'இந்தச் செய்தியை வரவேற்கிறோம்' - அமெரிக்க இடைக்கால தேர்தல் பற்றி இரானில் என்ன பேசப்படுகிறது?

இரான், அமெரிக்க இடைக்காலத் தேர்தல், குடியரசுக் கட்சி, இடைக்காலத் தேர்தல் முடிவுகள், தேர்தல் முடிவுகள், டொனால்ட் டிரம்ப், முகமது பாகர் காலிபாஃப்
படக்குறிப்பு, அமெரிக்க வாக்காளர்கள் அனுப்பிய செய்தியை இரான் "ஏற்றுக் கொண்டதாக" முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்தார்.
    • எழுதியவர், ஹெலன் டேவிட்சன் & டேவிட் கிரிட்டன்
    • பதவி, ‎
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க மக்கள் போருக்கு எதிராக வாக்களித்து இருப்பதாக இரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் தெரிவித்துள்ளார்.

"இந்தச் செய்தியை நாங்கள் வரவேற்கிறோம்" என இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

"மற்ற நாடுகளின் செல்வந்தர்களுக்கும், மிரட்டிப் பணம் பறிப்பவர்களுக்கும் ஆதரவாகச் செயல்படுவதற்காக அமெரிக்க அரசு தனது மக்களின் விருப்பத்தைப் புறக்கணித்தால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எங்கள் எதிர்ப்பின் தீவிரத்தை அப்போது அவர்கள் உணர்வார்கள்" என அவர் எச்சரித்தார்.

இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பின்னடைவைச் சந்தித்ததற்கு, போரும் அதனால் உயர்ந்த பெட்ரோல் விலையும் ஓரளவுக்குக் காரணம் என்பதை டிரம்ப் ஒப்புக்கொண்டார். இருப்பினும், பிப்ரவரியில் இஸ்ரேலுடன் இணைந்து ரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதல் குறித்து வருத்தம் ஏதுமில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள், இரான் மீதான அமெரிக்காவின் அணுகுமுறையை மாற்றும் என்று தான் கருதவில்லை என இரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமனெயி தெரிவித்துள்ளார்.

இரான் போர் தொடங்கியதில் இருந்து பொதுவெளியில் தோன்றாத அவர் வெளியிட்ட அறிக்கையில், "இரானுக்கு எதிரான தனது பகைமையான போக்கை அமெரிக்கா கைவிடும் என்று யாராவது நினைத்தால், அது அவர்களின் மிகப்பெரிய அறியாமையாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இரான், அமெரிக்க இடைக்காலத் தேர்தல், குடியரசுக் கட்சி, இடைக்காலத் தேர்தல் முடிவுகள், தேர்தல் முடிவுகள், டொனால்ட் டிரம்ப், முகமது பாகர் காலிபாஃப்

ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், இடைக்காலத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய டிரம்ப், "இந்த முடிவுகளுக்கு இரான் விவகாரமும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்" என்று கூறிய அவர், "இரான் தொடர்பாக நான் எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால், அந்தப் போர் அமெரிக்காவில் எரிபொருள் விலைகளில் ஏற்படுத்திய தாக்கமே வாக்காளர்களைத் தங்கள் கட்சியில் இருந்து விலகச் செய்தது" என்றும் அவர் கூறினார்.

பிபிசியின் அமெரிக்க செய்திக் கூட்டாண்மை நிறுவனமான சிபிஎஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதைத் "தானே தீர்மானிப்பேன்" என்று டிரம்ப் கூறினார். "நான் எப்போது முடிவுக்குக் கொண்டு வருகிறேனோ, அப்போதுதான் இந்த மோதல் முடிவுக்கு வரும்" என்றார்.

இரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு அமெரிக்காவும் இஸ்ரேலும் முழு அளவிலான போரில் ஈடுபடக்கூடும் என்று டிரம்ப் சமீபத்திய வாரங்களில் எச்சரித்திருந்தார்.

ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான தாக்குதல் குறித்த சர்ச்சை

இதற்கிடையில், புதன்கிழமை ஹோர்மூஸ் நீரிணையில் நான்கு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் கடற்படை கண்ணிவெடிகளில் சிக்கித் தீப்பிடித்ததாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்தது.

இரான் அரசுடன் நெருங்கிய தொடர்புடைய செய்தி நிறுவனமான வெளியிட்ட தகவலின்படி, அந்த நான்கு கப்பல்களில் இரண்டு தொடர்ந்து எரிந்துகொண்டிருப்பதாகவும், மற்ற இரு கப்பல்களும் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஐ.ஆர்.ஜி.சி கூறியுள்ளது. தடை செய்யப்பட்ட தெற்குப் பாதை வழியாகச் செல்ல முயன்றதால் அவை தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கூற்றுகளை ஆய்வு செய்த பிபிசி வெரிஃபை, நான்கு டேங்கர் கப்பல்களும் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல், குடியரசுக் கட்சி, இடைக்காலத் தேர்தல் முடிவுகள், தேர்தல் முடிவுகள், டொனால்ட் டிரம்ப், முகமது பாகர் காலிபாஃப், தெஹ்ரான்
படக்குறிப்பு, நவம்பர் 4 அன்று தெஹ்ரானின் மையப் பகுதியில் அமெரிக்க அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மற்றொரு சம்பவத்தில், ஓமனின் முசந்தம் தீபகற்பத்தில் உள்ள லிமா நகருக்கு வடகிழக்கே சுமார் 14 கடல் மைல் தொலைவில், செவ்வாய்க் கிழமை மாலை ஒரு டேங்கர் கப்பல் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக ஐக்கிய ராஜ்ஜிய கடல்சார் வர்த்தகச் செயல்பாட்டு மையம் (UKMTO) தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

திங்கள்கிழமை, லிமா நகருக்கு வடகிழக்கே நடந்த மற்றொரு தாக்குதலில், 'தாவ்' (dhow) எனப்படும் மரத்தால் ஆன படகில் இருந்த இந்திய குழுவினர் ஒருவர் கொல்லப்பட்டார். அந்தப் படகில் இருந்த மற்ற 13 பணியாளர்களையும் ஓமன் அதிகாரிகள் மீட்டனர். இதற்கிடையில், ஹோர்மூஸ் நீரிணைக்கு மேலே பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரக ஆளில்லா விமானத்தைத் தங்கள் படைகள் சுட்டு வீழ்த்தியதாக இரானின் புரட்சிகர காவல் படை புதன்கிழமை தெரிவித்தது.

இதற்கு முன்னதாக, திங்கள்கிழமை இரவும் இதேபோன்றதொரு கூற்றை ஐ.ஆர்.ஜி.சி வெளியிட்டிருந்தது. அப்போது, இரானின் புரட்சிகர காவல் படை அமெரிக்க விமானம் ஒன்றைத் தாக்கியதற்குப் பதிலடியாக, இரானின் கெஷ்ம் தீவில் அமெரிக்க ராணுவம் வரையறுக்கப்பட்ட அளவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக 'ஃபைனான்ஷியல் டைம்ஸ்' இதழுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய மோதல் நிலை குறித்து தாம் திருப்தியடைந்து இருப்பதாகவும், இதை ஓர் "உண்மையான போராக" கருதவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த வாரத்துக்குள் இரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்ததாகக் கூறப்படும் "குறிப்பிட்ட எச்சரிக்கைகள்" குறித்துக் கேட்கப்பட்டபோது, டிரம்ப், "தாக்குதல் நடத்துவதற்கு நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம். ஆனால், அத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாமலும் போகலாம்" என்று பதிலளித்தார்.

இரான், அமெரிக்க இடைக்காலத் தேர்தல், குடியரசுக் கட்சி, இடைக்காலத் தேர்தல் முடிவுகள், தேர்தல் முடிவுகள், டொனால்ட் டிரம்ப், முகமது பாகர் காலிபாஃப்

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பினரும் மறைமுகமாக நடத்தி வந்த பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாக முன்னேற்றமின்றி உள்ளன. இந்நிலையில், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் செவ்வாய்க்கிழமையன்று பேசுகையில், இந்த நெருக்கடிக்கு "பேச்சுவார்த்தை மூலம்" தீர்வு காணத் தனது அரசு முயன்று வருவதாகத் தெரிவித்தார்.

போர் மீண்டும் தீவிரமடைந்தால், "அதனால் யாருக்கும் எந்தப் பயனும் கிடைக்காது" என்றும் அவர் எச்சரித்தார். இதற்கு முன்பு பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதவை என்று கருதப்பட்ட விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு இரானின் உச்சத் தலைவர் அரசுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் பெசெஷ்கியான் குறிப்பிட்டார்.

இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் திங்கள்கிழமை கூறுகையில், கத்தார் மத்தியஸ்தம் செய்து வரும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள், கடந்த செப்டம்பர் மாதம் இரான் முன்வைத்த ஏழு அம்சத் திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவதாகத் தெரிவித்தார். இருப்பினும், அந்தத் திட்டம் சுருக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குள் செயல்படுத்தக் கூடிய வகையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இரான் போர் தொடங்கியதைத் தொடர்ந்து, வணிகக் கப்பல்கள் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாலும், அமெரிக்க கடற்படை அந்தப் பகுதியில் முற்றுகையிட்டதாலும், இந்தக் கடல்வழிப் பாதையில் கப்பல் போக்குவரத்து பெருமளவில் முடங்கியது.

போரை முடிவுக்குக் கொண்டு வரவும், ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அமெரிக்காவும் இரானும் ஜூன் மாதம் ஓர் ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்தை எட்டின. ஆனால், இரான் மீண்டும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாலும், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை மீண்டும் அமல்படுத்தியதாலும், சில வாரங்களிலேயே அந்த ஒப்பந்தம் முறிந்தது.

ஹோர்மூஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை முழுமையாகக் கைவிட இரான் மறுத்து வருகிறது. இதற்கிடையில், ஓமன் கடல் வழியாகச் செல்லும் மாற்றுப் பாதையைப் பயன்படுத்தும் கப்பல்களையும் இரான் குறிவைக்கத் தொடங்கியது.

வளைகுடா அரபு நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் டேங்கர் கப்பல்களுக்கு அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு அளித்து வருகிறது.

கூடுதல் செய்திகள்: கேப்ரியலா பொமெராய்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு