பிறந்தநாள் கொண்டாட்டம்: 'காவல்துறை சைரன் ஒலி கேட்டு பயந்து ஓடிய 2 மாணவர்கள் உயிரிழந்தனர்' - என்ன நடந்தது?

    • எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தெலங்கானாவில் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் மின்வேலியில் சிக்கி இரண்டு பொறியியல் மாணவர்கள் உயிரிழந்தனர். மொய்னாபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விளைநிலத்தில் காட்டுப் பன்றிகள் நுழைவதைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியால் இந்த விபரீதம் நிகழ்ந்தது.

"மின்சாரம் தாக்கியதில் இரு மாணவர்களும் உயிரிழந்தனர். மின்வேலி அமைத்த விவசாயி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று மொய்னாபாத் காவல் ஆய்வாளர் மல்லிகார்ஜுன ரெட்டி தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான மோக்‌ஷ சரண், ஹைதராபாத்தின் ராஜேந்திரநகர், உப்பர்பள்ளியைச் சேர்ந்தவர். மற்றொருவரான யஷ்வந்த், பால்கம்பேட்டையைச் சேர்ந்தவர்.

இருவரும் மொய்னாபாத் அருகே உள்ள கே.ஜி. ரெட்டி பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் பொறியியல் படித்து வந்தனர்.

இதுதொடர்பாக பேசிய காவல்துறையினர், "மொய்னாபாத் மண்டலத்தில் உள்ள பெத்தா மங்கலாரம் அருகே திறந்தவெளிப் பகுதியில், அருண் என்ற மாணவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு ஒரு குழுவினர் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்" என்று தெரிவித்தனர்.

"இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு ரோந்து வாகனம் ஒன்று அந்தச் சாலையைக் கடந்து சென்றது. அப்போது சைரன் ஒலித்ததால் பிறந்தநாள் விருந்தில் இருந்த மாணவர்கள் அச்சமடைந்து அங்கிருந்து ஓடத் தொடங்கினர்" என்று மொய்னாபாத் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

அப்போது, யஷ்வந்த் மற்றும் சரண் ஆகிய இரு மாணவர்களும் அருகிலிருந்த நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கிக்கொண்டனர். மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

"விசாரணையில், அந்த விருந்தில் சுமார் எட்டு மாணவர்கள் பங்கேற்றிருந்தது தெரியவந்தது. சம்பவ இடத்தில் மது பாட்டில்களையும் கண்டெடுத்தோம். காவல்துறையினர் வருவதைக் கண்டு அச்சமடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றபோதுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது" என்று காவல் ஆய்வாளர் மேலும் கூறினார்.

உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரைத் தொடர்புகொண்டு கருத்துப் பெற பிபிசி முயன்றது. ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்த நிலத்தில் விவசாயம் செய்துவரும் போலிச்செரு ராஜிரெட்டி என்பவர் மீது மொய்னாபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மின்வேலி அமைத்த விவசாயி மீது வழக்குப்பதிவு

மின்சாரத் துறை விதிமுறைகளை மீறி, வேலியில் மின்சாரம் பாய்ச்சிய விவசாயி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிபிசியிடம் பேசிய விவசாயி ராஜி ரெட்டி, வேலியில் மின்சாரம் பாய்ச்சியது தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், இதனால் இத்தகைய விபரீதம் ஏற்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

"இந்த நிலம் என்னுடையது அல்ல. நெல் பயிரிடுவதற்காகக் குத்தகைக்கு எடுத்துள்ளேன். காட்டுப்பன்றிகள் அடிக்கடி விளைநிலத்துக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதால், பயிர்களைப் பாதுகாக்கவே மின்வேலி அமைத்தேன். மின்வேலி அமைப்பது தவறு என்று எனக்குத் தெரியும். ஆனால், காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லை" என்று ராஜி ரெட்டி தெரிவித்தார்.

'சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டது'

சம்பவ இடத்தை மின்சாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ராஜி ரெட்டி என்ற விவசாயி மின்வேலியை நேரடியாக மோட்டார் ஸ்டார்ட்டருடன் இணைத்திருந்தது தெரியவந்தது. அந்த வேலியில் 440 வோல்ட் மின்சாரம் பாய்ந்திருக்கலாம் என்றும், அதில் சிக்கியதாலேயே மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதுகுறித்து இப்ராஹிம்பாக் மின்சாரத் துறையின் கோட்டப் பொறியாளர் ரமேஷ் சந்திரா பிபிசியிடம் கூறுகையில், "சம்பவத்தைத் தொடர்ந்து, மின்வேலிக்குச் சென்ற மின் இணைப்பைத் துண்டித்துவிட்டோம். மோட்டாருக்காக வழங்கப்பட்ட மின்சாரத்தைச் சட்டவிரோதமாக வேலிக்குப் பயன்படுத்தியதற்காக, மின்சாரச் சட்டம், 2003-ன் பிரிவு 135-ன் கீழ் அந்த விவசாயி மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்" என்றார்.

மின்வேலிக்கு மின்சாரம் பாய்ச்சுவது குற்றம் என்பது குறித்து, உள்ளூர் ஊராட்சித் தலைவர்கள் , சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் உதவியுடன் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடரும் உயிரிழப்புகள்

தெலங்கானாவில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், 181 பேர் மின்சார விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக மின்சாரத் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 151 பேர், மின்வேலிகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதால் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, விவசாயிகள் தங்கள் வயல்களைச் சுற்றி வேலிகள் அமைக்கின்றனர். சிலர் சூரிய சக்தியில் இயங்கும் மின்வேலிகளைப் பயன்படுத்துகின்றனர். மற்றவர்களோ, வேலிகளை நேரடியாகப் பிரதான மின்சார இணைப்புடன் இணைக்கின்றனர். இத்தகைய வேலிகளை எதிர்பாராமல் தொடும் வழிப்போக்கர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

சூரிய சக்தியில் இயங்கும் மின்வேலிகளால் ஏற்படும் ஆபத்து ஒப்பீட்டளவில் குறைவு என்றாலும், அவற்றைப் பிரதான மின்சார இணைப்புடன் நேரடியாக இணைப்பது உயிருக்கு ஆபத்தானது என்று மின்சாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இதுபோன்ற மின்வேலிகளை அமைக்க வேண்டாம் என்று விவசாயிகளிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு