கோவை பெரியார் அறிவுலகம் புத்தக கொள்முதலில் ஊழலா? அதிர்வலைகளை எழுப்பும் பெருமாள் முருகன் குற்றச்சாட்டு

- எழுதியவர், சிவசங்கர். ப
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
நூலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்களின் ஆசிரியர்கள், பதிப்பகங்கள், அவற்றின் விலை மற்றும் உள்ளடக்கங்கள் குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்விகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகத் தமிழக பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
பெரியார் அறிவுலகத்தில் என்ன நடந்தது?
பெரியார் அறிவுலகம் நூலகத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், TNDIPR
கோவை காந்திபுரத்தில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியார் அறிவுலகம் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு ஏக்கர் பரப்பளவில், ஏழு தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டன.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் நூலகத்தைத் திறந்துவைத்தார்.
இந்த நூலகம் அமைக்கப்பட்டதற்கான பெருமை யாருக்குச் சொந்தம் என்பது குறித்து திமுகவுக்கும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே அரசியல் விவாதம் நிலவிவந்தது. இந்த நிலையில்தான் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெருமாள் முருகனின் குற்றச்சாட்டுகள் என்ன?

பட மூலாதாரம், Perumalmurugan/Website
'பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்' என்ற தலைப்பில் பிரபல தமிழ் இணையதளத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் இன்று (நவம்பர் 6 ) கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
நூலகத்தின் நான்காவது தளத்தில் உள்ள தமிழ் நூல்களை ஆய்வு செய்தபோது, ஒரு பதிப்பகத்தின் பெயரில் சுமார் 1,800 நூல்கள் இடம்பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, சூர்யா பாலு என்பவர் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள 'நாலடியார் வாழ்வின் வழிகாட்டி' என்ற 300 பக்க நூலுக்கு 1,445 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிற பதிப்பகங்கள் இதே அளவிலான நூல்களை சுமார் 350 ரூபாய்க்கு விற்பனை செய்வதுடன் ஒப்பிட்டு, இந்த விலை நிர்ணயம் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த நூலில் நாலடியார் என்பவர் ஒரு கவிஞராகவும் தத்துவஞானியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையில், நாலடியார் என்பது சமண முனிவர்கள் இயற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பாகும்.
இதேபோல், 'மதுரைக்காஞ்சி ஓர் இலக்கியப் பயணம்' என்ற நூலில் மதுரைக்காஞ்சியை இயற்றியவர் குறித்துத் தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரைக்காஞ்சியை இயற்றியவர் மாங்குடி மருதனார். ஆனால் குறிப்பிட்ட நூலில் வேறொரு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் நூல்கள் தயாரிக்கப்பட்டனவா?
'பாரதியார் கதைகள்', 'கீழடி செப்பும் வரலாறு', 'தமிழ்நாடு ஒரு பார்வை' உள்ளிட்ட நூல்களிலும் அடிப்படையான வரலாற்றுத் தகவல்கள் தவறாக இடம்பெற்றுள்ளதாகப் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நூல்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.
நூலாசிரியர்களின் பெயர்கள் போலியானவை என்றும், நூல்களில் இடம்பெற்றுள்ள சர்வதேசத் தரப் புத்தக எண்களை (ISBN) இணையத்தில் தேடியபோது கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தப் புத்தகங்கள் எந்த நடைமுறையின் கீழ் தேர்வு செய்யப்பட்டன, எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டன, யார் ஒப்புதல் அளித்தனர் என்பன குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
விஜய் விமர்சனம்
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கு நூல்களைப் பரிந்துரைப்பதற்காக, முந்தைய திமுக ஆட்சியில் 2025ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டதாக விஜய் தெரிவித்துள்ளார்.
அந்த அரசாணையின்படி அமைக்கப்பட்ட நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களுக்கான பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்த பெருமாள் முருகனே, தற்போது நூல் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரியார் பெயரைப் பயன்படுத்தி திமுக ஊழல் செய்வதாகத் தாங்கள் அரசியலுக்கு வந்தபோதே குற்றம்சாட்டியிருந்ததாகக் கூறிய விஜய், தற்போதைய நூல் கொள்முதல் விவகாரம் அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
பெரியார் அறிவுலகத்தைக் கட்டியதாகப் பெருமை பேசும் திமுக தலைமை, அந்த நூலகத்திற்குத் தரமற்ற புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்கியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட நூலகத்திலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வேதனையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
பெரியார் மற்றும் தமிழ் மொழியின் பெயரைப் பயன்படுத்தி ஊழல் செய்ததாகத் திமுக மீது குற்றம்சாட்டிய முதலமைச்சர், இதற்காக அந்தக் கட்சியை வருங்காலத் தலைமுறையினர் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் கூறியது என்ன?
"இந்த விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் காலம் தாழ்த்தாமல், முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ஊழல் செய்தவர்கள் யார் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும்" என்று பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், நூல் கொள்முதல் முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். போலியான நூல்களை அகற்றி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், நூலகக் கட்டுமானப் பணிகளிலும் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், நூல் கொள்முதல் நடைமுறைகள் குறித்து அரசு வெளிப்படையாக விளக்கமளிக்க வேண்டும் என்றும், சிறப்பு புலன் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், போலியான நூல்கள் வாசகர்களிடையே தவறான தகவல்களைப் பரப்பக்கூடும் என்று எச்சரித்துள்ளார். அத்தகைய நூல்களை அனைத்து நூலகங்களிலிருந்தும் அகற்றி எரிக்க வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபட்ட பதிப்பகங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதற்கிடையே, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவின் தலைவராக இருந்த எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், சில அதிகாரிகளும் பதிப்பாளர்களும் இணைந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாகச் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
'புத்தகத்திற்கு ஐந்து மடங்கு அதிக விலை நிர்ணயம்' - பெருமாள் முருகன்

பட மூலாதாரம், Perumalmurugan/Website
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் நூல் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் தனக்குத் தெரியவந்ததாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், நூலகத்தில் அனைத்து நூல்களும் காட்சிப்படுத்தப்படவில்லை என்றும், குறிப்பிட்ட நூல்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் கூறினார்.
"காட்சிப்படுத்தப்பட்டிருந்த நூல்களைப் பார்த்தபோதுதான் அவற்றின் கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது" என்று அவர் தெரிவித்தார்.
நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்தபோது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்தும் பெருமாள் முருகன் விளக்கமளித்தார்.
"நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு குறிப்பிட்ட தலைப்புகள் வழங்கப்பட்டன. அந்தத் தலைப்புகளின் கீழ் வரும் நூல்களின் விவரங்கள் இணையவழியில் அனுப்பப்படும். அவற்றை இணையவழியிலேயே பரிந்துரை செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. குழுவில் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால், நாங்கள் பரிந்துரை செய்யும் நூல்கள் உண்மையில் கொள்முதல் செய்யப்படுகின்றனவா என்பதுகூட எங்களுக்குத் தெரியாது" என்று அவர் கூறினார்.
சர்ச்சைக்குரிய நூல்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டதாகக் கூறுவதற்கான ஆதாரம் என்ன என்று பிபிசி தமிழ் அவரிடம் கேள்வி எழுப்பியது.
அதற்குப் பதிலளித்த அவர், "அந்தப் புத்தகங்களில் உள்ள சில பகுதிகளைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உள்ளீடு செய்து பார்த்தாலே, அவை அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவருகிறது. அந்தப் புத்தகங்களின் மொழிநடையைப் படித்துப் பார்த்தாலும் இதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது" என்று கூறினார்.
புத்தகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
"ஒரு புத்தகத்திற்கு ஒரு பதிப்பகம் வழக்கமாக நிர்ணயிக்கும் விலையைவிட ஐந்து மடங்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை ஊழல் என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?" என்று அவர் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தது என்ன?
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சென்னையில் இன்று (நவம்பர் 6) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், கடந்த திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.
பெரியார் பெயரிலான நூலகத்திலேயே இதுபோன்ற முறைகேடு நடைபெற்றிருப்பது வேதனையளிப்பதாகக் கூறிய அவர், பெருமாள் முருகனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதத்திலேயே நூல்கள் வாங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அப்போதைய கொள்முதல் நடவடிக்கைகள் விசாரிக்கப்படும் என்றார். இந்த முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கான விசாரணை தொடங்கப்படுவதாக அறிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
திமுக கூறியது என்ன?

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் நூல் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு துறைகளில் விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்தது. அப்படியிருக்கும்போது, புத்தகக் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தப்புள்ளியை மட்டும் ஏன் ரத்து செய்யவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
கோவையில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டதற்காக திமுகவுக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதாகக் கூறிய அவர், இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் திமுக மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சட்டரீதியாக எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதைத் துணிச்சலுடன் எதிர்கொள்ள திமுக தயாராக இருப்பதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































