ரூ.20 கோடி வங்கி கொள்ளை வழக்கில் பல்கலை. மாணவர்கள் கைது - ஒன்றரை ஆண்டுக்கு பிறகு துப்பு துலங்கியது எப்படி?

வங்கி லாக்கர் (மாதிரிப் படம்)
படக்குறிப்பு, வங்கி லாக்கர் (மாதிரிப் படம்)
    • எழுதியவர், முகமது காசிம்
    • பதவி, பிபிசி உருது, குவெட்டா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், காவல்துறையிடம் சிக்காமல் வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். ஆனால், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையினர் அவர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பேலா மாவட்டத்தின் கடந்த ஆண்டு நடைபெற்ற வங்கிக் கொள்ளை தொடர்பான சம்பவம் இது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, ஆயுதமேந்திய நபர்கள் வங்கியிலிருந்து 20 கோடியே 20 லட்சம் பாகிஸ்தான் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது சாதாரண கொள்ளைச் சம்பவம் அல்ல. காவல்துறையிடம் சிக்காமல் இருப்பதற்காகக் கொள்ளையர்கள் விரிவாகத் திட்டமிட்டிருந்தனர்.

பாதுகாப்புப் படையினரின் சீருடைகளை அணிந்துகொண்டு, சில பரிவர்த்தனைகளைச் சரிபார்க்க வந்திருப்பதாகக் கூறி அவர்கள் வங்கிக்குள் நுழைந்துள்ளனர்.

லாஸ்பேலா மாவட்டத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளர் நஜீபுல்லா பந்த்ரானி கூறுகையில், விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட நபரின் வங்கிக் கணக்கிலிருந்து முக்கியமான தடயம் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

"கொள்ளைச் சம்பவத்திற்கு முன்பு அவரது வங்கிக் கணக்கில் ஆயிரக்கணக்கான ரூபாய் அளவிலேயே பரிவர்த்தனைகள் நடைபெற்றிருந்தன. ஆனால், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தத் தொகை கோடிக்கணக்கான ரூபாயாக அதிகரித்தது" என்று அவர் கூறினார்.

இந்த விசாரணையில் தொடர்புடைய அதிகாரி ஒருவர், தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பிபிசி உருதுவிடம் பேசினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் முன்பு வங்கியில் பணியாற்றியிருந்ததாக அவர் தெரிவித்தார். இதனால், வங்கியில் பணம் எங்கு வைக்கப்பட்டிருக்கும், அதிகபட்ச தொகையை எவ்வாறு எடுக்க முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருந்ததாக அந்த அதிகாரி கூறினார்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் நிலையப் பொறுப்பாளர் முகமது குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

ஆனால், அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அவர் பலத்த காயமடைந்தார். இதில் அவரது ஒரு கண்ணில் பார்வை பறிபோனது.

காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, "குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்தக் கொள்ளையை முழுமையாகத் திட்டமிட்டதுடன், சம்பவத்திற்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பின்னர் தீவைத்துக் கொளுத்தினர். தடயங்கள் அனைத்தையும் அழிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது."

லாஸ்பேலா மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தலைமறைவாக உள்ள மற்றவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்

வங்கி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள், பின்னர் இந்த வாகனங்களைப் பயன்படுத்தியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
படக்குறிப்பு, வங்கி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள், பின்னர் இந்த வாகனங்களைப் பயன்படுத்தியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வங்கிக் கொள்ளை 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்றது.

வங்கி மேலாளர் ஃபலக் ஷேர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, பாதுகாப்புப் படையினரின் சீருடை அணிந்த ஆறு ஆயுதமேந்திய நபர்கள், வாகனம் ஒன்றில் வந்து வங்கியின் பிரதான நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்துள்ளனர்.

"வங்கிக்குள் நுழைந்தவுடன், ஒரு பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த வந்திருப்பதாகக் கூறிய அவர்கள், வங்கி மேலாளர் எங்கே இருக்கிறார் என்று கேட்டதாகச் செயல்பாட்டு மேலாளர் ஜஹாங்கிர் தொலைபேசியில் தெரிவித்தார்" என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி மேலாளர் ஃபலக் ஷேர் கூறுகையில், "நான் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, காவலர்கள் நவாஸ் அலி மற்றும் முகமது தாவூத் ஆகியோரைத் துப்பாக்கியின் பின்பகுதியால் தாக்கி அவர்கள் காயப்படுத்தியிருந்தனர். காவலர்களிடமிருந்து ஜி3 ரகத் துப்பாக்கி ஒன்றையும் அவர்கள் பறித்துச் சென்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

முதல் தகவல் அறிக்கையின்படி, வங்கியில் இருந்த 2 கோடியே 2 லட்சம் ரூபாய் பணத்தை ஆறு சாக்குகளில் நிரப்பிய சந்தேக நபர்கள், அவற்றை காரின் பின்பகுதியில் வைத்துள்ளனர். பின்னர், வங்கி ஊழியர்களைப் பணப் பாதுகாப்பு அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காவல்துறையினருடன் துப்பாக்கிச் சண்டை

வங்கி கொள்ளைச் சம்பவத்தில் சந்தேகத்திற்குரியவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து, லாஸ்பேலா காவல் துறைத் தலைவர் நஜிபுல்லா பந்த்ரானி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
படக்குறிப்பு, வங்கி கொள்ளைச் சம்பவத்தில் சந்தேகத்திற்குரியவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து, லாஸ்பேலா காவல் துறைத் தலைவர் நஜிபுல்லா பந்த்ரானி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

வங்கிக் கொள்ளை நடைபெற்றபோது, ஓத்தல் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியாக முகமது பணியாற்றி வந்தார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் ஓத்தல் நேஷனல் வங்கியில் கொள்ளை நடைபெற்றதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

காவல்துறையினருடன் அவர் வங்கிக்குச் சென்றபோது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏற்கெனவே அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

பழைய மாடல் கார் ஒன்றில் ஆர்சிடி நெடுஞ்சாலை நோக்கி அவர்கள் சென்றதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் கிடைத்தன.

பின்னர், அந்த வாகனம் பலோச் கோத் பகுதியை நோக்கிச் சென்றது தெரியவந்ததாக முகமது தெரிவித்தார்.

அந்த காரைக் காவல்துறையினர் துரத்திச் சென்றனர்.

"நாங்கள் நெருங்கியபோது, அவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில் என் மீது இரண்டு தோட்டாக்கள் பாய்ந்தன. ஒன்று காலிலும் மற்றொன்று கண்ணுக்கு அருகிலும் பாய்ந்தன" என்று முகமது தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் தான் காயமடைந்த பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மலைப்பகுதியை நோக்கித் தப்பிச் சென்றதாகவும், கொள்ளைக்குப் பயன்படுத்திய வாகனத்திற்குத் தீவைத்ததாகவும் அவர் கூறினார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் காருக்குத் தீவைத்தது ஏன்?

கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் தலைமையகம் (கோப்புப் படம்)
படக்குறிப்பு, கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் தலைமையகம் (கோப்புப் படம்)

கொள்ளைக்குப் பயன்படுத்திய கார் மூலம் காவல்துறையினர் தங்களைக் கண்டுபிடித்துவிடக்கூடும் என்பதை குற்றம்சாட்டப்பட்டவர்கள் அறிந்திருந்ததாக, விசாரணைக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசிய அந்த அதிகாரி, காரிலிருந்து கைரேகைகள் உள்ளிட்ட தடயவியல் ஆதாரங்களைக் காவல்துறையினர் சேகரித்திருக்க முடியும் என்று கூறினார்.

மலைப்பகுதிக்குள் அந்தக் காரை ஓட்டிச் செல்ல முடியாத சூழலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"காரை அங்கேயே விட்டுச் சென்றிருந்தால், காவல்துறையினர் அதைக் கைப்பற்றியிருப்பார்கள். எனவே, கைரேகைகள் உள்ளிட்ட அனைத்துத் தடயங்களையும் அழிப்பதற்காகக் காருக்குத் தீவைத்தனர்" என்று அந்த அதிகாரி கூறினார்.

கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆயுதங்களும் காருடன் சேர்த்து எரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடக்கத்திலிருந்தே இவ்வாறு திட்டமிட்டிருந்தனர். இந்தச் சம்பவத்தை வழக்கமான கொள்ளையிலிருந்து மாறுபட்டதாகக் காட்டி, காவல்துறையினரைத் திசைதிருப்புவதே அவர்களின் நோக்கமாக இருந்தது" என்று அந்த அதிகாரி கூறினார்.

லாஸ்பேலா மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் நஜீபுல்லா பந்த்ரானியின் கூற்றுப்படி, கொள்ளையில் தொடர்புடைய ஐந்து பேர் லாஸ்பேலா கடல்சார் அறிவியல் பல்கலைக்கழகத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆவர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றம்சாட்டப்பட்ட நபர் அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் தற்போதும் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். மற்றவர்கள் தங்களது படிப்பை முடித்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் 25 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

"இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்ட நபர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து கொள்ளையைத் திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளார்" என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களில் ஒருவர், இதற்கு முன்பு துர்பத் நகரில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றியிருந்ததாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இதனால், வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், பணம் எங்கு வைக்கப்பட்டிருக்கும் என்பது குறித்தும் அவருக்குத் தெரிந்திருந்ததாக அந்த அதிகாரி கூறினார்.

இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டதாகவும், அதன் மூலம் வங்கியில் வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையை கொள்ளையடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு துப்பு துலங்கியது எப்படி?

கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு பெருந்தொகையான பணம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அது சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
படக்குறிப்பு, கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு பெருந்தொகையான பணம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அது சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்தவித எதிர்ப்புமின்றி வங்கிக்குள் நுழைய விரும்பியதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்காகப் பாதுகாப்புப் படையினரின் சீருடைகளைப் பயன்படுத்த முடிவுசெய்த அவர்கள், அவற்றை இணையவழியில் ஆர்டர் செய்துள்ளனர்.

சீருடைகளுக்கான துணிகளை வாங்கித் தைத்துக் கொள்வதற்குப் பதிலாக, ஒரு நிறுவனத்திடமிருந்து இணையவழியில் அவற்றை வாங்கியுள்ளனர்.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தச் சீருடைகள் வாங்கப்பட்டதாகவும், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கிக் கொள்ளை நடைபெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

லாஸ்பேலா மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் நஜீபுல்லா பந்த்ரானி கூறுகையில், இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவது காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக இருந்ததாகத் தெரிவித்தார்.

விசாரணையின் தொடக்கத்தில் காவல்துறையின் இன்ஃபார்மர்கள் (ரகசிய தகவல் அளிப்பவர்கள்) மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், பின்னர் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த விசாரணையில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபரின் வங்கிக் கணக்கு முக்கியப் பங்கு வகித்ததாக அவர் தெரிவித்தார்.

கொள்ளைச் சம்பவத்திற்கு முன்பு அந்த வங்கிக் கணக்கில் சிறிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளே நடைபெற்றிருந்தன. ஆனால், கொள்ளைக்குப் பிறகு கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது தெரியவந்தது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அந்த வங்கிக் கணக்கில் 17 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டதாக நஜீபுல்லா பந்த்ரானி தெரிவித்தார்.

ஒரே வங்கிக் கணக்கில் திடீரென இவ்வளவு பெரிய தொகைக்குப் பரிவர்த்தனைகள் நடைபெற்றது காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களின் கைப்பேசிகளும் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் ஆய்வுக்காக அவை பஞ்சாப் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனை, உள்ளூர் தொழிலதிபர் ஒருவரின் வங்கிக் கணக்கிலும் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இந்தப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதை அந்தத் தொழிலதிபர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பாக நீதித்துறை நடுவர் முன்னிலையில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி வணிக நடவடிக்கைகளிலும் முதலீடு செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

4 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வாகனங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்கும் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பணம் மற்றும் சொத்துகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூத்த காவல் கண்காணிப்பாளர் நஜீபுல்லா பந்த்ரானியின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டவர்கள் 14 நாட்கள் காவல்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.

பின்னர், அவர்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களைத் தொடர்புகொள்ள முடியாததால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்களின் தரப்புக் கருத்தைப் பெற முடியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு