ரோலர்கோஸ்டரில் சிலிர்ப்பூட்டும் பயணத்தை சிலர் விரும்புவது ஏன்?

ரோலர்கோஸ்டரில் சிலிர்ப்பூட்டும் பயணத்தை சிலர் விரும்புவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

காற்றில் தூக்கி வீசப்பட்டு, தலைகீழாகச் சுழன்று, மிக உயரத்திலிருந்து கீழே விழுவது என்பது அவ்வளவு இனிமையான அனுபவமாக இருக்காது.

ஆனால், சர்வதேச கேளிக்கைப் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் சங்கத்தின் தகவலின்படி, உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான மக்கள் இதே அனுபவத்தைப் பெறுவதற்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர்.

அப்படியானால், வயிறு கலங்கச் செய்யும் இந்தச் சாகச அனுபவத்தைப் பணம் கொடுத்து விரும்பி அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம்மில் பலருக்கு ஏற்படுத்தும் வகையில், நமது மூளையில் உண்மையில் என்னதான் நடக்கிறது?

மிகப் பழைய சிலிர்ப்பு

மனிதர்கள் பல நூற்றாண்டுகளாகவே சிலிர்ப்பூட்டும் சாகச அனுபவங்களைத் தேடி வருகின்றனர்.

கிரேட் பிரிட்டன் ரோலர் கோஸ்டர் கிளப்பின் நிறுவனரும் வரலாற்றாசிரியருமான ஆண்டி ஹைன், ரோலர் கோஸ்டர்களின் தொடக்க கால வடிவங்களை 400 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் காண முடிந்ததாகக் கூறுகிறார். அங்கு, மரத்தாலான சறுக்கு வண்டிகளில் செயற்கையாகப் பனியால் மூடப்பட்ட மலைப்பாதைகளில் மக்கள் வேகமாகச் சறுக்கிச் சென்றனர். இவை "பறக்கும் மலைகள்" அல்லது "பனி மலைகள்" என்று அழைக்கப்பட்டன.

ரஷ்யாவில் பனியால் உருவாக்கப்பட்ட 'பனிமலை' சவாரியைக் காட்டும் பழங்கால ஓவியம். பனி மூடப்பட்ட உயரமான மரக் கட்டமைப்பில் மக்கள் கீழ்நோக்கிச் சறுக்கிச் செல்கின்றனர். பனிப்பொழிவு நிறைந்த சூழலில் மற்றவர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
படக்குறிப்பு, நவீன ரோலர் கோஸ்டர்கள் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, பனியால் உருவாக்கப்பட்ட "பறக்கும் மலைகள்" ரஷ்யாவில் பிரபலமான சிலிர்ப்பூட்டும் பொழுதுபோக்காக இருந்தன.

19ஆம் நூற்றாண்டில் இந்த யோசனை மற்ற நாடுகளுக்கும் பரவியது. "பாரிஸில் இதுபோன்ற விளையாட்டை உருவாக்குவதற்குப் போதுமான பனி இல்லை. ஆனால், ரஷ்யர்கள் இதை எவ்வளவு மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார்கள் என்பதைப் பார்த்து, பாரிஸ் மக்களும் அதில் கொஞ்சம் அனுபவிக்க விரும்பினர்" என்று பிபிசியின் கிரவுட்சயின்ஸ் பாட்காஸ்ட்டில் அவர் கூறுகிறார்.

இதற்காக, தண்டவாளத்தில் உருளைகள் பொருத்தப்பட்ட மரத்தாலான பாதையை அவர்கள் உருவாக்கினர். அதில் மரப்பலகை ஒன்றின் மீது அமர்ந்து மக்கள் கீழ்நோக்கிச் சறுக்கிச் சென்றனர். "இதனால்தான் ரோலிங் மற்றும் கோஸ்டிங் என்ற சொற்கள் இணைந்து ரோலர் கோஸ்டர் என்ற பெயர் உருவானது."

அது நீண்ட, எளிமையான கீழ்நோக்கிச் செல்லும் பாதையாக இருந்தது. இருப்பினும், இந்தச் சவாரியில் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரை செல்ல முடிந்ததாக ஹைன் கூறுகிறார். "ஒரு சிறிய மரப்பாதைக்கு இது ஒன்றும் மோசமான வேகம் அல்ல" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

1884ஆம் ஆண்டு, நியூயார்க்கின் கோனி தீவில், 'ஈர்ப்பு விசை சவாரியின் தந்தை' என்று அழைக்கப்படும் கண்டுபிடிப்பாளர் லாமார்கஸ் தாம்சன், இன்று நாம் அறிந்திருக்கும் ரோலர்கோஸ்டரை உருவாக்கினார். இருப்பினும், அது முழுவதும் மரத்தாலேயே செய்யப்பட்டிருந்தது.

1950களின் இறுதியில், இரும்பைப் பயன்படுத்தி ரோலர் கோஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டன. இதன் மூலம், சவாரிகளின் வேகத்தை அதிகரிக்கவும், பெரிய பள்ளங்கள் மற்றும் சைக்கிள் ஓட்டும் பாதையைப் போல உள்நோக்கிச் சாய்ந்த வளைவுகளை அமைக்கவும் முடிந்தது.

தண்டவாளத்தின் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் பொருத்தப்பட்ட சக்கரங்கள் மூலம் ரோலர் கோஸ்டர் ரயில்கள் தண்டவாளத்தில் உறுதியாகப் பிடிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக, பயணிகள் தலைகீழாகச் சுழலும் வகையிலான சாகசங்களும் சாத்தியமாயின.

"இப்போது ஒரே ஒரு ரோலர் கோஸ்டர் சவாரியில் 14 முறை கூட தலைகீழாகச் செல்ல முடியும்" என்று ஹைன் கூறுகிறார்.

இங்கிலாந்தின் ஆல்டன் டவர்ஸ் கேளிக்கைப் பூங்காவில் உள்ள 'தி ஸ்மைலர்' ரோலர் கோஸ்டர்
படக்குறிப்பு, பிரிட்டனின் ஆல்டன் டவர்ஸ் கேளிக்கைப் பூங்காவில் உள்ள 'தி ஸ்மைலர்' ரோலர் கோஸ்டர், 14 முறை தலைகீழாகச் சுழன்று சாதனை படைத்துள்ளது.

பயத்தின் இயற்பியல்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஒரு ரோலர் கோஸ்டர் சவாரியில் கிடைக்கும் பெரும்பாலான சிலிர்ப்பான அனுபவம், 'ஜி-ஃபோர்ஸ்' எனப்படும் முடுக்க விசையைப் பொறுத்தே அமைகிறது. இது ஒரு பொருளின் முடுக்கத்தை அளவிடும் முறையாகும்.

நாம் அசையாமல் அமர்ந்திருக்கும் போது, பூமியின் ஈர்ப்பு விசையை 1g என்ற அளவில் உணர்கிறோம்.

கனடாவின் முதல் வணிக விண்வெளி வீரர்களில் ஒருவரான டாக்டர் ஷானா பாண்டியா கூறுகையில், போர் விமான விமானிகள் 8g அல்லது 9g வரையிலான விசையைத் தாங்கும் வகையில் பயிற்சி பெறுகின்றனர். பெரும்பாலான ரோலர் கோஸ்டர்களில் இதைவிடக் குறைவான விசையே உருவாகிறது.

பாண்டியா, மையவிலக்கு இயந்திரத்தில் 6g விசையில் சுழற்றப்பட்டுள்ளார்.

"2g விசையில், நமது உடல் இரு மடங்கு அதிக எடையுடன் இருப்பதைப் போல உணர்வோம்" என்று விளக்கும் அவர் , 6g விசையில் ஏற்படும் உணர்வை விவரிக்கும்போது, "உங்கள் மார்பின் மீது யானை ஒன்று அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வுதான் இதைச் சுருக்கமாக விவரிக்கச் சிறந்த வழி" என்கிறார்.

ஜி-ஃபோர்ஸ் விசை செயல்படும் திசையைப் பொறுத்து நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கலாம். இந்த இரண்டையும் நாம் முற்றிலும் மாறுபட்ட விதங்களில் உணர்கிறோம்.

ஒரு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் போது ஏற்படுவதைப் போல, ஒரு பொருள் அல்லது வாகனம் மேல்நோக்கி முடுக்கமடையும்போது நேர்மறை ஜி-ஃபோர்ஸ் உருவாகிறது. இது உங்களை இருக்கைக்குள் அழுத்தி, அதிக எடையுடன் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

ரோலர் கோஸ்டரில், ஒரு பள்ளத்தின் அடிப்பகுதியில் இந்த விசை மிகவும் வலுவாக உணரப்படும். ஏனெனில், அந்தப் பாதை உங்களை மேல்நோக்கித் தள்ள அதிக விசையைச் செலுத்த வேண்டியிருக்கும்.

ஒரு மலையின் உச்சியைக் கடக்கும்போது, ஜி-ஃபோர்ஸ் பூஜ்ஜியத்தை நோக்கியோ அல்லது அதற்கு கீழாகவோ குறைவதால், உடல் எடை குறைந்ததைப் போன்ற உணர்வு ஏற்படும். ரோலர் கோஸ்டர் உலகில் இந்த அனுபவம் "ஏர்டைம்" என்று அழைக்கப்படுகிறது.

புவியீர்ப்பு விசை உங்களை கீழ்நோக்கி இழுக்கும் அதே வேகத்தில் நீங்கள் கீழே விழுந்தால், 0g விசை அல்லது எடையற்ற நிலையை உணர்வீர்கள்.

லிஃப்டில் பயணிக்கும் போதும் இதேபோன்ற உணர்வு ஏற்படும் என்று பாண்டியா கூறுகிறார். "சிறிது நேரத்திற்கு, லிஃப்ட் கீழே செல்லும் அதே வேகத்தில் நீங்களும் கீழே விழுவீர்கள். எனவே, ஒரு நொடியின் மிகச் சிறிய பகுதி நேரத்துக்கு நீங்கள் தற்காலிகமாக எடையற்ற நிலையில் இருப்பீர்கள்"என அவர் விளக்குகிறார்.

0g-க்கும் கீழான நிலைக்குச் செல்லும்போது எதிர்மறை ஜி-ஃபோர்ஸ் உருவாகிறது. ஒரு மலையின் உச்சியைக் கடந்து செல்லும்போது தண்டவாளம் மிகத் தீவிரமாகக் கீழ்நோக்கிச் சரிந்தால், ரோலர் கோஸ்டர் ரயில் உங்கள் உடல் பின்தொடர முடியாத அளவுக்கு வேகமாகக் கீழே செல்லும். இதனால், பாதுகாப்புப் பட்டை உங்களைத் தடுத்து நிறுத்தும் வரை, நீங்கள் இருக்கையிலிருந்து மேலே எழும்புவீர்கள்.
படக்குறிப்பு, 0g விசையை உருவாக்கும் வகையில் தொடர்ச்சியாகப் பறக்கும் இயக்கங்களை மேற்கொள்வதன் மூலம், விமானங்களும் எடையற்ற நிலையை உணரச் செய்ய முடியும்.

ரோலர் கோஸ்டரில் கீழ்நோக்கி விழும்போதும் இதேபோன்ற வயிற்றைக் கலங்கச் செய்யும் உணர்வே ஏற்படுகிறது. ஆனால், அந்த உணர்வு நீண்ட நேரம் நீடிப்பதுடன், அதிகமாகவும் இருக்கும்.

0g-க்கும் கீழான நிலைக்குச் செல்லும்போது எதிர்மறை ஜி-ஃபோர்ஸ் உருவாகிறது. ஒரு மலையின் உச்சியைக் கடந்து செல்லும்போது தண்டவாளம் மிகத் தீவிரமாகக் கீழ்நோக்கிச் சரிந்தால், ரோலர் கோஸ்டர் ரயில் உங்கள் உடல் பின்தொடர முடியாத அளவுக்கு வேகமாகக் கீழே செல்லும். இதனால், பாதுகாப்புப் பட்டை உங்களைத் தடுத்து நிறுத்தும் வரை, நீங்கள் இருக்கையிலிருந்து மேலே எழும்புவீர்கள்.

அது நமக்கு என்ன செய்கிறது?

நரம்பு மண்டலம், ரோலர் கோஸ்டர் சவாரியின்போது ஏற்படும் இந்த உடல் ரீதியான உணர்வுகளை, ஏதோ ஓர் ஆபத்தை எதிர்கொள்வதைப் போலவே புரிந்துகொள்கிறது. இதனால், சிம்மதெட்டிக் நரம்பு மண்டலம் செயல்படத் தொடங்குகிறது. இது உடலின் 'போராடு அல்லது தப்பியோடு' என்கிற எதிர்வினையாகும்.

இதனால், "இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, கண்களின் கருவிழிகள் விரிவடைகின்றன, சுவாசம் வேகமடைகிறது" என்று பிரிட்டனின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரெண்டன் வாக்கர் கூறுகிறார். உலகின் ஒரே 'த்ரில் பொறியாளர்' என்று தன்னை இவர் குறிப்பிட்டுக் கொள்கிறார்.

இந்த அனுபவம் நம்மில் சிலருக்கு ஏன் மகிழ்ச்சியைத் தருகிறது?

பிரிட்டனின் கீல் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை மூத்த விரிவுரையாளர் முனைவர் ரிச்சர்ட் ஸ்டீபன்ஸ் கூறுகையில், "அந்த நிலையில், உடலில் எண்டோர்பின் அளவு அதிகரிப்பதாக ஆய்வுகள் காட்டியுள்ளன" என்கிறார்.

எண்டோர்பின்கள் நமது உடலில் சுரக்கும் 'மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்களில்' சிலவாகும். இவை மன அழுத்தத்தைக் குறைத்து, நல்வாழ்வு உணர்வை ஏற்படுத்துகின்றன.

"ரோலர் கோஸ்டரில் பயணிக்கும்போது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவும் அதிகரிக்கிறது. இருப்பினும், எல்லா வகையான மன அழுத்தங்களும் தீங்கு விளைவிப்பவை அல்ல. ரோலர் கோஸ்டர் சவாரி என்பது 'யூஸ்ட்ரெஸ்' எனப்படும் நேர்மறையான மன அழுத்தத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. அதாவது, உடலால் நேர்மறையாகப் புரிந்துகொள்ளப்படும் மன அழுத்தம் இது. ஒரு சவாலை எதிர்கொள்வது, வேடிக்கை, உற்சாகம் அல்லது சாகசம் போன்ற உணர்வுகளைப் போன்றது இது. எதிர்மறையான ஒன்றைப் போன்றது அல்ல" என்கிறார்.

இதற்குப் பின்னால் பரிணாம வளர்ச்சி சார்ந்த அம்சம் இருப்பதாக வாக்கர் நம்புகிறார்.
படக்குறிப்பு, ரோலர் கோஸ்டர் ஒரு மலையின் உச்சியைக் கடக்கும்போது, பயணிகள் எடை குறைந்ததைப் போல உணர்வதுடன், பாதுகாப்புப் பட்டைக்கு மேலே எழும்பக்கூடும். இந்த உணர்வு "ஏர்டைம்" என்று அழைக்கப்படுகிறது.

இதற்குப் பின்னால் பரிணாம வளர்ச்சி சார்ந்த அம்சம் இருப்பதாக வாக்கர் நம்புகிறார்.

"பூமியில் உயிர்கள் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு வெகுமதி அளிக்கும் ஓர் உத்தியாகவே சிலிர்ப்பூட்டும் அனுபவம் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆதி மனிதர்கள் ஒரு வேட்டையாடும் விலங்கிலிருந்து வெற்றிகரமாகத் தப்பித்தபோது, அவர்களது உடலில் அதிக அளவில் சுரந்த அட்ரினலின் ஹார்மோனுடன் நிம்மதியும் மகிழ்ச்சியும் இணைந்து ஏற்பட்டிருக்கும் என்கிறார் வாக்கர்.

சிலருக்கு, நவீன வாழ்க்கையில் உண்மையான ஆபத்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே, ரோலர் கோஸ்டர் போன்ற சவாரிகள் பாதுகாப்பான மாற்று அனுபவமாகச் செயல்படக்கூடும். சிலிர்ப்பூட்டும் தருணங்களை செயற்கையாக உருவாக்கும் ஒரு வழியாக இவை இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

பரவசமூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது

ஒரு ரோலர்கோஸ்டர் சவாரியை வெறுமனே அசௌகரியமாக உணர வைக்காமல், எது அதை உற்சாகமாக உணரவைக்கிறது என்பதைக் கண்டறிய, வாக்கர் பல ஆண்டுகளாக சவாரி செய்பவர்களின் இதயத் துடிப்பு மற்றும் முகபாவனைகளை ஆய்வு செய்து வருகிறார்.

"ரோலர் கோஸ்டரை ஓர் சமையல் குறிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அதில் நாம் எதிர்பார்க்கும் சில முக்கியப் பொருள்கள் இருக்கும்" என்று அவர் விளக்குகிறார்.

அவை நமது உணர்வு நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களாகும். "உதாரணமாக, ஜி-ஃபோர்ஸ் விசையில் ஏற்படும் மாற்றங்கள், அதீத வேகம், உயரம்..." போன்றவை இதில் அடங்கும்.

ரோலர் கோஸ்டர்களில் கிடைக்கும் சிலிர்ப்பான அனுபவம், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைப் பயணிகளால் கணிக்க முடியாத வகையில் வைத்திருப்பதில்தான் அடங்கியுள்ளதாக வாக்கர் கூறுகிறார்.

லூப்கள் மற்றும் சுருள் வடிவ வளைவுகள் போன்ற அம்சங்கள் ஒரு சவாரியில் அதிகமாக இடம்பெறுவதுடன், அவை ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக அமைக்கப்படும்போது, அந்த அனுபவம் மேலும் சிலிர்ப்பூட்டுவதாக மாறுகிறது.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்ப்பதற்குக்கூட போதிய நேரம் இருக்காது. இதனால், பயணிகள் தொடர்ந்து பதற்றமும் எதிர்பார்ப்பும் கலந்த நிலையில் இருப்பார்கள்.

நீங்கள் அமரும் இடமும் இதில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று ஹைன் கூறுகிறார்.

ஒரு சவாரியின் முன்வரிசையில் அமர்ந்தால், அதிக நேர்மறை ஜி-ஃபோர்ஸ் விசையை உணரலாம். அதேசமயம், பின்வரிசையில் அமர்ந்தால், எடையற்ற நிலையை இன்னும் அதிகமாக உணர முடியும்.

இது எல்லோருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு அம்சம் அல்ல

நிச்சயமாக, ரோலர் கோஸ்டர்கள் நம்மில் பலருக்கு குமட்டலையும் ஏற்படுத்துகின்றன.

மருத்துவராகவும் பணியாற்றும் பாண்டியா, நமது உடலின் சமநிலை உணர்வு மூன்று விஷயங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதைப் பொறுத்து அமைகிறது என்று விளக்குகிறார். நமது கண்கள் பார்ப்பது, உள் காதுகள் உணர்வது, விண்வெளியில் நமது உடல் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றித் தசைகளும் மூட்டுகளும் அளிக்கும் தகவல்கள் ஆகியவையே அவை.

புவியீர்ப்பு விசை திடீரென மாறும்போது, இந்த மூன்று சமிக்ஞைகளும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் போகின்றன. "நாம் எடையற்ற நிலையை அடைந்தவுடன், இந்த மூன்று உள்ளீடுகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுகிறது. இதனால் நமது மூளை குழப்பமடைகிறது", "இது வாந்தி ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்"என்று அவர் கூறுகிறார்.

சிலருக்கு, இந்தக் குழப்பம் கீழ்நோக்கி விழும் அனுபவத்தின் சிலிர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. மற்றவர்களுக்கோ, அது வெறும் குமட்டலாகவும் பயணத்தின்போது ஏற்படும் உடல்நலக் குறைவாகவும் மட்டுமே இருக்கிறது.

சிலருக்கு, இந்தக் குழப்பம் கீழ்நோக்கி விழும் அனுபவத்தின் சிலிர்ப்பை மேலும் அதிகரிக்கிறது.
படக்குறிப்பு, சிலருக்கு, இந்தக் குழப்பம் கீழ்நோக்கி விழும் அனுபவத்தின் சிலிர்ப்பை மேலும் அதிகரிக்கிறது.

இருப்பினும், இதில் நமது ஆளுமையும் அதே அளவுக்கு முக்கியப் பங்கு வகிக்கக்கூடும்.

"சிலர் இதுபோன்ற அனுபவங்களைத் தேடிச் செல்லும் இயல்புடையவர்களாக இருக்கின்றனர். மற்றவர்களுக்கு அத்தகைய ஆர்வம் இருப்பதில்லை" என்று ஸ்டீபன்ஸ் கூறுகிறார்.

அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்வின் ஸுக்கர்மேன், 1960களில் உருவாக்கிய 'உணர்வுகளைத் தேடும் அளவுகோல்' எனப்படும் கருத்தை வாக்கர் சுட்டிக்காட்டுகிறார். புதிய அனுபவங்களைத் தேடுவதில் மனிதர்களிடம் காணப்படும் நான்கு வகைகளை இந்த அளவுகோல் அடையாளம் காட்டுகிறது.

"சிலர் சிலிர்ப்பூட்டும் அனுபவங்களையும் சாகசங்களையும் விரும்புவார்கள். ஸ்கைடைவிங் செய்யவும், ரோலர் கோஸ்டரில் பயணிக்கவும் விரும்புபவர்கள் இத்தகையவர்கள்தான்."

வேறு சிலர், எந்தவொரு உடல் ரீதியான ஆபத்தையும் விரும்பாமல், நாடகம் அல்லது வாண வேடிக்கை போன்ற அனுபவங்களால் ஈர்க்கப்படுகின்றனர்.

சிலர், கட்டுப்பாடற்ற சமூக நடத்தைகள் மூலம் தூண்டுதலைத் தேடுகின்றனர்.

மற்றவர்கள் சலிப்பை அறவே விரும்பாதவர்களாக இருக்கின்றனர்.

ஒரு ரோலர் கோஸ்டர் உங்களைப் புன்னகையுடன் இறங்கச் செய்கிறதா அல்லது குமட்டலுடன் இறங்கச் செய்கிறதா என்பது உங்கள் உடலியல் மற்றும் ஆளுமையைப் பொறுத்தது.

இருப்பினும், இதை விரும்பி அனுபவிப்பவர்களில் சிலருக்கு, இதற்குப் பின்னால் இன்னும் எளிமையான காரணம் இருக்கிறது.

வாக்கர் கூறுவதைப் போல, "சிலிர்ப்பான அனுபவத்தைப் பெறும் தருணத்தைப் போல, தாங்கள் வேறு எப்போதும் இவ்வளவு உயிர்ப்புடன் உணர்ந்ததில்லை என்று மக்கள் கூறுகின்றனர்."

பிபிசி வேர்ல்ட் சர்வீஸின் கிரவுட்சயின்ஸ் நிகழ்ச்சியின் ஓர் அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது.

கூடுதல் தகவல்கள் : கேத்தரின் ஹீத்வுட்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு