தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி சாத்தியமா? ஆதவ் அர்ஜூனா பேச்சால் எழும் விவாதம்

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டுக்கென தனிக்கொடியை உருவாக்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தெரிவித்த கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற 'தமிழ்நாடு நாள்' நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை பாஜக விமர்சித்துள்ளது.

நவம்பர் 1-ஆம் தேதி 'தமிழ்நாடு நாள்' கடைப்பிடிக்கப்பட்டது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளை இது குறிக்கிறது.

இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 'எத்தனையோ மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களுக்கென கொடி இருக்கிறது' என்று தெரிவித்தார்.

தமிழை முதன்மைப்படுத்தி ஒரு கொடியை உருவாக்க வேண்டும் என்று கூறிய அவர், "அதை நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 ஆகிய தேதிகளில் நம்முடைய முதல்வர் கையால் முதல்முறையாக ஏற்ற வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஏற்ற வேண்டும். தேசியக் கொடிக்குச் சமமாக தமிழுடைய பெருமையை போற்றக்கூடிய ஒரு கொடியை தமிழ்நாட்டுக்காக உருவாக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்." என்றார்.

பாஜகவின் விமர்சனம் என்ன?

ஆதவ் அர்ஜுனாவின் கருத்தை விமர்சித்து பதிவிட்டுள்ள பாஜகவின் வினோஜ் பி. செல்வம், இந்த வகை சொல்லாடல், பிரிவினைவாத மனநிலையை வளர்க்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், "இது மக்களின் தமிழ் அடையாளத்தையும் இந்திய அடையாளத்தையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாக கருதக் கற்றுக்கொடுக்கிறது. இரண்டையுமே பெருமையாகக் கொள்ள வேண்டிய சூழலில், ஏன் ஒரு பிளவை உருவாக்க வேண்டும்?," என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த கால கோரிக்கைகள்

இதைப்போலவே கடந்த 2021-ஆம் ஆண்டு 'தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும்' என்கிற கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி எழுப்பியிருந்தது.

அதே போல் கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற விசிக மாநாடு ஒன்றிலும் தனிக்கொடிக்கான கோரிக்கை எழுப்பப்பட்டதோடு மாதிரி கொடி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு முன்பு, 1970-ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதற்காகத் தயாரிக்கப்பட்ட கொடி வடிவமைப்பை டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் காட்டினார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

மற்ற மாநில முதலமைச்சர்களுடன் கலந்தாலோசித்து இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கருணாநிதியின் இந்தக் கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் குர்னாம் சிங் அதற்கு ஆதரவு தெரிவித்து, 'தனிக் கொடி என்பது தேசியக் கொடிக்கு இழைக்கப்படும் அவமரியாதையோ அல்லது அவமதிப்போ அல்ல'' என்று கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு சில தமிழ் அமைப்புகள் 'மாநில கொடி' என ஒன்றை வெளியிட்டிருந்தன. அதை ஏற்ற முயன்றதற்காக இருவர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களுக்கு தனிக்கொடி உள்ளன?

கடந்த 2019-ஆம் ஆண்டு வரையில் ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமே அதிகாரப்பூர்வ கொடி இருந்தது என்றும் கர்நாடகாவில் ஏற்றப்படும் மாநிலக் கொடி அதிகாரப்பூர்வ அந்தஸ்து இல்லாமல் உள்ளது என்றும் கூறுகிறார் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அசோக் வர்தன் ஷெட்டி.

கர்நாடகாவில் சிவப்பு, மஞ்சள் நிறம் அடங்கிய கொடி ஒன்று அம்மாநிலத்தின் கொடியாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த நவம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற 'கர்நாடக மாநில நாள்' நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இருவண்ணக் கொடியை ஏற்றினார்.

அதைத் தொடர்ந்து பேசிய சிவக்குமார், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலான கன்னடக் கொடிக்கு அதிகாரப்பூர்வ மாநிலக் கொடி அந்தஸ்தைப் பெற்றுத் தர உறுதியாக இருக்கிறோம் என்று கூறியதாக டெக்கான் ஹெரால்ட் செய்தி தெரிவிக்கிறது.

அந்தச் செய்தியின்படி, "முன்னதாக, நாங்கள் அமைச்சரவையில் ஒரு முடிவை எடுத்து, மத்திய அரசிடம் கோரிக்கை ஒன்றையும் சமர்ப்பித்திருந்தோம். ஆனால், அதற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை," என்றும் அவர் கூறினார்.

அதனுடன் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியுடன் கன்னடக் கொடியையும் ஏற்றுவதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்க முன்மொழிந்திருப்பதாகவும் சிவக்குமார் குறிப்பிட்டார்.

மாநில அரசுகள் தனிக்கொடி வைத்துக் கொள்ள முடியுமா?

இந்திய அரசியலமைப்பின் 51A(a) பிரிவின்படி, இந்திய அரசியலமைப்பிற்கு உள்பட்டு நடப்பதும், அதன் கொள்கைகள் மற்றும் நிறுவனங்களையும், தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதிப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் அளித்த பதில் ஒன்றில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்திய அரசியலமைப்பில் மாநிலத்திற்கென தனிக் கொடி இருப்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் மாநிலங்கள் தங்களுக்கென சொந்த கொடியை வைத்துக் கொள்வதை தடை செய்யும் எந்தச் சட்டமும் இல்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதே கருத்தை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரனும் முன்வைக்கிறார்.

இந்தியக் கொடி விதிமுறையின் முக்கியமான அம்சங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. அந்த விதிகளின்படி,

  • தேசியக் கொடியை, வேறொரு கொடியுடன் அல்லது கொடிகளுடன் சேர்த்து ஒரே கொடிமரத்தில் ஏற்றக்கூடாது.
  • தேசியக் கொடியை விட உயர்ந்த நிலையிலோ, அதற்கு மேலாகவோ அல்லது அதன் அருகிலோ வேறெந்தக் கொடியையோ அல்லது அலங்காரத் தோரணங்களையோ வைக்கக்கூடாது.

மாநிலங்களுக்கு ஒரு நிலப்பரப்பு, அதிகாரப்பூர்வ மொழி, சின்னம் ஆகியவை உள்ளபோது ஏன் ஒரு கொடி இருக்கக்கூடாது? என்று சந்துரு கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கர்நாடகத்திற்கென ஒரு கொடி உள்ளது. கர்நாடக மாநிலம் உருவான தினத்தில் (நவம்பர் 1) அனைத்துத் தெருக்களிலும் இந்தக் கொடி ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் எனத் தனித்தனி கொடி இருக்கலாம். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் வரை, அந்த மாநிலத்திற்கு என்று தனி அரசியலமைப்பு இருந்தது," என்று தெரிவித்தார்.

மாநில அரசுகள் விரும்பினால் அவர்களுக்கென தனிக்கொடி வைத்துக் கொள்வதில் சட்டச் சிக்கல் இல்லை என்கிறார் பாலச்சந்திரன்.

தொடர்ந்து பேசிய அவர், "அரசியலமைப்புச் சட்டமும் சரி, தேசிய சின்னம் மற்றும் கொடி தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகளும் சரி தேசியக் கொடி எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. மாநிலங்களுக்கான கொடி பற்றி அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. வெளிப்படையான சட்டப்பூர்வ தடை எதுவும் இல்லை. தேசியக் கொடிக்கு அவமதிப்பு இல்லாதவாறு மாநிலங்கள் தங்களுக்கென தனிக்கொடி வைத்துக் கொள்வதில் பிரச்னை இருக்காது." என்றார்.

ஆனால் எந்தச் சூழல்களில் இந்தக் கோரிக்கைகள் எழுப்பப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிடும் அவர், "மாநிலத்தின் அடையாளம் என்கிற நோக்கில் ஒருமித்த கருத்துடன் இது முன்னெடுக்கப்பட்டால் வரவேற்கத்தக்க முடிவு தான். ஆனால் முக்கியமான பிரச்னைகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் விளம்பரத்துக்காக திசைதிருப்பும் நோக்கில் செய்யக்கூடிய ஒன்றாக இருக்கக்கூடாது." என்றார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தவெக செய்தித் தொடர்பாளர் பழ.செல்வகுமார் மறுக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்தக் கருத்தை தமிழ்நாடு நாள் அன்று தான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதை திசைதிருப்பும் நோக்கம் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தமிழ் தேசிய உணர்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை. திராவிட கட்சிகள் இதைப்பற்றி பேச மட்டுமே செய்தன, தவெக தான் அதற்கு செயல்வடிவம் கொடுக்க முனைந்துள்ளது." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு