உங்கள் மூளைக்கு உண்மையில் எத்தனை வயது? முதுமையையும் மறதி நோயையும் தடுக்க முடியுமா? விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய வழிகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லாரா லெவிங்டன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ உதவும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றாலும், வயதாகும்போது மூளையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைக் கண்காணிப்பதன் மூலம், மூளையின் முதுமையடையும் செயல்முறையைப் புதிய தொழில்நுட்பங்களால் மெதுவாக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
ஓர் அழகான காலை வேளையில், லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு கிழக்கே சுமார் ஒரு மணிநேரப் பயணத் தொலைவில் உள்ள லோமா லிண்டா நகரில் வசிக்கும் மரிஜ்கே, அவரது கணவர் டாம் ஆகியோர் என்னைக் காலை உணவுக்கு தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தனர். நெதர்லாந்தை சேர்ந்த மரிஜ்கேவுக்கு வயது 76.
அவர்களின் காலை உணவு மேசையில் ஓட்ஸ், சியா விதைகள், பெர்ரி பழங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால், சர்க்கரை சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட தானிய உணவுகளோ காபியோ இல்லை. அவர்களின் எளிமையான, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், லோமா லிண்டா நகரின் வாழ்க்கை முறையையும் பிரதிபலிப்பதாக இருந்தது.
அமெரிக்காவின் லோமா லிண்டா நகரம், உலகில் மக்கள் நீண்ட காலம் வாழும் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தகைய பகுதிகள் 'நீல மண்டலங்கள்' (Blue Zones) என்று அழைக்கப்படுகின்றன. குறிப்பாக, லோமா லிண்டாவில் வசிக்கும் செவன்த்-டே அட்வென்டிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர்கள், மற்றவர்களைவிட நீண்ட காலம் வாழ்வதுடன், நல்ல ஆரோக்கியத்தையும் பேணுகின்றனர்..
இந்தச் சமூகத்தினர் பொதுவாக மது அருந்துவதில்லை; காஃபின் உள்ள பானங்களையும் தவிர்க்கின்றனர். பெரும்பாலும் சைவ அல்லது முழுமையான தாவர அடிப்படையிலான உணவுகளையே உட்கொள்கின்றனர். உடலை ஆரோக்கியமாகப் பராமரிப்பது மதக் கடமைகளில் ஒன்று என அவர்கள் கருதுகின்றனர்.
இந்த வாழ்க்கை முறையை அவர்கள் 'ஆரோக்கியச் செய்தி' என்று அழைக்கின்றனர். இதுவே லோமா லிண்டா நகரம் உலகளவில் கவனம் பெறுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வது எவ்வாறு என்பதை அறிய, பல தசாப்தங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
லோமா லிண்டா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கேரி ஃபிரேசர் என்னிடம் பேசுகையில், இங்குள்ள செவன்த்-டே அட்வென்டிஸ்ட் சமூகத்தினர் நீண்ட ஆயுளுடன் வாழ்வதுடன், நோயின்றி ஆரோக்கியமாக வாழும் காலமும் அதிகமாக இருப்பதாகக் கூறினார். இதை 'ஆரோக்கியமான வாழ்நாள்' என்கிறோம். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, இந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளும், ஆண்கள் சுமார் ஏழு ஆண்டுகளும் கூடுதலாக நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர்.
மரிஜ்கேவும் டாமும் தங்கள் வாழ்க்கையின் பிற்காலத்தில்தான் லோமா லிண்டாவுக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும், இப்போது அவர்கள் அந்தச் சமூகத்தின் வாழ்க்கை முறையை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்கின்றனர்.

லோமா லிண்டாவில் மக்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குப் பின்னால் பெரிய ரகசியம் எதுவும் இல்லை. அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள்; மனதுக்கு சவால் அளிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். மேலும், மதம் சார்ந்த சமூக அமைப்பு வழங்கும் நெருக்கமான உறவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
இங்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
நான் ஜூடி என்பவரைச் சந்தித்துப் பேசினேன். அவர், முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில் 112 பேருடன் வசித்து வருகிறார். அங்கு மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேசுவதற்கும், ஆழமான உரையாடல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எப்போதுமே இருப்பதாக அவர் கூறினார்.
"மற்றவர்களுடன் பழகுவது நமது மூளைக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நான் முன்பு உணரவில்லை. சமூகத் தொடர்புகள் இல்லாவிட்டால், மூளை படிப்படியாகச் சுருங்கிவிடும் என எனக்க்குத் தோன்றுகிறது" என்றார் ஜூடி.
சமூகத் தொடர்புகள் உடல்நலத்துக்கு அளிக்கும் நன்மைகளையும், தனிமையைத் தவிர்ப்பதன் அவசியத்தையும் அறிவியல் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறது. ஆனால், தற்போது ஒருவரின் மூளை இயல்பான வேகத்தைவிட விரைவாக முதுமையடைகிறதா என்பதைக் கண்டறியவும் முடிகிறது. இதன் மூலம் அவர்களின் மூளை ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணித்து, எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படுவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளையும் சிகிச்சைகளையும் வழங்க முடியும்.
எதிர்காலத்தில் நோய்களைக் குணப்படுத்துவதைவிட, அவை ஏற்படுவதற்கு முன்பே கண்டறிந்து தடுப்பதற்கே மருத்துவத் துறை அதிக முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. ஒவ்வொருவரின் உடல்நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப சிகிச்சை அளிக்கவும், நோய்களை முன்கூட்டியே கண்டறியவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவு தொழில்நுட்பங்கள் உதவவுள்ளன.

நமது மூளை எவ்வாறு முதுமையடைகிறது என்பதைக் கணித்து, அதன் செயல்பாட்டில் ஏற்படும் சரிவை முன்கூட்டியே மதிப்பிடும் கணினி மாதிரிகளைத் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் முதுமையியல் மற்றும் கணக்கீட்டு உயிரியல் துறைகளின் இணைப் பேராசிரியரான ஆண்ட்ரே இரிமியா எனக்குக் காட்டினார்.
ஆரோக்கியமாக முதுமையடையும் மூளைகளிலும், டிமென்ஷியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மூளைகளிலும் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்காக, எம்.ஆர்.ஐ ஸ்கேன் படங்கள், 15,000 மூளைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த மாதிரிகளை அவர் உருவாக்கியிருந்தார்.
"மனிதர்களால் எளிதில் அடையாளம் காண முடியாத சில வடிவங்களையும் போக்குகளையும் கண்டறிவதற்கு இது மிகவும் நுட்பமான வழியாகும். ஆனால், செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளால் அவற்றைக் கண்டறிய முடியும்" என்று அவர் கூறினார்.
பேராசிரியர் இரிமியா, உண்மையிலேயே என் சிந்தனைகளுக்குள் ஊடுருவிப் பார்த்தது போன்றதொரு அனுபவத்தை எனக்குக் கொடுத்தார்.
அவரைச் சந்திப்பதற்கு முன்பே, நான் எஃப்.எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்திருந்தேன். அதன் முடிவுகளை ஆய்வு செய்த பேராசிரியர் இரிமியா, எனது உண்மையான வயதைவிட மூளையின் வயது எட்டு மாதங்கள் அதிகமாக இருப்பதாகக் கூறினார். எனினும், இந்த மதிப்பீட்டில் இரண்டு ஆண்டுகள் வரை பிழை இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்களும் வணிக ரீதியில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. பிரெயின்கீ என்ற நிறுவனம், உலகெங்கிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்தச் சேவையை வழங்கி வருகிறது. அதன் நிறுவனர் ஓவன் பிலிப்ஸ், எதிர்காலத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்துகொள்வது மேலும் எளிதாகிவிடும் என்று என்னிடம் கூறினார்.
"மக்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்துகொள்வது இப்போது மிகவும் எளிதாகி வருகிறது. அதே நேரத்தில், அந்த ஸ்கேன் மூலம் கிடைக்கும் படங்களின் தரமும் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது" என்றார் அவர்.
நான் தொழில்நுட்பத்தின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை கொண்டவரைப் போலப் பேச விரும்பவில்லை. இருப்பினும், முன்பைவிட மிகக் குறுகிய காலத்திலேயே பல விஷயங்களைத் துல்லியமாகக் கண்டறியக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் தற்போது வளர்ந்துள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு நோயாளியின் மூளையிலும் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை இன்னும் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் சிகிச்சையையும் வழங்க முடியும்.
ஆனால், எனது எம்.ஆர்.ஐ ஸ்கேன் முடிவுகளை ஆய்வு செய்த பேராசிரியர் இரிமியாவின் மதிப்பீட்டுக்கு மாறாக, பிரெயின்கீ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் எனது மூளையின் உயிரியல் வயது உண்மையான வயதைவிட ஓராண்டு குறைவாக இருப்பதாகத் தெரியவந்தது. மேலும், எனது மூளையின் முப்பரிமாண மாதிரி ஒன்றையும் அந்நிறுவனம் அச்சிட்டு எனக்குக் காட்டியது. அது பார்ப்பதற்கு மிகவும் திடமானதாக இருந்தது. உண்மையான மனித மூளையின் அளவிலேயே அது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் என்னிடம் உறுதியளித்தனர்.

இதன் நோக்கம், சிகிச்சைகளை இன்னும் துல்லியமாக வழங்குவது மட்டுமல்ல; அவற்றின் பலன்களையும் தலையீடுகள் எந்த அளவுக்குப் பயனளிக்கின்றன என்பதையும் அளவிடுவதாகும்.
கடந்த 200 ஆண்டுகளில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் வியக்கத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், முதுமையுடன் தொடர்புடைய பல்வேறு நோய்களும் அதிகரித்துள்ளன. மனிதர்கள் அனைவரும் நீண்ட காலம் வாழத் தொடங்கினால், ஒரு கட்டத்தில் டிமென்ஷியா எனப்படும் முதுமைக் கால மறதி நோய் நம் அனைவரையும் பாதிக்குமா என்று நான் பேராசிரியர் இரிமியாவிடம் கேட்டேன்.
இதுகுறித்த கோட்பாடு பலரால் ஆராயப்பட்டு வந்தாலும், இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் கூறினார். முதுமையில் மறதி நோய் ஏற்படுவதை முடிந்தவரை தள்ளிப்போட்டு, அது ஒருவரின் வாழ்நாளுக்குப் பிறகே ஏற்படும் நிலையை உருவாக்குவதுதான் இதன் நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
இவை அனைத்தும் மீண்டும் ஒரு முக்கியமான உண்மையை நமக்கு நினைவூட்டுகின்றன. விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மட்டுமல்லாமல், நீண்ட ஆயுளுக்குப் பெயர் பெற்ற 'நீல மண்டல' பகுதிகளில் வசிப்பவர்களும் வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர். ஆரோக்கியமான உணவு, சுறுசுறுப்பான வாழ்க்கை, மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவதும், மகிழ்ச்சியான மனநிலையுடன் இருப்பதும் மூளை முதுமையடையும் வேகத்தைக் குறைக்க உதவுகின்றன.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்தில் நரம்பியல் மற்றும் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றும் மேத்யூ வாக்கரும் இதுகுறித்து மற்றொரு முக்கியமான காரணியைச் சுட்டிக்காட்டுகிறார். 'ஒய் வி ஸ்லீப்' என்ற புகழ்பெற்ற நூலின் ஆசிரியரான அவர், தூக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
"தினமும் உங்கள் மூளையையும் உடலையும் புத்துணர்ச்சியடையச் செய்ய நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் தூக்கம்" என்று அவர் கூறுகிறார். "போதுமான அளவு தூங்கும்போது, மனதின் செயல்பாடுகள் அனைத்தும் வியக்கத்தக்க வகையில் மேம்படுகின்றன. மாறாக, தூக்கம் போதுமானதாக இல்லாவிட்டால், அவை கணிசமாகப் பாதிக்கப்படுகின்றன."
நாம் தூங்கும்போது, மூளையில் உள்ள கழிவுகளை அகற்றும் அமைப்பு செயல்படுகிறது. அப்போது, பீட்டா-அமைலாய்டு, டாவ் போன்ற புரதங்கள் மூளையிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இந்தப் புரதங்கள் அல்சைமர் நோயுடன் தொடர்புடைய முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகின்றன.
தூக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கும் முதுமை மறதி நோய்க்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேராசிரியர் வாக்கரின் கூற்றுப்படி, இந்த மாற்றங்கள் 60 அல்லது 70 வயதில்தான் தொடங்குகின்றன என்பதில்லை; 30 வயதிலேயே ஆரம்பமாகலாம். எனவே, தூக்க முறைகளைக் கண்காணிப்பதன் மூலம் இத்தகைய மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். நடுத்தர வயதிலேயே நோய் ஏற்படும் அபாயத்தைக் கண்டறிந்து, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இது உதவக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
சான் பிரான்சிஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் செயல்பட்டு வரும் 'ஃபானா பயோ' என்ற உயிரித் தொழில்நுட்ப நிறுவனம், தரை அணில்கள் குளிர்கால உறக்கத்தின்போதும், அதிலிருந்து விழித்தெழுந்த பின்னரும் அவற்றின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துத் தரவுகளைச் சேகரித்து வருகிறது.
'டார்பர்' என்று அழைக்கப்படும் மந்தமான உறக்க நிலையில், அணில்களின் உடல் வெப்பநிலை கணிசமாகக் குறைகிறது. அவற்றின் வளர்சிதை மாற்ற விகிதமும் இயல்பான அளவில் வெறும் ஒரு சதவீதமாகச் சுருங்கிவிடுகிறது.
ஆனால், இந்த நிலையில் இருக்கும்போது அணில்களால் நரம்பணுக்களை மீண்டும் உருவாக்கவும், மூளையில் இழந்த நரம்பு இணைப்புகளைப் புதுப்பிக்கவும் முடிகிறது. மனிதர்களும் இதேபோன்ற செயல்முறையைத் தங்கள் உடலில் நிகழ்த்த உதவும் மருந்துகளை உருவாக்குவதே இந்த நிறுவனத்தின் நோக்கம். இதற்காக மனிதர்கள் ஆண்டு முழுவதும் நிலத்தடியில் வாழ வேண்டிய அவசியம் இருக்காது.
மனச்சோர்வுக்குச் சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால், முதுமை மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் லியான் வில்லியம்ஸ், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் மனச்சோர்வுடன் தொடர்புடைய மூளையின் மாற்றங்களைக் கண்டறியும் முறையை உருவாக்கியுள்ளார். இதன் மூலம், அளிக்கப்படும் சிகிச்சை எந்த அளவுக்குப் பலனளிக்கிறது என்பதையும் மதிப்பிட முடியும்.
இந்த அணுகுமுறை, மனச்சோர்வு போன்ற மனநலப் பாதிப்புகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவும். அதேநேரத்தில், ஒவ்வொரு நோயாளிக்கும் அளிக்கப்படும் சிகிச்சையின் முன்னேற்றத்தையும் அளவிட வழிவகுக்கும்.
நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு அறிவியலால் பெரிதும் உதவ முடியும் என்று நம்புபவர்களில் முக்கியமானவர் பிரையன் ஜான்சன். தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த தொழில்முனைவோரான இவர், தனது உயிரியல் வயதைக் குறைக்கும் முயற்சியில் பல மில்லியன் டாலர்களைச் செலவிட்டு வருகிறார்.
தினமும் பலவகையான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது, நாளொன்றுக்கு 19 மணி நேரம் உண்ணாமல் இருப்பது, உடலை வருத்தும் அளவுக்குக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது எனப் பல வழிகளைக் கையாண்டு வருகிறார். இவற்றுடன், சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளாகும் மருத்துவச் சிகிச்சைகளையும் முயற்சித்து, தனது உயிரியல் வயதைப் பின்னோக்கிக் கொண்டுசெல்ல அவர் விரும்புகிறார்.
ஆனால், லோமா லிண்டாவில் நான் சந்தித்த 103 வயதான மில்ட்ரெட் இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார்.
"உணவு விஷயத்தில் நான் கவனமாக இருப்பதுதான். ஆனால், 'இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும், இன்னொன்றையும் செய்ய வேண்டும்; அதே நேரத்தில் இதை மட்டும் தொடவே கூடாது' என்று தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் உறுதியாகக் கூறினார்.
வாழ்க்கையை அளவுக்கு அதிகமாகக் கட்டுப்படுத்திக்கொள்ளாமல், கிடைக்கும் மகிழ்ச்சியையும் அனுபவித்து வாழ வேண்டும் என்பதே அவரது கருத்து. 103 ஆண்டுகால வாழ்க்கை அனுபவம் கொண்ட அவருக்கு, இதைப் பற்றிச் சொல்ல அவருக்கு போதுமான அனுபவம் இருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































