்னவென்றால், 2024ஆம் ஆண்டில் டிரம்ப்/வான்ஸுக்கு வாக்களித்த பலர், 2026ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களித்துள்ளனர்" என்று வான்ஸ் கூறினார்.

இரான் போர், வாழ்க்கைச் செலவு, பணவீக்கம், ஆண்டுதோறும் அமெரிக்காவிடம் இருந்து பல பில்லியன் டாலர் உதவி பெறும் இஸ்ரேலுடனான தற்போதைய அமெரிக்க உறவு ஆகியவை தொடர்பாக நிர்வாகத்தின் மீது வாக்காளர்கள் கோபமாக இருந்ததாகத் துணை அதிபர் கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இரானுடனான போர் குறித்த அதிருப்தியை மேலும் விளக்கிய அவர், "அது பயனுள்ளதாக இருந்தது என்றும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு செனட் அவையை இழந்ததுகூட அதற்குத் தகுந்த விலைதான் என்றும் நீங்கள் வாதிட விரும்பினால், அப்படியே செய்யுங்கள். கொடுப்பதற்குத் தகுந்த விலைதான் அது என்று வாதிடுங்கள். அதை ஏற்றுக்கொண்டாலும் சரி, மறுத்தாலும் சரி, குறைந்தபட்சம் அது நேர்மையான வாதமாக இருக்கும். ஆனால் நாம் ஏன் தோற்றோம் என்பது அனைவருக்கும் தெரியும். இங்கிருந்து நாம் எங்கு செல்கிறோம் என்பது குறித்த எந்தவொரு நேர்மையான உரையாடலும் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும்" என்றார்.

குடியரசுக் கட்சியினர் தங்களது கோபத்தை ஆக்கபூர்வமான செயல்பாடுகளாக மாற்றி, "நாட்டைக் காப்பாற்றும் பணிக்குத் திரும்ப வேண்டும்" என்று வான்ஸ் வலியுறுத்தினார்.

"என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பது குறித்து கட்சிக்குள் நிறைய கருத்து மோதல்களும் விவாதங்களும் இருக்கும். நான் பெரிதும் மதிக்கும் கருத்துக் கணிப்பாளர் ஒருவர், கடைசிக் கட்டத்தில் பொருளாதாரம் குறித்த எங்களது பிரசாரம் போதுமான தெளிவுடன் இல்லை என்று கூறினார். அது உண்மைதான் என்பதில் எனக்கு ஐயமில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

வான்ஸின் கருத்துகளைத் தொடர்ந்து புதன்கிழமை பிற்பகலில் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 8%-க்கும் மேல் சரிந்து, ஒரு பீப்பாய் சுமார் 95 டாலராக இருந்தது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் விலையும் 8%-க்கும் மேல் குறைந்து, சுமார் 88 டாலரை எட்டியது. இரண்டுமே இரண்டு மாதங்களுக்கும் மேலான காலத்தில் இல்லாத குறைந்த விலையாகும்.

கடுமையான சரிவு ஏற்பட்டிருந்தபோதும், பிரெண்ட் விலை ஓராண்டுக்கு முன்பு இருந்ததைவிட இன்னும் கிட்டத்தட்ட 50% அதிகமாகவே உள்ளது.

வான்ஸின் கருத்துகள், மத்திய கிழக்கில் மேலும் பரவலான மோதல் ஏற்படும் அபாயத்தை முதலீட்டாளர்கள் மறுமதிப்பீடு செய்யவும் தூண்டின. அதேவேளையில், தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல், இரான் தொடர்பான மோதல் குறிப்பிடத்தக்க அளவில் தீவிரமடையும் வாய்ப்பைக் குறைப்பதாகச் சந்தைகள் கருதின.

புதன்கிழமை பேசிய அதிபர் டிரம்ப், வான்ஸின் கருத்து "பெருமளவில் சரியானது" என்று கூறினார். அதேநேரத்தில், இரானுடனான மோதல் அவசியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

"அந்தப் போரைப் பொறுத்தவரை, நான் எதையும் வேறுவிதமாகச் செய்திருக்க மாட்டேன் என்பதை உங்களிடம் கூற முடியும்" என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

முன்னதாக, செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய டிரம்ப், "இரான் விவகாரத்தில் நான் செய்வதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் பெட்ரோலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய குறுகிய கால விளைவை எதிர்கொள்ள அவர்கள் உண்மையில் தயாராக இருந்திருக்க மாட்டார்கள்" என்றார்.

மேலும், "நான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் குடியரசுக் கட்சி எளிதில் வெற்றி பெற்றிருக்கும்" என்றும் அவர் கூறிக்கொண்டார்.

இரான் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நவம்பரில் வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு வரத் தூண்டிய பல பொருளாதாரக் காரணிகளில் இதுவும் ஒன்று.

எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகளின் உயர்வால், செப்டம்பருடன் முடிவடைந்த ஓராண்டில் விலைகள் 3.7% அதிகரித்தன. தேர்தலுக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்காளர் கருத்துக் கணிப்புகளில், கிட்டத்தட்ட 80% பேர் பணவீக்கம் தங்களுக்குப் பொருளாதார சிரமங்களை ஏற்படுத்தியதாகக் கூறினர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு டிரம்பின் கொள்கைகளே காரணம் என்று 60% பேர் குற்றம் சாட்டினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு