'இப்படியொரு இறப்பை பார்த்ததில்லை' - கடலூரில் ஒரு வாரத்தில் பல்லாயிரம் கோழிகள் உயிரிழப்பு

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

"எனக்கு கறிக்கோழி வளர்ப்பில் 15 ஆண்டுகால அனுபவம் உள்ளது. பண்ணையில் சுமார் ஐந்தாயிரம் கோழிகளை வளர்த்து வந்தேன். ஒரே வாரத்தில் சுமார் நான்காயிரம் கோழிகள் இறந்துவிட்டன. எந்த மருந்தும் கேட்கவில்லை" எனக் கூறுகிறார், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கமலக்கண்ணன்.

தீபாவளி பண்டிகையை மையமாக வைத்து கோழிகளை வளர்த்து வந்த தனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் சுமார் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கூறி வரும் நிலையில், அரசு இந்த எண்ணிக்கையை மறுத்துள்ளது.

"ஆய்வக முடிவுகள் வெளிவரும்போது கோழிகள் இறப்புக்கான காரணம் தெரியவரும்" என, பிபிசி தமிழிடம் பேசிய மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் முருகவேல் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் நொச்சிக்காடு, தியாகவல்லி, திருச்சோபுரம், தம்மனாம்பேட்டை, ஆலப்பாக்கம் ரயிலடி, நடுத்திட்டு உள்ளிட்ட கிராமங்களில் கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.

கடற்கரையோரங்களில் செயல்பட்டு வந்த இந்தப் பண்ணைகளில் கடந்த ஒரு வாரத்தில் பல்லாயிரக்கணக்கான கோழிகள் இறந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

"அக்டோபர் 29 ஆம் தேதியில் இருந்தே கோழிகள் படிப்படியாக இறக்கத் தொடங்கிவிட்டன" எனக் கூறுகிறார் கமலக்கண்ணன்.

இவர் கடற்கரையோரத்தில் கோழிப் பண்ணையை நடத்தி வருகிறார்.

'இப்படியொரு இறப்பை பார்த்ததில்லை'

"எனது பண்ணையில் சுமார் ஐந்தாயிரம் கோழிகளை வளர்த்து வந்தேன். அனைத்தும் நன்றாக வளர்ந்து வந்தன. எந்தப் பிரச்னையும் இதுவரை இருந்ததில்லை. திடீரென பின்காலை இழுத்துக் கொண்டு இறக்கையை விரித்துக் கொண்டு இறந்தன" என்கிறார் அவர்.

"கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைப்படி சில மருந்துகளைக் கொடுத்தோம். ஆனால், எந்த மருந்துக்கும் நோய் கட்டுப்படவில்லை. எனக்குக் கோழி வளர்ப்பில் 15 ஆண்டுகால அனுபவம் உள்ளது. இப்படியொரு இறப்பை நான் பார்த்ததில்லை" எனக் கூறுகிறார் கமலக்கண்ணன்.

"இதுவரை மூன்று முறை கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்துவிட்டுச் சென்றுள்ளனர். ஆய்வக முடிவுகள் வெளியிடப்படாததால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

கோழிகள் உயிரிழப்பதை அறிந்து மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் முருகவேல் தலைமையிலான குழுவினர் கோழிப் பண்ணைகளில் ஆய்வை மேற்கொண்டனர்.

உயிரிழந்த கோழிகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை மற்றும் நாமக்கல்லில் உள்ள அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கோழிகளுக்கு அசாதாரண அறிகுறிகள் தென்பட்டாலோ, திடீர் உயிரிழப்பு ஏற்பட்டாலோ கால்நடை மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்குமாறு கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோழிகள் இறப்புக்கு பருவநிலை காரணமா?

இதுதொடர்பாக, மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் முருகவேலிடம் பிபிசி தமிழ் பேசியது.

"நோய்த் தொற்றுக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும். அதுவரை கோழிப் பண்ணைகளுக்குப் புதிதாக கோழிக் குஞ்சுகள் எதையும் கொண்டு வந்து வளர்க்கக் கூடாது எனக் கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிவித்துள்ளோம்" என அவர் தெரிவித்தார்.

"கடலூர் மாவட்டத்தில் ஆறு பண்ணைகளில் கோழிகள் இறந்துள்ளன. அதற்கான காரணத்தைக் கண்டறிவது தொடர்பாக சென்னை மற்றும் நாமக்கல்லில் உள்ள ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவுகள் தெரிந்துவிடும்" எனவும் அவர் தெரிவித்தார்.

"பருவநிலையும் ஒரு காரணமாக இருக்கலாம்" எனக் கூறும் முருகவேல், " கடலூரில் வெயிலின் தாக்கம் இருந்தது. தற்போது மழை தொடங்கிவிட்டது. கோழிப் பண்ணைகள் பலவும் கடற்கரையோரங்களில் உள்ளன. ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் அதன் காரணமாக இறந்ததா என்பன உள்பட அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து வருகிறோம்" என அவர் தெரிவித்தார்.

ஆறு கோழிப் பண்ணைகளில் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை மறுத்துப் பேசும் கோழிப் பண்ணை உரிமையாளர் கமலக்கண்ணன், "எனது பண்ணையில் மட்டும் சுமார் நான்காயிரம் கோழிகள் இறந்துவிட்டன. இதேபோல் இதர பண்ணைகளைக் கணக்கிட்டால் சுமார் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் மடிந்துவிட்டன" என்கிறார்.

"கோடைகாலத்தில் வெப்ப அலையின் தாக்கத்தால் கோழிகள் உயிரிழக்க நேரிடும். அதற்கான மருந்துகளைக் கொடுத்து சரிசெய்வோம். மழைக் காலத்தில் கோழிகள் நன்றாக வளரும். அதன் காரணமாக இறந்திருக்கலாம் என்ற அதிகாரிகள் கருத்தை ஏற்க முடியவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

தனக்கு மட்டும் 90 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அவர், "தீபாவளி அன்று விற்பனை செய்வதற்காக அவற்றை வளர்த்து வந்தோம்" எனவும் தெரிவித்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கூறியது என்ன?

'பறவைக் காய்ச்சல் பாதிப்பால் கோழிகள் இறந்திருக்கலாம்' என்ற கருத்தும் இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி, "கோழிகளுக்கு குறைந்த வீரியம் கொண்ட பறவைக் காய்ச்சல் இல்லை என்பதை ஆய்வக பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமையன்று ஊடகங்களிடம் இதுகுறித்துப் பேசியுள்ள அவர், கோழி தீவனத்தில் நச்சுப் பொருட்கள் ஏதேனும் கலந்திருந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

கோழிகளின் உயிரிழப்பைக் கட்டுப்படுத்தவும் தொற்று பரவுவதைத் தடுக்கவும் அனைத்து நடவடிக்கைளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கமலி கூறியுள்ளார்.

"இறந்த கோழிகளின் மாதிரிகளை ஆய்வக சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அங்கு கிடைக்கும் முடிவுகளின்படி மற்ற கோழிகளுக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என்பதை முடிவு செய்வோம்" எனக் கூறியுள்ள அவர், "கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு