'ஆந்திராவில் கரை ஒதுங்கிய 8 உடல்கள்': கலங்கும் காசிமேடு மீனவ குடும்பங்கள் - தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டது ஏன்?


'ஆந்திராவில் கரை ஒதுங்கிய 8 உடல்கள்'  சென்னை காசிமேடு மீனவர்களின் உடல்களா? கண்டறிவதில் சிரமம் ஏன்?
படக்குறிப்பு, கோப்புப்படம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஆந்திர மாநிலம் கொத்தபட்டணம் கடற்கரையில் எட்டு மீனவர்களின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி ஆந்திர கடலில் இருந்த சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் காணாமல் போன நிலையில், 'அவர்களின் உடல்கள்தானா?' என்பதைக் கண்டறிய குழு ஒன்று சென்றுள்ளதாக, மீன்வளத்துறை இயக்குநர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

காசிமேடு மீனவர்கள் காணாமல் போன விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான படகு கடந்த மாதம் 29-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றது.

பத்து நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடன் சூர்யா என்பவர் படகை ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் எட்டு மீனவர்கள் பயணம் செய்துள்ளனர். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி ஆந்திர மாநிலம் நிஜாம் பட்டணம் அருகே இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது புயல் தொடர்பான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இதனை அறிந்து படகை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்று நிறுத்துமாறு தான் அறிவுறுத்தியதாக படகின் உரிமையாளர் செல்வழகன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

காசிமேடு மீனவர் குடும்பங்கள்

'எச்சரித்தேன்... கேட்கவில்லை' - படகின் உரிமையாளர்

மீண்டும் படகை ஓட்டுநர் சூர்யா ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது நடந்த விவரங்கள் தொடர்பாக செல்வழகனிடம் கேட்டபோது, " வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறித்து படகில் இருந்த குப்பன் என்பவரிடம் பேசினேன். அவரோ, படகை ஓர் இடத்தில் நங்கூரம் போட்டு நிறுத்தியுள்ளதாகக் கூறினார்" என்கிறார்.

நவம்பர் 2-ஆம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் படகில் இருந்தவர்களுடன் செல்வழகன் பேசியுள்ளார்.

"படகை ஓட்டுவதாக இருந்தால் ராமாயப்பட்டணம் நோக்கிச் செல்லுமாறு கூறினேன். வானிலை எச்சரிக்கை குறித்து ஓட்டுநர் சூர்யாவிடம் கூறியபோது, அவர் அதைப் பொருட்படுத்தவில்லை" எனக் கூறுகிறார் செல்வழகன்.

இதையடுத்து, படகில் இருந்த குப்பன் என்பவரிடம் தான் பேசியதாகக் கூறும் அவர், "கொடா என்ற பகுதி காற்று பெரிதாக வீசாத பாதுகாப்பான பகுதி என்பதால் அங்கு சென்று நிறுத்துமாறு கூறினேன். ஆனால், படகை நங்கூரம் போட்டு நிறுத்தியுள்ளதாகக் கூறினர்" என்கிறார்.

"நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் படகில் தண்ணீர் ஏறுவதாக மற்றொரு படகுக்கு வயர்லெஸ் கருவி மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு எனது படகில் இருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஓட்டுநர் உள்பட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை" எனக் கூறுகிறார் செல்வழகன்.

காசிமேடு மீனவர் குடும்பங்கள்

'வான்வழித் தேடல்' - மீன்வளத்துறை கடிதம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஒன்பது மீனவர்களுடன் சென்ற விசைப்படகு குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் மீன்வளத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை மீனவர் சங்க பிரதிநிதிகள் கொண்டு சென்றனர்.

இதையடுத்து, சென்னை நேப்பியர் பாலம் அருகில் இயங்கி வரும் கடலோரக் காவல் படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறை உயர் அதிகாரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

படகில் இருந்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்கவும் படகைக் கண்டறியவும் வான்வழித் தேடலுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மீன்வளத்துறையின் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதுதவிர, படகின் உரிமையாளர் செல்வழகனின் ஏற்பாட்டில் இரண்டு விசைப்படகுகள், கடைசியாக படகின் ஓட்டுநர் சூர்யாவிடம் இருந்த தகவல் வந்த திசையை நோக்கி தேடுதல் பணியில் ஈடுபட்டன.

'தேடுதல் முயற்சிகளுக்குப் பிறகும் காணாமல் போன படகையோ அதில் இருந்த பணியாளர்களையோ குறிப்பிட்ட இடத்தில் கண்டறிய முடியவில்லை' என மீன்வளத் துறை தெரிவித்திருந்தது.

இதே தகவலை பிபிசி தமிழிடம் தெரிவித்த செல்வழகன், "மீனவர்களைத் தேடும் பணியில் நான்கு படகுகள் ஈடுபட்டிருந்தன. எனது தரப்பில் இருந்து இரண்டு படகுகள் அனுப்பப்பட்டன. ஆனால், படகு கடைசியாக இருந்த இடத்தில் தேடியபோது எதுவும் தென்படவில்லை" என்கிறார்.

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன ஒன்பது மீனவர்களின் குடும்பத்தினரும் காசிமேட்டில் உள்ள மீன்வளத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக குவிந்தனர்.

காசிமேடு மீனவர் குடும்பங்கள்

சாலை மறியல்... வாக்குவாதம்

இந்தநிலையில், ஆந்திர மாநிலம் கொத்தபட்டணம் கடற்கரையில் எட்டு மீனவர்களின் உடல்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில் உள்ளதாகவும் வியாழக்கிழமை மதியம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையறிந்து மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். தொடர்ந்து அப்பகுதியில் சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

அவர்களிடம் பேசுவதற்காக மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவும் நிதி அமைச்சருமான மரியவில்சன் வந்தார்.

அப்போது நிதி அமைச்சரிடம் பேசிய மீனவர்களின் குடும்பத்தினர், "படகில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. 13 பேர் செய்ய வேண்டிய வேலைக்கு ஒன்பது பேரை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்" எனக் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இந்தக் காட்சிகள் இணையதளங்களில் பரவின.

விசைப்படகில் இருந்து தகவல் கிடைத்த பிறகு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டிருந்தால் மீனவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

'கரை ஒதுங்கியுள்ள மீனவர்கள் காசிமேட்டைச் சேர்ந்தவர்கள்தானா?' என்பதை அடையாளம் கண்டறிவதற்கு அவர்களின் குடும்பத்தினருடன் ஓங்கோலில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருப்பதாக, சென்னை (வடக்கு) மீன்வளத்துறையின் உதவி இயக்குநர் ஜான் பெக்கர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மீன்வளத்துறை, காசிமேடு மீனவர் குடும்பங்கள்

கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது ஏன்? மீன்வளத்துறை இயக்குநர் விளக்கம்

மீனவர்களின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டால் அதனைக் கொண்டு வருவதற்கு குழு ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறுகிறார், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இயக்குநர் விஜய கார்த்திகேயன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " மீன்வளத்துறையின் உதவி இயக்குநர், மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர். மீனவர்களின் குடும்பத்தினருக்கு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என அவர் தெரிவித்தார்.

"படகு, கவிழ்ந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. உடல்களை உறவினர்கள் உறுதி செய்த பிறகே இதர விவரங்கள் தெரியவரும்" என்கிறார் அவர்.

"மீனவர்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது ஏன்?" என விஜய கார்த்திகேயனிடம் கேட்டபோது, "மற்றொரு படகுக்கு தகவல் கூறிய பிறகு கவிழ்ந்த படகின் டிரான்ஸ்பாண்டர் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை" என்கிறார்.

"கடலோரக் காவல் படையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மூலமாக இரண்டு முறை வான்வழியாக தேடுதல் பணி நடந்தது. கவிழ்ந்த நிலையில் படகு இருந்ததை அவர்கள் கண்டறிந்துள்ளனர்" என்கிறார் அவர்.

"காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்கள்தானா என்பதை உறுதி செய்த பிறகு அரசு சார்பாக உரிய நிவாரணம் வழங்கப்படும்" எனவும் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு