அர்னாப் புயல்: 150கி.மீ வேகத்தில் வீசும் காற்று; 15 மாவட்டங்களில் வெள்ள அபாயம் - சென்னையிலும் மழை பெய்யுமா?

பட மூலாதாரம், TamilNadu WeatherMan/X
அக்டோபர் 28ஆம் தேதி அதிகாலை நிலவரப்படி, வங்கக்கடலில் உருவான அதிதீவிரமான 'அர்னாப்' புயல், புதன்கிழமை (அக்டோபர் 28) அதிகாலை ஆந்திர பிரதேசக் கடற்கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.
அதிகாலை சுமார் 1.20 மணியளவில் புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ஆந்திர பிரதேசத்தின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாமுக்கு தெற்கே புயல் கரையைக் கடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்னாப் புயல் நரசாபுரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் கரையைக் கடந்து கொண்டிருப்பதாக ஆந்திர பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதிதீவிரப் புயலாக வலுப்பெற்ற அர்னாப், மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை நண்பகலுக்குள் புயல் முழுமையாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் தொடர்ந்து பெய்யும் என்பதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பிரகர் ஜெயின் கேட்டுக்கொண்டுள்ளார். புயலின் தாக்கம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், IMD/X
ஆந்திராவின் பல பகுதிகளில் கடும் பாதிப்பு
ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் மரங்களும் மின் கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பொது மக்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.
இரவு முழுவதும் பெய்த மழையால் தாழ்வான பகுதிகள் பலவும் நீரில் மூழ்கியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. பகடாலபேட்டை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காகத் தனி நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
கோனசீமா மாவட்டத்தில் சுமார் 6,000 மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஏனாமில் கனமழை: நீரில் மூழ்கிய பல பகுதிகள்
புதுச்சேரி மாநிலம் ஏனாமில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாக பிபிசி செய்தியாளர் கரிகிபாட்டி உமகாந்த் தெரிவித்துள்ளார். அர்னாப் புயலின் தாக்கத்தால் ஏனாம் அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இந்தப் பகுதியில் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், IMD/X
ஆந்திராவின் 15 மாவட்டங்களில் திடீர் வெள்ள அபாயம்
அக்டோபர் 27 இரவு 10 மணிக்கு வெளியிடப்பட்ட தேசிய புயல் எச்சரிக்கை அறிக்கையில், அக்டோபர் 29 அதிகாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியில் ஆந்திர பிரதேசத்தின் 15 மாவட்டங்களில் உள்ள சில நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களிலும் மிதமானது முதல் அதிகமானது வரையிலான திடீர் வெள்ள அபாயம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாபட்லா, குண்டூர், கிருஷ்ணா, என்டிஆர், ஏலூரு, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா, காக்கிநாடா, அல்லூரி சீதாராம ராஜு, அனகாப்பள்ளி, விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், பார்வதிபுரம் மன்யம் ஆகிய மாவட்டங்கள் இந்த எச்சரிக்கையில் இடம்பெற்றுள்ளன.
மழையால் ஏற்கெனவே ஈரப்பதம் அதிகரித்துள்ள நிலப்பரப்புகளிலும் தாழ்வான பகுதிகளிலும் நீர் தேங்குவதற்கும், திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, ஆறுகள் மற்றும் ஓடைகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் குறித்து பிபிசி தெலுங்கு செய்தி வெளியிட்டுள்ளது. ஆற்றங்கரையோரங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், வெள்ளநீர் வேகமாகப் பாயும் தரைப்பாலங்கள் மற்றும் ஓடைகளைக் கடக்க முயல வேண்டாமென்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை; நிவாரண மையங்கள் தயார்
புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள ஆந்திர பிரதேச அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், நிவாரண முகாம்களில் அத்தியாவசிய வசதிகளை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். ஆந்திர பிரதேசத்தில் சுமார் 1,800 புயல் நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தெலுங்கு செய்தி தெரிவித்துள்ளது.
மேலும் அந்தச் செய்திப்படி, கிழக்கு கோதாவரி, காக்கிநாடா, கோனசீமா, கிருஷ்ணா, என்டிஆர், விஜயநகரம், விசாகப்பட்டினம், ஏலூரு, அனகாப்பள்ளி, போலவரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளில் பல கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, காக்கிநாடா, கோனசீமா, அனகாப்பள்ளி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், குடிசை வீடுகள் மற்றும் பாதுகாப்பற்ற கட்டடங்களில் வசிப்போர் அருகிலுள்ள நிவாரண மையங்களுக்குச் செல்லுமாறு ஆந்திர மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பிரகர் ஜெயின் அறிவுறுத்தியதாக பிபிசி தெலுங்கு தெரிவித்துள்ளது.
ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிப்பு
புயல் காரணமாக ஆந்திர பிரதேசத்தில் அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளில் 53 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு கடலோர ரயில்வேயின் ஆரம்பகட்ட அறிவிப்பை மேற்கோள்காட்டி பிபிசி தெலுங்கு உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்த ரத்துகள் விஜயவாடா, மச்சிலிப்பட்டினம், ராஜமுந்திரி, நரசாபுரம், காக்கிநாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையிலான சேவைகளைப் பாதித்தன.
இதைத் தொடர்ந்து, பிற ரயில்வே சேவைகளையும் சேர்த்து 101 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், மேலும் 15 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டதாகவும் அக்டோபர் 27 இரவு வெளியான ரயில்வே தகவல்களை மேற்கோள்காட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா விமான நிலையங்களில் அக்டோபர் 27 அன்று குறைந்தது 21 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், TamilNadu Weatherman/X
புயலின் தாக்கத்தால் சென்னையில் கடல் சீற்றம்
ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகர்ந்த அர்னாப் புயலின் தாக்கம் தமிழகத்தின் வடக்குக் கடலோரப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூரில் அக்டோபர் 27 அன்று கடல் அலைகள் உயரமாக எழுந்து, எண்ணூர் விரைவுச் சாலையின் ஒரு பகுதியில் கடல்நீர் புகுந்ததால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடல்நீர் சாலைக்குள் புகுந்ததில் வாகனங்கள் பாதிக்கப்பட்டதாகவும், தாழங்குப்பம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
தமிழகத்தின் வடக்குக் கடற்கரையையொட்டிய பகுதிகளில் அக்டோபர் 28 நண்பகல் வரை கடல் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என்றும், அதன் பிறகு கடல் நிலை படிப்படியாகச் சீரடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்த நிலையில், எண்ணூரில் கடல் கொந்தளிப்பு அக்டோபர் 27 இரவு 11.30 மணிக்குப் பிறகு படிப்படியாகக் குறையக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை கடலோரத்தின் தற்போதைய நிலை குறித்த உறுதியான தகவலை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.
அர்னாப் புயலின் தாக்கம்: சென்னையில் மழை பெய்யுமா?
இதனிடையே, அர்னாப் புயல் ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகர்ந்தாலும், அக்டோபர் 28 அன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 27 பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் கணித்திருந்தது.

பட மூலாதாரம், Andhra Pradesh State Disaster Management Authority
இருப்பினும், வடதமிழகக் கடற்கரையையொட்டிய கடல் பகுதிகளில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அக்டோபர் 27 இரவு வெளியிடப்பட்ட கடலோர வானிலை அறிக்கையின்படி, சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் மூன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டும், இரண்டாம் எண் பகுதிசார் எச்சரிக்கைக் குறியீடும் ஏற்றப்பட்டிருந்தன. எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலும் மூன்றாம் எண் உள்ளூர் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
இதற்கிடையே, புயலின் தாக்கத்தால் ஆந்திர பிரதேசத்தை அடுத்துள்ள தெலங்கானாவிலும் அக்டோபர் 28 அன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், இடியுடன் கூடிய மழையின்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ.?
அர்னாப் புயலின் வலிமை தொடர்பாக பிரதீப் ஜான் தனது எக்ஸ் பதிவில், செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் புயலின் தொடர்காற்று வேகம் மணிக்கு 200 கிலோமீட்டரை நெருங்குவதாக மதிப்பிடப்பட்டு இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த 2014 அக்டோபர் 12 அன்று விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்த ஹுத்ஹுத் புயலின்போது, ஒரு நிமிட சராசரி அடிப்படையில் மணிக்கு 181.6 கிலோமீட்டர் தொடர்காற்று வேகம் பதிவானதாகவும் அவர் தனது பதிவில் ஒப்பிட்டிருந்தார்.
இருப்பினும், இந்தச் செயற்கைக்கோள் மதிப்பீட்டை அர்னாப் புயல் கரையைக் கடந்தபோது தரையில் பதிவான காற்றின் வேகமாக எடுத்துக்கொள்ள முடியாது. புயல்களின் காற்று வேகத்தை மதிப்பிடப் பயன்படுத்தப்படும் தரவுகளும் சராசரி கணக்கீட்டு முறைகளும் வேறுபடலாம்.
அக்டோபர் 28 அதிகாலையில் அர்னாப் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ. தொடர் காற்றும், இடையிடையே 150 கி.மீ. வரை வேகமான காற்றும் வீசக்கூடும் என்பதே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கரைகடத்தல் முன்னறிவிப்பாக இருந்தது.
பொது மக்களுக்கு எச்சரிக்கை
புயலின் தாக்கத்தால் கடலோர ஆந்திர பிரதேசத்தில் மரங்கள் வேருடன் சாய்வது, மின்கம்பங்கள் சேதமடைவது, பலவீனமான கட்டடங்கள் பாதிக்கப்படுவது, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்குவது உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரையையொட்டிய கடல் பகுதிகளில் அக்டோபர் 29 வரையிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையையொட்டிய பகுதிகளில் அக்டோபர் 28 வரையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்த பின்னரும் அதன் தாக்கத்தால் பலத்த மழை, வெள்ளப்பெருக்கு, வேகமான காற்று போன்ற பாதிப்புகள் தொடரக்கூடும் என்பதால், பொது மக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




































