அமெரிக்க தேர்தல்: இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் வென்றவர்கள் யார், தோற்றவர்கள் யார்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் அனைவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதே நேரத்தில், டிரம்பின் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்

வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்

சுஹாஸ் சுப்ரமணியம்

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் 10-ஆவது நாடாளுமன்ற தொகுதியில் இருந்து பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சுஹாஸ் சுப்ரமணியம் மீண்டும் வெற்றி பெற்றார். குடியரசுக் கட்சி வேட்பாளர் டேவ் பெக்வித்தை அவர் தோற்கடித்தார்.

இந்தத் தேர்தலில் சுஹாஸ் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். டேவ் பெக்வித் சுமார் 38 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

பிரமிளா ஜெயபால்

வாஷிங்டன் மாகாணத்தின் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மீண்டும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பிரமிளா ஜெயபால். இந்தத் தேர்தலில் அவர் 87 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.

பியா தண்டியா

ஃபுளோரிடா மாகாணத்தின் 22-ஆவது நாடாளுமன்ற தொகுதியில் குடியரசுக் கட்சி வேட்பாளர் கேசி ஆஸ்கரை தோற்கடித்து, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பியா தண்டியா. இதன் மூலம் அவர் முதல் முறையாகப் பிரதிநிதிகள் சபைக்குள் நுழைகிறார்.

2026 இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் மேற்கொண்ட தொகுதி மறுவரையறையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட புதிய தொகுதியில் பியா தண்டியா வெற்றி பெற்றுள்ளார்.

ஹார்லெம் பகுதியில் ஆசிரியராகவும் உயர்நிலைப் பள்ளி முதல்வராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. ஆப்பிள் நிறுவனத்திலும் வேலை செய்துள்ளார்.

இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த பெற்றோருக்குப் பாம் பீச் கவுண்டியில் பிறந்து வளர்ந்த பியா தண்டியா, தனது தேர்தல் பிரசாரத்தில் கல்வி, விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தார்.

ரோ கன்னா

கலிஃபோர்னியா மாகாணத்தின் 17-ஆவது நாடாளுமன்ற தொகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ரோ கன்னா அமோக வெற்றி பெற்றார். 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, பிரதிநிதிகள் சபையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

அமி பேரா

கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்து போட்டியிட்ட அமி பேரா, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கு எட்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தோல்வியடைந்த இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல வேட்பாளர்களும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

விவேக் ராமசாமி

குடியரசுக் கட்சியின் விவேக் ராமசாமியைத் தோற்கடித்து, ஓஹியோ ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஏமி ஆக்டன் வெற்றி பெற்றுள்ளார். கடும் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் ஏமி ஆக்டன் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த இரண்டு தசாப்தங்களில் ஓஹியோ ஆளுநர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் ஜனநாயகக் கட்சியினராகவும், இந்தப் பதவியைப் பெறும் முதல் பெண்ணாகவும் ஆக்டன் மாறுகிறார்.

ஓஹியோ, கடந்த மூன்று அதிபர் தேர்தல்களிலும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்புக்கு வாக்களித்துள்ளது.

மருத்துவரான ஏமி ஆக்டன், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஓஹியோ மாகாண சுகாதாரத் துறை இயக்குநராகப் பணியாற்றினார்.

ராமசாமியின் பிரசாரக் குழு, ஆக்டன் மீதான மிகவும் தனிப்பட்ட தாக்குதல் விளம்பரத்தை வெளியிட்டதையடுத்து இந்த தேர்தல் எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது. ஆக்டனின் பிரிந்துவாழும் தாய் இந்த விளம்பரத்தில் இடம்பெற்று ஆக்டனுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

அந்த விளம்பரத்தில், ஆக்டனின் தாயார் டோனா ஆர்தர், தனது மகள் "வாழ்நாள் முழுவதும் பொய் சொல்லியிருக்கிறார்" என்று கூறினார்.

ஆனால், ஆக்டன் சிறுமியாக இருந்தபோது அவரைப் பாலியல் வல்லுறவு செய்ததாக ஆர்தரின் கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறித்து விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை.

தேர்தலுக்கு முந்தைய கடைசி சில வாரங்களில் இந்தச் சர்ச்சைக்குரிய விளம்பரம் முக்கிய விவாதமாக இருந்தது. தெற்கு கரோலினாவின் முன்னாள் ஆளுநரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹேலி இதை விமர்சித்தார்.

இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட சிலர் இந்த விளம்பரத்தை ஆதரித்தனர்.

இந்த விளம்பரம் "வலிமையானது" என்று வர்ணித்த டிரம்ப், அதைத் தொடர்ந்து ஒளிபரப்புமாறு ராமசாமியை ஊக்குவித்தார்.

ரிதேஷ் டாண்டன்:

கலிஃபோர்னியா மாகாணத்தின் 17-ஆவது நாடாளுமன்றத் தொகுதியில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ரிதேஷ் டாண்டன், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ரோ கன்னாவிடம் தோல்வியடைந்தார்.

மகேஷ் 'மேக்ஸ்' கனோர்கர்:

வடக்கு கரோலினா மாகாணத்தில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகேஷ், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வலேரி ஃபூஷியிடம் தோல்வியடைந்தார்.

இந்தத் தேர்தலில் மகேஷுக்கு 20 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன. வலேரி சுமார் 80 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

சிவா அய்யாதுரை:

மசாசூசெட்ஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார் சிவா அய்யாதுரை. இந்தத் தொகுதியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எட் மார்க்கி வெற்றி பெற்றார்.

நிரவ் ஷேத்:

வாஷிங்டன் மாகாணத்தின் 7-ஆவது நாடாளுமன்றத் தொகுதியில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட நிரவ் ஷேத், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பிரமிளா ஜெயபாலிடம் தோல்வியடைந்தார்.

இந்தத் தேர்தலில் பிரமிளா சுமார் 88 சதவீத வாக்குகளைப் பெற்றார். நிரவ் ஷேத்துக்கு சுமார் 12 சதவீத வாக்குகளே கிடைத்தன.

டிரம்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்திருப்பதைக் காட்டுகின்றன. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு எதிராக வாக்காளர்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 435 இடங்கள் உள்ளன. இந்தத் தேர்தலில் அனைத்து இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தச் செய்தி எழுதப்படும் நேரத்தில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 228 இடங்களிலும், டிரம்பின் குடியரசுக் கட்சி 139 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த அவையின் மொத்தம் 367 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, 100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட்டில் 35 இடங்களுக்கு இடைக்காலத் தேர்தல் நடைபெற்றது. அவற்றில் 33 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது செனட்டில் ஜனநாயகக் கட்சிக்கு 54 இடங்களும், குடியரசுக் கட்சிக்கு 44 இடங்களும் உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு