நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா தடை - இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு
இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்திற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா விதித்த தடையுத்தரவிற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை வெளி விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவு பெற்றத் தருணத்தில், இலங்கை இராணுவத்தின் 58ஆவது பிரிவினரால் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.
குறித்த காலப் பகுதியில் மனித உரிமை மீறல்கள், சட்டவிரோத கொலைகள் இடம்பெற்றுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதனால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
வெளிநாட்டு அதிகாரிகள் மனித உரிமை மீறல்கள் அல்லது குறிப்பிடத்தக்க ஊழல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்திருப்பதனால், அந்த நபர்களும், அவர்களின் உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதி அற்றவர்கள் என அமெரிக்கா கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளினால் ஆவணப்படுத்தப்பட்ட ஷவேந்திர சில்வா மீதான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு தீவிரமானவை மற்றும் நம்பகரமானவை என அந்த திணைக்களத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஷவேந்திர சில்வாவின் பதவியானது இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் மனித உரிமைகள் மீது தாம் வைத்திருக்கும் முக்கியத்துவத்தை அடிக்கோட்டிட்டு காட்டுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கும் தண்டனை விதிக்கப்படுவது குறித்து தமது அக்கறை, பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான தமது ஆதரவு மனித உரிமைகளை ஊக்குவித்தல், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், மனித உரிமைகளை ஊக்குவித்தல், பாதுகாப்புத்துறை சீர்திருத்தல், நீதி மற்றும் நல்லிணக்கம் மற்றும் அதன் பிற கடமைகளை ஆதரித்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை தாம் கேட்டுக்கொள்கின்றோம் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்துடனான தமது கூட்டாண்மை மற்றும் இலங்கை மக்களுடனான தாம் பகிர்ந்து கொள்ளும் நீண்ட கால ஜனநாயக பாரம்பரியத்தை மதிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கும் அதன் பாதுகாப்பு படைகளை மாற்றியமைப்பதற்கும் தாம் உறுதியுடன் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி, உதவி மற்றும் ஈடுபாடுகளின் அடிப்படை அங்கமான மனித உரிமைக்கான மரியாதை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை ஆட்சேபனை
இதற்கு இலங்கை தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க இந்த முடிவை எடுத்துள்ளது என்றும், அமெரிக்கா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஷவேந்திர சில்வாவிற்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரபூர்வமான அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை என்பதை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், ஷவேந்திர சில்வா மிக சிரேஷ்ட இராணுவ அதிகாரி என்ற காரணத்தினாலேயே தற்போதைய அரசத் தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் பதில் பாதுகாப்பு தலைவராக தரமுயர்த்தப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்