பெரியார் அறிவுலகத்திற்குள் தரமற்ற நூல்கள் வந்ததற்கு யார் பொறுப்பு? பெருமாள் முருகன் பேட்டி (10 கேள்வி பதில்கள்)

பெரியார் அறிவுலகத்திற்குள் தரமற்ற நூல்கள் வந்ததற்கு யார் பொறுப்பு? எழுத்தாளர் பெருமாள் முருகன் பேட்டி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கோவையில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்களை கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒரு இணைய இதழில் பதிவிட்டார். அகல் விளக்கு என்ற பதிப்பகத்தின் சார்பில் பொய்யான எழுத்தாளர்களின் பெயர்களைக் கொண்டு, மேம்பாடு அடையாத செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தரமற்ற புத்தகங்கள், அவசரமாக அச்சடிக்கப்பட்டு, வழக்கத்தை விட 5 மடங்கு அதிகவிலைக்கு விற்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

பெருமாள் முருகன், தமிழகத்தில் நூலகங்களுக்கு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட ஓர் உறுப்பினர்.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள வேளையில், அவரை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது. அவருடன் பிபிசி தமிழ் செய்தியாளர் சேவியர் செல்வக்குமார் நடத்திய கலந்துரையாடல் கேள்வி - பதில் வடிவில் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலகத்திற்குள் தரமற்ற நூல்கள் வந்ததற்கு யார் பொறுப்பு? எழுத்தாளர் பெருமாள் முருகன் பேட்டி

கேள்வி 1: நூலகங்களுக்கு நூல்களைப் பரிந்துரை செய்யும் குழுவில் இடம் பெற்றவர் என்ற முறையில் புத்தகங்கள் கொள்முதலில் உள்ள அரசின் நடைமுறை, அதில் எவ்வாறு முறைகேடு நடந்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: திமுக ஆட்சியில் புத்தகங்கள் கொள்முதலில் ஒரு புதிய கொள்கையைக் கொண்டு வந்தனர். அப்போது இளம் ஐஏஎஸ் அதிகாரி இளம்பகவத், அந்த துறை அதிகாரியாக இருந்தார். பதிப்பகத்தார் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், இணைய வழியாக பதிப்பகங்கள் நுால்களைச் சமர்ப்பிக்க போர்ட்டல் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த நுால்களை துறை சார்ந்த வல்லுநர்கள் பரிந்துரையைக் கேட்டு அதன் அடிப்படையில் அந்த புத்தகங்களை வாங்குவது அல்லது வேண்டாம் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அது சிறப்பான நடைமுறை. கடந்த 2024–2025, 2025–2026 இரு நிதியாண்டிலும் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது.

அதனால் சின்னச்சின்ன பதிப்பகங்கள் உட்பட அனைவருக்கும் ஆர்டர் கிடைத்தது. பெரிய பதிப்பகங்கள் கூட்டணி வைத்துக்கொண்டு அரசுக்கு புத்தகங்களை விற்பது தடுக்கப்பட்டது. அதில் பரிந்துரைக்கும் குழுக்களில் 100க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் இருந்தனர். உதாரணமாக அறிவியல் புத்தகங்களை இணைய வழியில் பார்க்கும் அறிவியல் வல்லுநர், அதைப் படித்து குறைந்தது 10 வார்த்தை குறிப்பு எழுதி பரிந்துரைப்பார்.

அதற்காக எழுத்தாளர்கள், வல்லுநர்களுக்கு ஒரு குறைந்தபட்ச தொகை வழங்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். குழுக்கள் புத்தகங்களைப் பரிந்துரைக்கும். அரசு ஒதுக்கப்படும் நிதிக்கேற்ப அந்த புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படும். பரிந்துரை செய்வது மட்டுமே குழுவின் பணி. அதை அரசு வாங்குகிறதா இல்லையா என்பது குழுவுக்குத் தெரியாது. முடிவெடுப்பது அரசுதான்.

பெரியார் அறிவுலகத்திற்குள் தரமற்ற நூல்கள் வந்ததற்கு யார் பொறுப்பு? எழுத்தாளர் பெருமாள் முருகன் பேட்டி

கேள்வி 2: இத்தனை குழுக்கள் பரிந்துரைத்த புத்தகங்களைத் தாண்டி பெரியார் அறிவுலகத்தில் இவ்வளவு தரமற்ற புத்தகங்கள் எப்படி வந்தன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பதில்: பொதுவாக நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யும் அந்த நடைமுறை, பெரியார் அறிவுலகத்திற்கு பின்பற்றப்படவில்லை. சிறப்பு நூலகம் என்ற வகையில் இதற்கு ஒரு தனி வழிமுறையைக் கொண்டு வந்தார்கள். அதாவது எழுத்தாளர்கள், வல்லுநர்களிடம் எந்தெந்த நூல்களை வாங்கலாம் என்று ஒரு பட்டியல் கோரினார்கள். உதாரணமாக நவீன இலக்கியங்கள் சார்ந்து என்னிடம் பட்டியல் வாங்கினர்.

அதுபோல அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்களிடம் இப்படி பட்டியல் பெறப்பட்டது. எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. அந்த பட்டியலை சம்பந்தப்பட்ட பதிப்பகங்களுக்கு அனுப்பி அந்த புத்தகங்களை வாங்கியிருக்கிறார்கள். சில வல்லுநர்கள், பதிப்பகங்களிடம் பட்டியலை வாங்கி விலையுடன் அரசுக்கு பரிந்துரை செய்தார்கள்.

பொதுவாக தமிழ் நூல்கள் அனைத்துக்குமே ஒரு பக்கத்துக்கு ஒரு ரூபாய் அல்லது ஒன்றரை ரூபாய் அளவிலேயே விலை வைக்கப்படும். எவ்வளவு தரமான காகிதம், அச்சு, வடிவமைப்பு இருந்தாலும் இதுதான் அதிகபட்சம். என்னுடைய நூல் உட்பட யாருடைய நூலாக இருந்தாலும் 300 பக்கமுள்ள ஒரு புத்தகத்திற்கு 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரைதான் விலை வைப்பார்கள். தமிழ்ச் சூழலில் இதுவே அதிகமென்று விமர்சனங்கள் வருவதுண்டு. ஆனால் ஆங்கிலப் புத்தகங்களை ஒப்பிடும் போது தமிழ் நூல்களின் விலை மிகவும் குறைவு.

பொது நூலகங்களுக்கு இந்த விலை கட்டுப்பாடு இருந்தது. ஆனால் பெரியார் அறிவுலகம் போன்ற சிறப்பு நூலகங்களுக்கு விலை கட்டுப்பாடு இல்லாததால்தான் 'அகல் விளக்கு' பதிப்பகத்தால் 300 பக்க புத்தகங்களுக்கு 1495, 1500 ரூபாய் என்றும், பீனிக்ஸ் பதிப்பகத்தின் 300 பக்க புத்தகங்களுக்கு ரூ.2 ஆயிரம் வரையும் விலை வைக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் விலை குறித்த குற்றச்சாட்டை நான் தெரிவித்தேன்.

கேள்வி 3: இத்தகைய தரமற்ற புத்தகங்கள் இவ்வளவு அளவில் இவ்வளவு அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டிருப்பதில் எங்கே தவறு நடந்துள்ளது என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?

பதில்: தமிழக அரசால் பல்வேறு துறை சார்ந்து நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுக்களில் இடம் பெற்றிருந்தவர்கள் அனைவருமே அதற்குத் தகுதியானவர்கள் என்பதுதான் எல்லோருடைய கருத்தாக இருந்தது. உதாரணமாக வரலாறு சார்ந்த குழுவில் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆயிரா வெங்கடாசலபதி, நவீன இலக்கியங்கள் சார்ந்த குழுவில் நான், ச.தமிழ்ச்செல்வன், அழகிய பெரியவன், சு.வேணுகோபால் ஆகியோர் இருக்கிறோம்.

இப்படி மிகமுக்கியமான வல்லுநர்கள் இடம் பெற்றிருந்ததால் இவ்வளவு மோசமான நூல்களை யாரும் பரிந்துரைத்திருக்க வாய்ப்பில்லை. அதனால் பரிந்துரைத்த புத்தகங்களைத்தான் அரசு வாங்கியிருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதேபோன்று குழுக்கள் பரிந்துரைத்த புத்தகங்கள் அனைத்தும் வாங்கப்பட்டுள்ளது என்பதையும் எங்களால் இதுவரை உறுதி செய்யமுடியவில்லை.

நான் பார்த்த வகையில் 'அகல் விளக்கு' புத்தகங்கள்தான் அதிகமாக இருக்கிறது. மற்ற பதிப்பகங்களின் புத்தகங்கள் மிகக்குறைவாகவே இருக்கின்றன. இன்னும் பல பெட்டிகள் பிரிக்கப்படவில்லை என்கிறார்கள். அவற்றைப் பிரித்தால்தான் நாங்கள் பரிந்துரைத்த புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதா, தரமற்ற நூல்கள் இன்னும் இருக்கிறதா என்று தெரியவரும்.

பெரியார் அறிவுலகத்திற்குள் தரமற்ற நூல்கள் வந்ததற்கு யார் பொறுப்பு? எழுத்தாளர் பெருமாள் முருகன் பேட்டி

கேள்வி 4: தரமற்ற புத்தகங்கள் பெரியார் அறிவுலகத்திற்குள் வந்ததற்கு யார் பொறுப்பு?

பதில்: நூலகங்களில் பணியில் இருப்பவர்களால் ஒரு புத்தகத்தின் தரத்தை மதிப்பிட முடியாது. அவர்கள் சீல் வைப்பது, அடுக்கி வைப்பது போன்ற பணிகளைத்தான் செய்வார்கள். இதில் பரிந்துரைத்தவர்களும், நூலக ஊழியர்களும் முடிவெடுப்பவர்கள் கிடையாது. ஆணை பிறப்பிக்கும் இடங்களில் இருப்பவர்கள்தான், இதில் முடிவெடுத்தவர்கள். அவர்களே இதற்குப் பொறுப்பு. அதைத்தான் விசாரணையில் கண்டுபிடிக்க வேண்டும்.

கேள்வி 5: பெரியார் அறிவுலகம் குறித்த உங்கள் பதிவில், ''பிரமாண்டமாக உருவாகும் ஒவ்வொன்றும் உள்ளீடற்ற வெற்றுக்கட்டடங்களாகச் சரிந்து போவதுதான் தமிழ்நாட்டின் பொதுவிதி.'' என்று கூறியிருந்தீர்கள். அதற்கான அர்த்தம் என்னவென்று விளக்க முடியுமா?

பதில்: நான் 30 ஆண்டுகள் உயர்கல்வித்துறையில் ஆசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவன். இப்போதுள்ள அரசு பல்கலைக் கழகங்களைத்தான் அப்படி நான் குறிப்பிடுகிறேன். ஒரு காலத்தில் அறிஞர்கள் பலர் ஆசிரியர்களாக இருந்து பல அறிஞர்களை உருவாக்கிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு எடுத்த பின், பணத்துக்காக தேவையற்ற அளவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பல்கலைக்கழகம் திவால் ஆகும் நிலையில் அங்கு அவர்களுக்கு வேலையே இல்லாததால் அந்த ஆசிரியர்கள் அரசு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். இப்போது அந்த பல்கலைக்கழகம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

அதேபோன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், ஆயிரம் ஏக்கர் பரப்பில் எம்ஜிஆரால் துவக்கப்பட்டது. கல்வெட்டு ஆராய்ச்சி, கடல்சார் ஆராய்ச்சி என பலவித ஆராய்ச்சிகளுடன் துவக்கப்பட்ட அந்த பல்கலைக்கழகம் இப்போது ஓர் அரசு கல்லுாரியைப் போலத்தான் நடக்கிறது.

உயர்கல்விக்காக ஆயிரம் ஏக்கர் ஒதுக்கி கட்டடங்கள் கட்டிய தொலைநோக்கு, பாழ்பட்டுள்ளது. இதுபோன்று பல்கலைக்கழகங்கள் அனைத்தும் வெறும் கட்டடங்களாக மாறிவரும் நிலையில்தான், அதேபோன்று பெரியார் அறிவுலகமும் வெறும் கட்டடமாக இல்லாமல் உண்மையிலேயே அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் ஓரிடமாக இருக்க வேண்டுமென்றுதான் அந்த கருத்தைத் தெரிவித்தேன்.

பெரியார் அறிவுலகத்திற்குள் தரமற்ற நூல்கள் வந்ததற்கு யார் பொறுப்பு? எழுத்தாளர் பெருமாள் முருகன் பேட்டி

கேள்வி 6: பெரியார் அறிவுலகத்தை திட்டமிட்டு அமைத்ததற்காக முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு கோவையில் திராவிடர் கழகம் சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டதற்கு மறுநாள், அங்கு புத்தகங்கள் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக நீங்கள் பதிவிட்டது அரசியல் ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே...

பதில்: ஒரு எழுத்தாளனாக என்னைப் பொறுத்தவரை, ஆட்சிகள் மாறலாம். ஆனால் அமைப்பு முறை தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டுமென்பதே என் நோக்கம். இதில் அரசியல் ரீதியாக இவர்கள் சரியா, அவர்கள் சரியா என்று நான் பார்க்கவில்லை. ஏராளமான மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் வருமிடத்தில் இவ்வளவு மோசமான புத்தகங்கள் இருக்கக்கூடாது என்பதுதான் ஒரு எழுத்தாளனாக என்னுடைய நிலைப்பாடு.

அந்த புத்தகங்களைப் படித்து எந்த மாணவரும் அறிவைப் பெறமுடியாது. யாரும் போட்டித்தேர்வு எழுத முடியாது. அதில் ஒரு வரி கூட சரியாக இல்லை. அதனால் எனக்குள் ஒரு பதைபதைப்பு ஏற்பட்டது. அதைத்தான் நான் வெளிப்படுத்தினேன். இந்த நேரத்தில்தான் அதை வெளிப்படுத்த வேண்டுமென்று எனக்குள் எந்த உள்நோக்கமும் கிடையாது.

பிரமாண்டமான கட்டமைப்பு கொண்ட பெரியார் அறிவுலகத்திற்குள் என்ன இருக்கிறது என்ற தேடலுடன் சென்றபோது எனக்கு அதிர்ச்சி தரக்கூடிய பெரிய ஏமாற்றமே கிடைத்தது. சமீபத்தில்தான் திறக்கப்பட்ட அறிவுலகத்தை சென்று பார்த்தபின்பே இது தெரிந்தது. அதனால் அந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. அதை இந்த நாளில்தான் வெளிப்படுத்த வேண்டுமென்ற எந்த அரசியல் திட்டமும் எனக்குக் கிடைக்காது. இப்போது எந்த அரசு தவறு செய்தது என்று கிளம்பியுள்ள விவாதம் எனக்கு அலுப்பூட்டுவதாகவுள்ளது.

கேள்வி 7: பெரியார் அறிவுலகத்தில் எல்லா தரப்பினருக்கும் பயன் தரக்கூடிய நல்ல தரமுள்ள புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

பதில்: புத்தகங்கள் கொள்முதலைப் பொறுத்தவரை, முந்தைய அரசு கடைபிடித்தபடி, இணைய வழியில் நூல்களை வாங்கித் தேர்வு செய்யும் பொது நூலகங்களுக்கான நடைமுறையை இத்தகைய சிறப்பு நூலகங்களுக்கும் பின்பற்றலாம். அதேநேரத்தில் எந்தெந்த புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்களை நூலகத்துறையின் இணையப் பக்கத்தில் மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

தேவைப்பட்டால் வேறு யாராவது படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களைத் தேர்வு செய்யவில்லை என்றால் அதற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் தரப்பட வேண்டும். அதாவது இன்னும் அதிகமான வெளிப்படைத்தன்மை வேண்டும். அதேபோன்று வல்லுநர்கள் குழு பரிந்துரைக்கும் புத்தகங்களைத் தவிர, வேறு புத்தகங்களை உள்ளே நுழைப்பதற்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் அந்த ஓட்டை அடைக்கப்பட வேண்டும்.

பெரியார் அறிவுலகத்திற்குள் தரமற்ற நூல்கள் வந்ததற்கு யார் பொறுப்பு? எழுத்தாளர் பெருமாள் முருகன் பேட்டி

கேள்வி 8: பெரியார் அறிவுலகத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட தரமற்ற புத்தகங்களை என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

பதில்: அந்த புத்தகங்கள் எங்கேயுமே இருக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. அதனால் பெரியார் அறிவுலகத்திலிருந்து அகற்றுவதோடு மட்டுமல்லாமல் அவை எங்குமே இல்லாத வகையில் அழிக்க வேண்டும். ஊழல் சார்ந்த விசாரணைக்குத் தேவைப்படும் வரை அவற்றை ஓரிடத்தில் வைத்திருக்கலாம். அதன்பின்பு அது மக்கள் பார்வையிலேயே படாத வகையில் முற்றிலும் அழிக்கப்படவேண்டும்.

கேள்வி 9: பெரியார் அறிவுலகத்தில் நூலகர்கள், பணியாளர்கள், விளக்கம் அளிப்பவர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் போதிய அளவில் நியமிக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அங்கேயும் நிலைமை அப்படித்தான் உள்ளது. அதைப்பற்றி நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை?

பதில்: இதைத்தான் ''உள்ளீடுகளற்ற வெறும் கட்டடம்'' என்று நான் குறிப்பிட்டிருந்தேன். அதற்குள் எல்லாமே அடங்கியிருக்கிறது. பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகளிலும் புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை வழிகாட்ட உரிய ஆசிரியர்கள், நூலகர்கள் இருப்பதில்லை. இதுபோன்ற அடிப்படையான விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். நூலகர்கள் உள்ளிட்ட போதிய ஊழியர்களை உடனே நியமிப்பது மிக அவசியம்.

இவற்றைத் தவிர்த்து, அங்கே நிறைய அறிவியல் உபகரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பராமரிப்பது, செயல் விளக்கம் அளிப்பது, கண்காணிப்பது எல்லாவற்றுக்கும் ஊழியர்களை நியமிக்க வேண்டும். இந்த அறிவுசார் கட்டமைப்பை மக்களுக்குப் பயனுள்ள வகையில் மாற்றும் வகையில், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு.

கேள்வி 10: சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம், கோவையில் பெரியார் அறிவுலகம் என பெரிய நகரங்களிலும் மாவட்ட வாரியாகவும் நூலகக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் முந்தைய அரசு அதிக அக்கறை காட்டியது. இன்றைய தலைமுறையிடம் வாசிப்பு குறைந்து வரும் நிலையில், இதுபோன்று நூலகங்கள் போன்ற கட்டடங்களால் பயனில்லை என்ற கருத்தை பலரும் வெளியிடுகின்றனரே...

பதில்: நூலகக் கட்டமைப்புகள் அவசியம்தான். அவை இருந்தால்தான் மற்றவற்றை திட்டமிடமுடியும். இந்த விஷயத்தில் அண்டை மாநிலமான கேரளத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அங்கே பொது நூலகங்களை சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள். நூலகங்களுக்கென உள்ளூர் குழுக்களை நியமித்து அவற்றுக்கு சில அதிகாரங்களைக் கொடுத்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.

அந்த குழுக்களில் அப்பகுதியிலுள்ள எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் இடம் பெறுகின்றனர். அவர்கள் அந்த குழுவில் இருப்பதை வருமானமாகக் கருதாமல் மரியாதையாகக் கருதி, இளைய தலைமுறையினரை நூலகங்களுக்கு வரவழைத்து இலக்கியக் கூட்டம், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். கலந்துரையாடுகிறார்கள். படைப்புகளை ஊக்குவிக்கிறார்கள்.

அதுபோல இங்கும் அமைத்தால் நிச்சயமாக வாசிப்பை அதிகப்படுத்த முடியும். இன்றைக்கும் இணைய வழியில் கிடைப்பதை விட அச்சு வடிவில்தான் அறிவுசார் தகவல்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. வாசிப்புப் பயிற்சியை இந்தத் தலைமுறைக்கு கொடுப்பதற்கு, நூலகங்களில் போதிய இருக்கை, காற்றோட்ட வசதி, குடிநீர், கழிப்பிடம், தேநீரகம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மிக முக்கியமாக தரமற்ற நூல்கள், நூலகங்களில் இடம் பெறுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். விற்காத புத்தகங்களை நூலகங்களுக்கு விற்றுவிடலாம் என்கிற மனோபாவம் பதிப்பகம் நடத்துவோரிடமே இருப்பது வேதனைக்குரியது. இந்த மனோபாவம் மாறினால் வாசிப்பை அதிகப்படுத்தி, நூலகங்களை உண்மையாகவே அறிவுசார் கட்டமைப்பாக மாற்ற முடியும்.

பெரியார் அறிவுலகத்திற்குள் தரமற்ற நூல்கள் வந்ததற்கு யார் பொறுப்பு? எழுத்தாளர் பெருமாள் முருகன் பேட்டி

பெருமாள் முருகன் குற்றச்சாட்டுக்கு பிறகு நடந்தது என்ன?

திமுக செய்த ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக பெருமாள் முருகனை பாராட்டி, தமிழக முதல்வர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டார். இந்த புத்தகங்கள் கொள்முதல் அனைத்தும் திமுக காலத்தில் நடந்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறிய தமிழக நூலகத்துறை அமைச்சர் ராஜ்மோகன், இதுகுறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிபிசியிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி, ''பெரியார் அறிவுலகத்தை உருவாக்கிய எஙகள் தலைவருக்கு நடந்த பாராட்டு விழாவை சகிக்க முடியாமல் இப்படியொரு குற்றச்சாட்டை பரப்பி திசை திருப்புகின்றனர். கட்டடப் பணியே முடியாதபோது எப்படி புத்தகம் வாங்கியிருப்பார்கள். அப்படி வாங்கியிருந்தால் அதை ஆய்வு செய்து அறிவுலகத்தில் வைத்திருக்க வேண்டியது இந்த அரசின் பொறுப்பு'' என்றார்.

இப்படியொரு பதிப்பகமே இல்லை என்றும், ஐஎஸ்பிஎன் எண்களே அந்த புத்தகங்களுக்கு இல்லை என்றும் பெருமாள் முருகன் கூறியிருந்த நிலையில், உண்மையில் அப்படியொரு பதிப்பகம் இருப்பதும், அந்த பதிப்பகத்தால் 2393 புத்தகங்களுக்கு ஐஎஸ்பிஎன் எண்கள் பெறப்பட்டிருப்பதும் பின்பு தெரியவந்தது.

பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன், ரூ.17 லட்சத்துக்கு மட்டுமே பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் விற்றதாகவும், புத்தகங்களில் இடம் பெற்றிருந்த த்ரிஷா விஜய் என்பது புனைப்பெயர் என்றும், இந்த குற்றச்சாட்டை தான் சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு