எண்ணெய் குளியல், புத்தாடை, பலகாரம்: தீபாவளி வழக்கங்களுக்கு நீத்தார் சடங்குகளுடன் என்ன தொடர்பு?

பட மூலாதாரம், Getty Images
தீபாவளி பண்டிகை அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது, புதுத் துணி உடுத்துவது, இறை வழிபாட்டில் ஈடுபடுவது, பலகாரங்கள் செய்வது, அசைவ உணவுகள் சமைப்பது போன்றவை வழக்கங்களாகப் பின்பற்றப்படுகின்றன.
ஆனால், இந்த வழக்கங்கள் எப்போது தோன்றின? அவற்றின் வரலாறு மற்றும் பண்பாட்டு காரணங்கள் என்ன?
'நீத்தார் சடங்குகளுடனான தொடர்பு'
"தீபாவளியன்று பின்பற்றப்படும் வழக்கங்கள் நீத்தார் சடங்குகளுடன் தொடர்புடையவை" எனக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர், தமிழ் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்.
"நீத்தார் சடங்குகள் என்றால் தங்கள் குடும்பத்தின் முன்னோர்களை அவர்களது நினைவு தினத்தன்று வழிபடுவது. அவை அனைத்துமே தீபாவளியன்று பின்பற்றப்படும் சடங்குகளுடன் பொருந்திப் போகின்றன" என்கிறார் அவர்.

எண்ணெய் தேய்த்து குளிப்பது குறித்துப் பேசும் அவர், "எண்ணெய் என்பது நம்மிடம் அறிமுகமானதில் இருந்து வெறும் ஓர் உணவுப் பொருளாக மட்டுமே இருந்ததில்லை. அது வைத்தியத்தில் மிக முக்கியமான மூலிகையாகக் கருதப்பட்டிருக்கிறது. இன்றும்கூட உள்ளூர்களிலுள்ள சித்த வைத்தியர்கள் எண்ணெய் கொடுப்பதை மிக முக்கியமானதாக வைத்திருக்கிறார்கள். உடல் சூட்டைத் தணிப்பதற்காக எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வைத்திய மரபில் இருந்து வருகிறது" என்கிறார்.
"எண்ணெய் என்பது இங்கே உடல் தூய்மையைப் பேணுவதற்காகக் கையாளப்படுவதாக இருக்கிறது. அதேபோல, இறப்பினால் ஏற்பட்ட தீட்டில் இருந்து வெளியே வந்து தூய்மை அடைவதற்கான ஒரு குறியீடாக இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது" என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
அதேபோல, "நெருப்புச் சட்டியைக் கையாளுவதன் குறியீடாக வெடி வெடிப்பதையும், கருமாதிக்குப் பிறகு கறி எடுத்து உண்ணும் வழக்கத்தைக் கறி எடுத்துச் சாப்பிடும் நாளாகவும், இறந்தவர் வீடுகளில் புதுத் துணி (லேஞ்சி, தலைப் பாகை அல்லது சம்பந்தம் கட்டுதல் என்ற பெயர்களில்) எடுத்து உடுத்தும் வழக்கம் தீபாவளிக்கான விழாவாகவும் மாறுகிறது. இறந்தவர்களுக்குப் பிடித்ததைச் சமைத்து வைத்து நடுக் கூடத்தில் (நடு வீட்டில்) வைத்துப் படைக்கும் வழக்கமும்கூட தீபாவளி நாளிலும் தொடர்கிறது" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
'பிறப்பிலும் இறப்பிலும் எண்ணெய்'
திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பக்ஷி சிவராஜன் இதுகுறித்து மற்றொரு விளக்கத்தை அளிக்கிறார்.
"பொதுவாகவே ஒரு நல்ல காரியம் நடத்த வேண்டுமெனில், முதலில் தலைக்கு எண்ணெய் தேய்த்து நன்றாகக் குளித்துவிட்டு, புதுத் துணி உடுத்தி ஆரம்பிக்க வேண்டும் என்பது ஒரு நம்பிக்கை. அதன் அடிப்படையில் பண்டிகை நாட்களுக்கும் இந்த வழக்கம் பரவியிருக்கலாம்" என்கிறார் அவர்.
"எண்ணெய் என்பது இந்து மதச் சடங்குகளில் தூய்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது" என சிவராஜன் குறிப்பிடுகிறார்.
"ஒரு குழந்தை பிறந்தாலும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டுத்தான் புண்ணியதானம் செய்வார்கள். ஒருவர் இறந்து காரியம் செய்தார்கள் என்றால், அந்தக் காரியம் முடிந்து அந்தத் தீட்டுப் போவதற்கு எண்ணெய் தேய்த்துத்தான் குளிப்பார்கள். இறுதி யாத்திரையின்போதும் எண்ணெய் தொட்டு வைத்துத்தான் இறுதி யாத்திரையைத் தொடங்குவார்கள்" என்கிறார் சிவராஜன்.
"பண்டைய காலத்தில் அரிசி தினசரி உணவாக இருக்கவில்லை. எனவே பண்டிகை நாட்கள் அல்லது விழா நாட்களில் அரிசிச் சோறும், அதிரசம் போன்ற அரிசியில் செய்யக் கூடிய இனிப்புகளையும் செய்யும் வழக்கம் இருந்தது" என்றும் அவர் விவரித்தார். மேலும், "எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, வட இந்தியாவிலும் பின்பற்றப்படுகிறது. எனவே நாடு முழுவதும் வழக்கில் இருந்த சடங்குகள், விழாக்கள் சார்ந்த நம்பிக்கைகள் ஒன்று சேர்த்து தீபாவளி நாளில் பின்பற்றப்படுகிறது" எனக் கருதுகிறார் பக்ஷி சிவராஜன்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைத்த தகவல்கள்
கடந்த 2020ஆம் ஆண்டு 'மெட்டீரியல் ரிலிஜியன்' ஆய்விதழில் வெளியான மானுடவியலாளர் இந்திரா ஆறுமுகத்தின் ஆய்வு இங்கு கவனிக்கத்தக்கது.
'தீபாவளி இறந்தவர்களுக்கானது: தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் நீடிக்கும் உறவுமுறையும், இன்பமும் துன்பமும் கலந்த கொண்டாட்டங்களும்" என்ற அந்த ஆய்வு, தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் தீபாவளிப் பண்டிகைக்கும் இறந்த முன்னோர்களை நினைவுகூரும் சடங்குகளுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்கிறது.
இந்த ஆய்வுக் கட்டுரையானது 2005 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வடுவூர் எனும் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வை அடிப்படையாகக் கொண்டது. வடுவூர் கிராமத்தில் தீபாவளி வழிபாடுகள் முன்னோர்களுக்கு உணவு படைப்பதில் (படையல்) தொடங்குவதாக இந்திரா குறிப்பிடுகிறார்.
இதில், "சமைக்கப்பட்ட சைவ, அசைவ உணவுகள், பழங்கள், புதுத் துணிகள் ஆகியவை இறந்த முன்னோர்களுக்கும் தெய்வங்களுக்கும் படைக்கப்படுகின்றன. அவ்வாறு படைக்கப்பட்ட பிறகு அந்த உணவை குடும்பத்தினர் உண்கிறார்கள்."
ஆனால், 'அந்த உணவின் சுவை வழக்கத்தைவிடக் குறைவாக இருக்கும் என்றும், காரணம் முன்னோர்கள் அந்த உணவின் சாரத்தை எடுத்துக் கொள்வதால், எஞ்சிய உணவையே தாங்கள் உண்பதாக கிராம மக்கள் நம்புவதாக" இந்திரா பதிவு செய்துள்ளார். மேலும், எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் சடங்கு, இறப்புச் சடங்கின்போது, தீபாவளியன்று என இரண்டு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படுவதாக இந்திரா குறிப்பிடுகிறார்.
வடுவூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த கள ஆய்வின்படி, தீபாவளி என்பது இழப்புகள், இறந்த உறவினர்களின் நினைவுகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
'பௌத்த வழக்கங்கள்'
ஆனால், தீபாவளிப் பண்டிகையை ஒரு பௌத்த பண்டிகை எனக் குறிப்பிடுகிறார் அயோத்திதாசர். 'அயோத்திதாசர் சிந்தனைகள்' என்ற புத்தகத்தில் 1907 நவம்பர் 13 அன்று அவர் எழுதிய கட்டுரையில் இதுகுறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"ஜப்பான் நாட்டில் வாழும் பௌத்தர்கள் ஒரு சிறப்பான வழக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் தமது அறிவாற்றலால் புதிதாகக் கண்டுபிடிக்கும் பழங்கள், எண்ணெய்கள், மற்றும் தாவரங்களை வளர்த்து அவற்றின் பயன்களை அனுபவிக்கும்போது, அந்தப் பொருட்களைக் கண்டுபிடித்த காலத்தை ஆண்டுதோறும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நாளில், வீடுகளில் அந்தப் பொருட்களை வைத்து, புத்தாடை அணிந்து, பலவகையான உணவுப் பதார்த்தங்களைச் சமைத்து ஏழைகளுக்கு வழங்கி, தாங்களும் உண்டு மகிழும் வழக்கம் அங்கு காணப்படுகிறது" என அவர் கூறுகிறார்.
எண்ணெய் தேய்த்து குளிப்பது குறித்தும் அந்தக் கட்டுரையில் அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். "பௌத்தர்கள் 'எள்' மற்றும் 'நல்லெண்ணெயின்' மருத்துவக் குணங்களைக் கண்டறிந்து, தென்னிந்தியாவில் 'பள்ளி' என்ற நாட்டை ஆட்சி செய்து வந்த 'பகுவன்' என்ற அரசனிடம் முறைப்படி தெரிவித்தார்கள். அரசன் அதைப் பெருமளவில் உற்பத்தி செய்து, தனது நாட்டு மக்கள் அனைவரையும் அழைத்து, அந்த எள் எண்ணெயை வழங்கி, தலையில் தேய்த்து அருகில் ஓடும் 'தீபவதி' என்ற நதியில் நீராடச் செய்தார். மேலும், அதே எண்ணெயில் பலகாரங்கள் சமைத்து அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்."
"இந்த மகிழ்ச்சியான நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மக்கள் அனைவரும் எள் எண்ணெயில் பலகாரங்கள் செய்து, தீபவதி நதியில் நீராடி, புத்தாடை அணிந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதை வழக்கமாகக் கொண்டனர். 'நல்லெண்ணெய்' கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஐப்பசி மாத சதுர்த்தசி நாளைத்தான் மக்கள் 'தீபவதி ஸ்னான நாள்' என்று கொண்டாடி வந்தார்கள்" என்று எழுதியுள்ளார். ஆனால், அயோத்திதாசரின் இந்த விளக்கத்தை உறுதிப்படுத்தும் தனித்த வரலாற்று ஆதாரங்கள் குறித்து மேலும் ஆய்வு தேவைப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தீபாவளி குறித்த வரலாற்றுக் குறிப்புகள்
தமிழ்நாட்டின் வரலாற்றில் தீபாவளி குறித்த குறிப்புகள் மிகக் குறைவாக இருப்பதாகவே பொ. வேல்சாமி உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால், பிறப்பு மற்றும் இறப்புச் சடங்குகள் பண்டிகை வழக்கங்களுடன் ஒத்துப்போவது குறித்து சில குறிப்புகள் உள்ளன.
நாட்டுப்புறவியல் அறிஞர் மற்றும் பேராசிரியர் முனைவர் சி. சுந்தரேசன், "இறப்புச் சடங்கின் ஒரு பகுதியாக இறந்தவருக்கு எட்டாம் நாள் 'எட்டுக் கும்பிடுதல்' என்று ஒரு சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இறந்த அன்றே இச்சடங்கு தெரிவிக்கப்படுகிறது" என ஒரு கட்டுரையில் கூறுகிறார்.
"அன்றைய நாளில் மாமன், மச்சான் உறவுடையோர், பழங்கள், இனிப்பு வகை, பலகாரம், பூ போன்றவற்றை வாங்கி வருவார்கள். மாமன் வீட்டு அரிசி, மைத்துனன் வீட்டு அரிசி, பங்காளி வீட்டு அரிசி ஆகிய மூன்று வீட்டு அரிசியையும் போட்டு, பொங்கல் வைப்பார்கள். ஒப்பாரி வைத்து அழுவார்கள், அவர் மீது தண்ணீர் தெளித்து ஒப்பாரி நிறுத்தப்படும். கொள்ளி வைத்தவர் பொங்கலைப் புறங்கையால் மூன்று முறை எடுத்து இலையில் போட்டு வணங்குவார்" என்கிறார் அவர்.
"மக்களிடம் ஏற்கெனவே இருக்கும் சடங்குகளுடன் புராணங்கள் இணையும்போது அது பரவலான வழக்கங்களாக மாறுகிறது. நம் நாட்டின் பெரும்பாலான பண்டிகைகள் நீத்தார் சடங்குகளுடன் தொடர்புடையதுதான்" என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் காளிங்கன்.
"கேரளாவில் ஓணம் பண்டிகையை எடுத்துக்கொண்டால், ஒரு மன்னனின் மறைவை ஒட்டித்தான் அந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதாக புராணக் கதைகள் கூறுகின்றன. தீபாவளிக்கும் இப்படி 'நீத்தார்களுடன்' தொடர்புடைய சில புராணக் கதைகள் உள்ளன" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
இவ்வாறு பல சடங்குகள் இணைந்து அவை இந்தியாவின் முக்கிய பண்டிகையின் அங்கமாக மாறியிருப்பதைக் காண முடிகிறது. அவை பெரும்பாலும் மகிழ்ச்சி அல்லது கொண்டாட்டத்தின் அடையாளமாகவே கருதப்படுகின்றன.
அவற்றின் வரலாற்றுப் பின்னணி குறித்த அதிக விவரங்கள் இல்லாவிட்டாலும் அவற்றின் சமூக முக்கியத்துவத்தை உணர்த்த, பண்பாட்டு ஆய்வாளரான தொ. பரமசிவனின் வரிகளைக் குறிப்பிடலாம்.
தனது 'சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள்' என்ற கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"திருவிழாக்கள் என்பது சமூக அசைவுகளில் ஒன்று. திருவிழாக்கள் இல்லாமல் ஒரு சமூகம் இயங்க இயலாது. சுடுவெயிலில் நடப்பவன் மரத்து நிழலில் தங்கி அடுத்து நடப்பதற்கான உடல், மன வலிமையைச் சேர்த்துக் கொள்வது போல திருவிழா என்பது ஒரு 'சமூக இளைப்பாறுதல்' நிகழ்வு."
"ஆடுதல், பாடுதல் கூடிக் களித்தல், கூடி உண்ணுதல் ஆகிய அசைவுகளும் தொடர்ந்து வரும் அவற்றின் நினைவுகளும் ஒரு சமூகத்தைச் சோர்வின்றி இயங்கச் செய்கின்றன."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































